பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு
அன்பின் நெகிழ வழிபட்டுக் கொள்ளாது, நின்ற பொழுதின் முடிவித்துக் கொள்வது- கன்று விட்டு ஆக் கறக்கும் போழ்தில் கறவானாய், அம்பு விட்டு ஆக் கறக்குமாறு. |
166 |
தாம்பூண்ட அன்பினால் ஒருவன் நெகிழுமாறு அவனை வழிபட்டுத் தமது செயலை முடித்துக்கொள்ளாது நினைத்த அப்பொழுதிலேயே கடியன கூறிமுடித்துக்கொள்ளுதல் கன்றினைச் செலுத்தி ஆவினைக் கறக்க இருக்கும்போது அங்ஙனங் கறவாதவனாகி அம்பினைச் செலுத்திஆவினைக் கறக்க நினைக்குமாற்றை ஒக்கும்.
கருத்து: தமது செயலைச் செய்வோரிடத்தில் அன்பாகவும் விரைவின்றியு மிருந்து செயலை முடித்துக்கொள்க.
மடியை வியங்கொள்ளின், மற்றைக் கருமம் முடியாத வாறே முயலும்;-கொடி அன்னாய்!- பாரித்தவனை நலிந்து தொழில் கோடல், மூரி உழுது விடல். |
167 |
கொடிபோன்ற இடையை உடையாய்! சோம்பலுடையானை ஒருசெயலைச் செய்ய ஏவின் அவனைச் செய்ய ஏவிய அச்செயல் முடியாத விதமாக முயற்சி செய்வான் சோம்பலுடையான் சோம்பலாற் பெருத்தவனைத் துன்புறுத்திக் காரியத்தைக் கொள்ளுதல் கிழ எருதினைக் கொண்டுநிலத்தை உழுது பயன்கோடல் ஒக்கும்.
கருத்து: சோம்பலுடையானைக் கொண்டு ஒரு காரியம் செய்வித்தலாகாது;நலிந்து செய்விப்பினும் அதனால் பயன் உண்டாகாது.
ஆணியாக் கொண்ட கருமம், பதிற்றாண்டும் பாணித்தே செய்ய, வியங்கொள்ளின் - காணி பயவாமல் செய்வார் ஆர்? தம் சாகாடேனும் உயவாமல் சேறலோ இல். |
168 |
தம்முடைய சகடமேயாயினும் உயவு நெய் இடாவிடில் செல்லுதல் இல்லை.(அதுபோல) ஆணியைப்போல உறுதியாகத் தாம் கொண்ட செயலை ஒன்றும் கொடாமல் சிலரை ஏவினால் பத்து ஆண்டாயினும் காரியத்தின்கண் விரைவின்றியே செய்வார்கள் காணியளவு பொருளாயினும் பயனாகப் பெறாமல் செயலைச் செய்வார் யார் உளர்?இல்லை.
கருத்து: பொருளுதவி செய்து செயலைச் செய்வித்துக் கொள்க.
விட்டுக் கருமம் செயவைத்த பின்னரும், முட்டாது அவரை வியங்கொளல் வேண்டுமால் தொட்டக்கால் மாழ்கும் தளிர்மேலே நிற்பினும், தட்டாமல் செல்லாது, உளி. |
169 |
தொட்டக்கால் மாழ்கும் தளிர்மேலே நிற்பினும் உளியானது தன்னை வேறொருவன் தட்டாமல் அத்தளிரை அறுத்துச் செல்லாது. (அதுபோல) காரியத்தின் பொறுப்பை அவர்களிடத்தே விட்டு அவர்களையே செய்யுமாறு செய்த பின்னரும் இடையீடின்றி அவரைஏவி ஆராய்தல் வேண்டும்.
கருத்து: நமது காரியத்தைப் பொறுப்பாக ஏற்றுக்கொண்டு ஒருவர் செய்வாரேயாயினும் இத்துடன் பொறை கழிந்தது என்றிராது அவரைஅடிக்கடி ஊக்கப்படுத்துதல் வேண்டும்.
காட்டிக் கருமம் கயவர்மேல் வைத்து, 'அவர் ஆக்குவர் ஆற்ற எமக்கு!' என்று அமர்ந்து இருத்தல்,- மாப்புரை நோக்கின் மயில் அன்னாய்!-பூசையைக் காப்பிடுதல், புன் மீன் தலை. |
170 |
மாவடுவை ஒத்த கண்ணையும் மயிலையொத்த சாயலையுமுடையாய்! செயலினைக் காட்டிக்கொடுத்து கீழ்மக்கள்மேல் காரியத்தைச் செய்துமுடிக்கும் பொறுப்பினை வைத்தவர் எமக்கு மிகவும் செவ்வையாகக் காரியத்தைச் செய்து தருவர் என்று உறுதிசெய்து வாளா இருத்தல் புல்லிய மீன்கள் (உலர்கின்ற) இடத்தில் பூனையைக் காவலாக வைப்பதனோ டொக்கும்.
கருத்து: தம்முடைய காரியத்தைக் கீழ்மக்களிடம் ஒப்பித்திருப்பவர் ஒருநன்மையும் அடையார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 32 | 33 | 34 | 35 | 36 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, கருமம், இலக்கியங்கள், நானூறு, பழமொழி, செய்ய, செயலை, செயலைச், பதினெண், கீழ்க்கணக்கு, விட்டு, மாழ்கும், தொட்டக்கால், செய்து, பின்னரும், தளிர்மேலே, தட்டாமல், வேண்டும், எமக்கு, அதுபோல, செல்லாது, இருத்தல், காரியத்தைச், நிற்பினும், உழுது, ஒக்கும், வியங்கொள்ளின், கறக்க, தமது, சங்க, முடியாத, அன்னாய், செய்வார், தம்முடைய, கொண்ட, காரியத்தைக், நலிந்து, இல்லை