பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு
உழை இருந்து, நுண்ணிய கூறி, கருமம், புரை இருந்தவாறு அறியான், புக்கான் விளிதல்- நிரை இருந்து மாண்ட அரங்கினுள், வட்டு, கரை இருந்தார்க்கு எளிய, போர். |
176 |
வரிசையாக இருந்து மாட்சிமைப்பட்ட அரங்கின்கண் அரங்கின்கண் பொராதே பக்கத்திருந்தார்க்கு எளியதாகத் தோன்றும் வட்டுப்போர் பக்கத்தேயிருந்து நுட்பமான காரியங்களை ஆராய்ந்து கூறினும் நுட்ப உணர்வு இல்லாதும் கருமத்தின்கண் குற்றம் இருந்த நெறியை அறிவதும் செய்யானாய் கருமத்தைச் செய்யப்புகுந்தவன் அழிவினை அடைவான்.
கருத்து: கருமம் செய்வார்க்கு நுண்ணுணர்வு மிகுதியும்வேண்டப்படுவ தொன்று.
19. மறை பிறர் அறியாமை
சுற்றத்தார், நட்டார், எனச் சென்று, ஒருவரை அற்றத்தால் தேறார், அறிவுடையார்;-கொற்றப் புள் ஊர்ந்து, உலகம் தாவிய அண்ணலேஆயினும், சீர்ந்தது செய்யாதார் இல். |
177 |
வெற்றியையுடைய கருடன்மீது ஏறி வீற்றிருந்து உலகத்தைத் தாவியளந்த பெருமைபொருந்திய திருமாலே யாயினும் தனக்கு ஊதியந்தரும் சீரியதொன்றைச் செய்யாதொழிய விடுவார் இல்லை (ஆகையால்) அறிவிற் சிறந்தோர் உறவினர் மறைத்துச் செய்யும் காரியத்தின்கண் அவருள் ஒருவரையும்தெளிதல் இலர்.
கருத்து:மறைத்துச் செய்யும் காரியத்தின்கண் யாவராயினும்நம்புதல் கூடாது.
வெள்ள மாண்பு எல்லாம் உடைய தமர் இருப்ப, உள்ள மாண்பு இல்லா ஒருவரைத் - தெள்ளி, மறைக்கண் பிரித்து, அவரை மாற்றாது ஒழிதல் பறைக்கண் கடிப்பு இடுமாறு. |
178 |
வெள்ளத்தைப் போன்று அளத்தற்கரிய மாட்சிமைப்பட்ட குணங்களை உடைய உறவினர்களை இருப்பக்கொண்டு உள்ளத்தின்கண் மாட்சிமையில்லாத ஒருவரை ஆராய்ந்து சூழ்ச்சிக் கண்ணின்றும் நீக்கி அவரை விலக்காது விடுதல் பறையின்கண் குறுந்தடியையிட்டு அடித்ததோ டொக்கும்.
கருத்து: சூழ்ச்சியின்கண் உள்ளம் மாட்சிமைப்பட்டாரைச் சேர்த்துக் கொள்க.அஃதிலாரை விலக்குக.
அன்பு அறிந்தபின் அல்லால், யார் யார்க்கும், தம் மறையை முன் பிறர்க்கு ஓடி மொழியற்க! - தின்குறுவான் கொல்வாங்குக் கொன்றபின் அல்லது, உயக் கொண்டு, புல்வாய் வழிப்படுவார் இல். |
179 |
தின்னும்பொருட்டு கொல்லுகின்றபடியே கொன்ற பின்னர் அல்லது தப்பிப்போன பின்னர் மானினது தசையை அடுதற்குரிய நெறியின்கண் நிற்றல் இலர் (அதுபோல) தம்மாட்டு அவர் பூண்ட அன்பு அறிந்தபின்னரன்றி யாவரே யாயினும் தமது சூழ்ச்சியை பிறரிடம் முற்பட்டுஓடிச் சொல்லற்க.
கருத்து: அன்புடையாரை அறிந்தே இரகசியத்தைக் கூறுக.
நயவர நட்டு ஒழுகுவாரும் தாம், கேட்டது உயவாது ஒழிவார் ஒருவரும் இல்லை;- புயல் அமை கூந்தல் பொலந்தொடீஇ!-சான்றோர் கயவர்க்கு உரையார், மறை. |
180 |
மேகம் போன்றமைந்த கூந்தலையும் பொன்னாலாகிய தொடியையும் உடையாய்!; அன்போடு பொருந்தத் தம்மோடு நட்புப் பூண்டவர்களும் தாம் கேட்டறிந்த மறையை பிறரிடம் கூறி ஆராயாது நீக்குவார் ஒருவரும் இல்லை (என்றாலும்) அறிஞர்கள் கீழ்மக்கட்கு இரகசியத்தை உரைத்தலிலர்.
கருத்து:கீழ்மக்களிடம் இரகசியத்தை உரைத்தலாகாது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 34 | 35 | 36 | 37 | 38 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, இலக்கியங்கள், இருந்து, பழமொழி, இல்லை, பதினெண், கீழ்க்கணக்கு, நானூறு, மறையை, அவரை, உடைய, அல்லது, அன்பு, பின்னர், இரகசியத்தை, ஒருவரும், தாம், பிறரிடம், மாண்பு, செய்யும், அரங்கின்கண், மாட்சிமைப்பட்ட, கருமம், கூறி, ஆராய்ந்து, ஒருவரை, காரியத்தின்கண், சங்க, மறைத்துச், யாயினும், இலர்