பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு
தெற்ற அறிவுடையார்க்கு அல்லால், திறன் இல்லா முற்றலை நாடிக் கருமம் செய வையார் கற்று ஒன்று அறிந்து, கசடு அற்ற காலையும், மற்றதன்பால் தேம்பல் நன்று. |
171 |
தெளிவாக அறிந்த அறிவுடையாரைத் தேடிவைப்பதல்லாமல் திறமையில்லாத முதிர்ந்தவர்களை ஆராய்ந்து செயலைச் செய்ய வைக்க மாட்டார்கள். (காரியம் முடியவேண்டுமென்ற கருத்துடையார்) ஒரு பொருளைக் கற்றறிந்து கல்வியின்கண் குற்றமில்லாது ஒருவர் விளங்கிய இடத்தும் குணமில்லையாயின் அவரிடத்துக் கொண்ட நட்பு மெலிதலே நல்லது.
கருத்து:காரியம் முடியவேண்டுமென்று நினைப்பவர்கள் சிறந்தஅறிவு பெற்றவர்களையே அதனைச் செய்ய நிறுத்துதல்வேண்டும்.
உற்றான், உறாஅன், எனல் வேண்டா; ஒண் பொருளைக் கற்றானை நோக்கியே கைவிடுக! கற்றான் கிழவன் உரை கேட்கும்; கேளான் எனினும்,- இழவு அன்று, எருது உண்ட உப்பு. |
172 |
தமக்கு உறவினன் உறவல்லாதவன் என்று ஆராய வேண்டுவதில்லை காரியம் செய்யும் பொருட்டுக் கொடுக்கும் ஒள்ளிய பொருளைக் கல்வியறிவாற் சிறந்தானை ஆராய்ந்து அவனிடம் கொடுக்க கல்வியறிவாற் சிறந்தான் தனக்குப் பொருள் கொடுத்துதவியவன் சொற்களைக் கேட்டு நடப்பான் கேளா தொழிவா னாயினும் காளை உண்ட உப்பு நட்டமாகாமைபோலப் பயன்கொடா தொழியான்என்பதாம்.
கருத்து: நமக்கு முடியவேண்டிய செயலையும் அதற்காக நாம் கொடுக்க இருக்கும் பொருளையும்கல்வியறிவு உடையானைத் தேடிக் கொடுக்கவேண்டும்என்பதாம்.
கட்டு உடைத்தாகக் கருமம் செய வைப்பின், பட்டு உண்டு ஆங்கு ஓடும் பரியாரை வையற்க!- தொட்டாரை ஒட்டாப் பொருள் இல்லை; இல்லையே, அட்டாரை ஒட்டாக் கலம். |
173 |
கையால் தொட்டவர்களை ஒட்டாத பொருள்கள் இல்லை சமைத்தாரைப் பொருந்திப் பயன்படாத உணவுப்பொருளுமில்லை. (ஆதலால்) பாதுகாவலுடையதாகுமாறு செயலைச் செய்ய ஒருவனை நிறுத்த நினைப்பின் அச்செயலின்கண் பொருந்தி அதனிடத்துள்ள பயன் அனைத்தையும் கைக்கொண்டு உடனே விட்டு நீங்குகின்ற காரியத்தைச் செய்ய வையாதொழிக.
கருத்து: காரியத்தால் உளதாகும் பயனைக் கைக்கொள்வானை ஒருகாரியத்தையும் செய்ய நியமித்தல் ஆகாது.
நாட்டிக் கொளப்பட்டார் நன்மை இலர் ஆயின், 'காட்டி, களைதும்' என வேண்டா;-ஓட்டி இடம்பட்ட கண்ணாய்!-இறக்கும் மை ஆட்டை உடம்படுத்து வேள்வு உண்டார் இல். |
174 |
குழையை அலைத்து (விளங்கும்) அகன்ற கண்களை உடையாய்! இறக்கும் நிலையிலுள்ள காராட்டை உடன்பாடு பெறச்செய்து அதன் சம்மதத்தின்பேரில் குருதிகொண்டார் உலகத்தில்லை. (ஆகையால்) தம்மாலே தங்காரியத்தின் பொருட்டு நாட்டிக் கொள்ளப்பட்டவர்கள் நன்மையைச் செய்தல் இலராயின் அவரிடத்து அதனை எடுத்துக்காட்டி அவர் உடன்பாடுபெற்றுச் செயலினின்றும் நீக்குவோம் என்று நினைக்கவேண்டா.
கருத்து: தம்மால் நிலைநாட்டப்பட்டார் தமக்கு நன்மை செய்யாராயின் அவரிடம் சொல்லாதே அவரைநீக்குதல் வேண்டும்.
அகம் தூய்மை இல்லாரை ஆற்றப் பெருக்கி, இகந்துழி விட்டிருப்பின், அஃதால்-இகந்து, நினைத்து தெரியானாய், நீள் கயத்துள், ஆமை, 'நனைந்து வா' என்று விடல். |
175 |
மனத்தின்கண் தூய்மையில்லாதவர்களை மிகவும் பெருக்கிக் கொண்டு சேய்த்தாய இடத்தே தங்காரியம் முடிக்கும்பொருட்டு அவரைச் செல்லவிட்டு இருப்பின் அச்செயல் மனதின்கண் ஆராய்ந்து அறியானாய் (யாமையைப் பிடித்த ஒருவன்) அந்த யாமையை நீண்ட குளத்திற்குப்போய் நீரால் நனையப்பெற்றுத் திரும்பிவா என்று சொல்லிவிடுதலை ஒக்கும்.
கருத்து: மனத்தூய்மை யில்லாதாரைச் சேய இடத்துள்ள கருமத்தை முடிக்கஅனுப்புதல் கூடாது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 33 | 34 | 35 | 36 | 37 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, செய்ய, கருத்து, இலக்கியங்கள், பழமொழி, ஆராய்ந்து, காரியம், பொருளைக், நானூறு, கீழ்க்கணக்கு, பதினெண், பொருள், கொடுக்க, இல்லை, நாட்டிக், கல்வியறிவாற், இறக்கும், நன்மை, உப்பு, சங்க, செயலைச், வேண்டா, உண்ட, கருமம், தமக்கு