பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு
பெரு மலை நாட!-பிறர் அறியலாகா அரு மறையை ஆன்றோரே காப்பர்;-அரு மறையை நெஞ்சில் சிறியார்க்கு உரைத்தல், பனையின்மேல் பஞ்சி வைத்து எஃகிவிட்டற்று. |
181 |
பெரிய மலைநாட்டை உடையவனே! பிறர் அறியக்கூடாத அரிய இரகசியத்தை நிறைந்த அறிவுடையவர்களே வெளியிடாமல் காப்பார்கள் அரிய இரகசியத்தை நெஞ்சாற் சிறுமைப் பட்டார்க்குக் கூறுதல் பனையின் மீது பஞ்சினை வைத்து கொட்டினாற் போலாம்.
கருத்து: அருமறையை அறிவுடையோரிடத்துக் கூறுக.அல்லாரிடத்துக் கூறற்க.
விளிந்தாரே போலப் பிறர் ஆகி நிற்கும் முறிந்தாரைத் தஞ்சம் மொழியலோ வேண்டா;- அளிந்தார்கண் ஆயினும், ஆராயான் ஆகித் தெளிந்தான் விரைந்து கெடும். |
182 |
தம்மாட்டு அன்புடையாரிடத்தாயினும் ஆராய்தல் இலனாகித் தெளிந்தவன் அழிந்து விடுவான் எப்பொழுதும் வெகுண்டாரே போல இருந்து அன்பின்மையின்வேறாகி நிற்கும் ஈரமற்றாரை (தேறவேண்டாம் என்று)உறுதியாகச் சொல்லவேண்டுவதில்லை.
கருத்து: தம்மாட்டு அன்புடையாரிடத்தே ஆராயாது தம் மறையை வெளியிட்டார் கெடுவர் என்றால்,பிறரை நம்பலாகாது என்பது சொல்லவேண்டா.
20. தெரிந்து தெளிதல்
ஆஅம் எனக்கு எளிது என்று உலகம் ஆண்டவன், மேஎந் துணை அறியான், மிக்கு நீர் பெய்து, இழந்தான்;- தோஒம் உடைய தொடங்குவார்க்கு இல்லையே, தா அம் தர வாரா நோய். |
183 |
உலகத்தினை அரசுசெய்த மாவலி தன்னோடு பொருந்தியிருக்கும் அமைச்சன் கூறியவற்றை அறியாதவனாய் மூவடி நிலம் கொடுப்பது எனக்கு எளிய செயலாகும் என்று சொல்லி செருக்கின்கண் மிக்கு தானமாக நீர்வார்த்துக் கொடுத்து உலகமெல்லாம் இழந்தான். (ஆதலால்) குற்றமுடைய காரியங்களைத் தொடங்குகின்றவர்களுக்கு தாமே தமக்குத் தேடவாராத துன்பங்கள் இல.
கருத்து: குற்றமுள்ள காரியத்தைச் செய்யத் தொடங்குவார் தாமே தமக்குத் துன்பங்களை விளைவித்துக் கொள்வாராவர்.
நற்பால கற்றாரும் நாடாது சொல்லுவர் இற்பாலர் அல்லார் இயல்பு இன்மை நோவது என்?- கற்பால் கலங்கு அருவி நாட!-மற்று யாரானும் சொல் சோரா தாரோ இலர். |
184 |
மலைகளிடத்து விளங்கிய அருவிகள் பாயும் மலை நாடனே! நல்ல குடியின்கட் பிறந்து நல்லனவற்றைக் கற்றாரும் (சில நேரங்களில்) ஆராய்தலிலராய்ப் பிழைபடச் சொல்லுவார்கள் நல்ல - குடியின்கட் பிறவாதார் (சொற்களிலுள்ள) இன்னாமையும் பிழைகளுமாகிய இயல்பின்மையை நினைந்து வருந்துவது எதுபற்றி? யாவரே யாயினும் சொல்லின்கண் சோர்வுபடாதார்இலர்.
கருத்து: யாவர் மாட்டும் சொற்சோர்வு உண்மையான் கருத்து ஒன்றனையே நோக்குக.
பூந்தண் புனல் புகார்ப் பூமி குறி காண்டற்கு வேந்தர் வினாயினான், மாந்தரை - சான்றவன், கொண்டதனை நாணி, மறைத்தலால்,-தன் கண்ணின் கண்டதூஉம் எண்ணிச் சொலல்! |
185 |
அழகிய குளிர்ந்த நீரை உடைய புகாரின்கண் உள்ள பூமியது அளவை அறியும்பொருட்டு சோழவரசன் மக்களைக் கேட்டான் அறிவு சான்ற ஒருவன் ஒருவன் களவினால் ஆண்டுவருகின்ற நிலத்தை எடுத்துக் கூற நாணி அதனை மறைத்து இத்துணையென்று வரையறுத்துக் கூறினானாதலால் தன் கண்ணாற் கண்டு தெளிய அறிந்ததனையும் ஆராய்ந்து சொல்லுக.
கருத்து: கண்ணாற் கண்டவற்றையும் அவற்றது நன்மை தீமை கூறுபாடு அறிந்தே கூறுக.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 35 | 36 | 37 | 38 | 39 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, இலக்கியங்கள், மறையை, பழமொழி, நானூறு, பதினெண், பிறர், கீழ்க்கணக்கு, தாமே, கற்றாரும், தமக்குத், நல்ல, ஒருவன், கண்ணாற், உடைய, நாணி, குடியின்கட், நிற்கும், அரிய, வைத்து, சங்க, இரகசியத்தை, கூறுக, மிக்கு, எனக்கு, தம்மாட்டு, இழந்தான்