பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு

எனைப் பல் பிறப்பினும் ஈண்டி, தாம் கொண்ட வினைப் பயன் மெய் உறுதல் அஞ்சி, எனைத்தும், கழிப்புழி ஆற்றாமை காண்டும்; அதுவே, குழிப் புழி ஆற்றா குழிக்கு. |
396 |
எல்லா வகைப் பிறப்புக்களிலும் ஈட்டித் தாம் மேற்கொண்ட தீவினையின் விளைவு தம்மேற் சார்தலுக்கு அஞ்சி எவ்வளவு சிறிய தீவினையையும் அநுபவிக்கின்ற விடத்துத் துன்பத்தை அடைகின்றோம் அச்செயல் குழியினின்றும் தோண்டப்பட்ட பூழி அக்குழியை நிரப்ப முடியாதவாறு போலும்.
கருத்து: வினை தம்மா லீட்டப்பட்டதே யாதலின், அதன் விளைவை இயைந்து அநுபவிக்கவேண்டும்.
திரியும், இடிஞ்சிலும், நெய்யும், சார்வு ஆக எரியும், சுடர் ஓர் அனைத்தால்; தெரியுங்கால், சார்வு அற ஒடிப் பிறப்பு அறுக்கும்; அஃதேபோல், நீர் அற, நீர்ச் சார்வு அறும். |
397 |
விளக்கு திரியையும் அகலையும் நெய்யையும் பற்றுக் கோடாகக்கொண்டு அழகாக எரியும்; சார்வுகளின்றேல் எரியாது அது போன்று ஆராயுமிடத்து சார்வாக நின்ற மூவகை வினையும் அற்றுப்போக (அவ்வினையறுதலே) பிறவித் துன்பத்தை நீக்கும் அதைப் போலவே நீர் அற்றுப்போகவே அந்நீரிற் சார்ந்து வாழும்உயிர்களும் இறந்துபோகும்.
கருத்து: வினையறவே பிறப்பறும்.
ஓத நீர் வேலி உலகத்தார், 'அந் நெறி காதலர்' என்பது அறிந்து அல்லால், யாது ஒன்றும்- கானக நாட!-பயிலார்; பயின்றதூஉம் வானகம் ஆகிவிடும். |
398 |
காடுகளையுடைய முல்லை நாடனே தீயதாயினும் பழகிய நெறி வானுலகத்தை யொப்ப இன்பம் பயந்து பின்னர்நீங்குதற்கு அரிதாகி விடுமாதலால் ஒளி பொருந்திய கடலை வேலியாகவுடைய இவ்வுலகத்திலுள்ளவர்கள் தாம் மேற்கொண்டு ஒழுகுகின்ற அந்நெறியை விரும்புகின்றார்கள் என்பதை அறிந்தன்றி யாதொரு நெறியின்கண்ணும் பழகுதலிலர் அறிவுடையார்.
கருத்து: அறிவுடையார் உலகொப்பிய நெறியை மேற்கொண் டொழுகுவார்கள்.
பரந்தவர் கொள்கைமேல், பல் ஆறும் ஓடார், நிரம்பிய காட்சி நினைந்து அறிந்து கொள்க! வரம்பு இல் பெருமை தருமே;-பரம்பூரி என்றும் பதக்கு ஏழ் வரும். |
399 |
பல்வேறு வகைப்பட விரிந்த சமயத்தார் கொள்கைகள்மீது பல நெறிக்கண்ணும் செல்லாதவர்களாகி நன்மை நிரம்பிய கொள்கையை ஆராய்ந்தறிந்து மேற்கொள்க. பரம்படித்த கூலி எக்காலத்தும் பதக்கு நெல்லே உறுதியாக வரும்; (அதுபோல) கடைப்பிடித் தொழுகிய அக்கொள்கையே எல்லையில்லாத பெருமையை உறுதியாகத் தரும்.
கருத்து: ஒரு நெறியை உறுதியாகக் கொண்டொழுகுக.
நாணின்றி ஆகாது பெண்மை நயமிகு ஊணின்றி ஆகா துயிர்வாழ்க்கை - பேணுங்கால் கைத்தின்றி ஆகா கருமங்கள் காரிகையாய் வித்தின்றிச் சம்பிரதம் இல். |
400 |
அழகுடையாய்! பெண்மைக்குணம் நாணின்றி உண்டாகாது; காப்பாற்றுமிடத்து நலம் மிகுந்த உணவு இல்லாது உயிர் வாழ்ந்திருத்தல் முடியாது; செயல்கள் கைப்பொருள் இல்லாது முடிதல் இல்லை; விதையின்றி விளைவும்இல்லை.
கருத்து: பெண்களுக்கு நாண் வேண்டும் என்றது இது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 75 | 76 | 77 | 78 | 79 | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, இலக்கியங்கள், தாம், பழமொழி, நீர், சார்வு, நானூறு, கீழ்க்கணக்கு, பதினெண், பதக்கு, நிரம்பிய, இல்லாது, வரும், நெறியை, நாணின்றி, நெறி, துன்பத்தை, அஞ்சி, எரியும், சங்க, அறிந்து, அறிவுடையார்