பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு
முடிந்ததற்கு இல்லை, முயற்சி; முடியாது ஒடிந்ததற்கு இல்லை, பெருக்கம்; வடிந்து அற வல்லதற்கு இல்லை, வருத்தம்; உலகினுள் இல்லதற்கு இல்லை, பெயர். |
161 |
முடிந்த செயலுக்கு முயற்சி செய்ய வேண்டுவதில்லை முடிவுறாது இடையே முறிந்த செயலுக்கு ஆக்கமில்லை (அவைபோல) குற்றமறச் செய்யவல்லதற்குச் செய்யும்பொழுது துன்பம் ஏற்படுதல் இல்லை உலகில் இல்லாத பொருள்களுக்குப் பெயர்கள் இல்லையாதலால்.
கருத்து: தம்மால் முடியுஞ் செயலை யாவருஞ் செய்க.அதனால் துன்பம் உண்டாகாது.
18. கருமம் முடித்தல்
செந்நீரார் போன்று சிதைய மதிப்பார்க்கும், பொய்ந்நீரார் போன்று பொருளை முடிப்பார்க்கும், அந் நீர் அவரவர்க்குத் தக்காங்கு ஒழுகுபவே- வெந் நீரில் தண்ணீர் தெளித்து. |
162 |
செம்மையான நீர்மையுடையாரைப் போன்று தோன்றி உள்ளத்தில் தங்காரியம் சிதையுமாறு நினைக்கின்றவர்களுக்கும் பொய்ம்மையான நீர்மையுடையாரைப் போன்று தோன்றி தாம் நினைத்த செயலை முடிக்கின்ற உள்ள முடையார்க்கும் மிக்க வெம்மையான நீரில் குளிர்ந்த நீரை அளாவிப் பயன்படுத்திக் கொள்ளல்போல அந்த இயல்பினை உடைய அவரவர்களுக்குத் தகுந்த வண்ணம் ஒழுகுவார்கள் காரியத்திற் கண்ணுடையார்.
கருத்து: காரியத்திற் கண்ணுடையார் நல்லவர்களுக்கு நல்லாரைப் போலவும், தீயார்களுக்குத் தீயாரைப் போலவுமிருந்து தங் கருத்தைநிறைவேற்றுவார்.
தாம் ஆற்றகில்லாதார், தாம் சாரப் பட்டாரைத் தீ மாற்றத்தாலே பகைப்படுத்திட்டு, ஏமாப்ப முன் ஓட்டுக்கொண்டு, முரண் அஞ்சிப் போவாரே- உண் ஓட்டு அகல் உடைப்பார். |
163 |
தாம் தம்மைச் செவ்வை செய்துகொள்ள முடியாதார் பாதுகாவலாகத் தம்மால் அடையப்பட்டாரை தீயசொற்களால் பகைமையை உண்டாக்கி எதிர்த்து நிற்கவும் பயந்து சேமமாக முன் ஓடுதலை மேற்கொண்டு செல்பவர்கள் தாம் உண்கின்ற ஓடாகிய உண்கலத்தை உடைப்பாரோ டொப்பர்.
கருத்து:தம்மால் தம்மைப் பாதுகாத்துக்கொள்ளஇயலாதார் தமக்குச் சார்பானவரைச் சினந்து கூறாதொழிக.
புரையக் கலந்தவர் கண்ணும் கருமம் உரையின் வழுவாது உவப்பவே கொள்க!- வரையக நாட!-விரைவிற், கருமம் சிதையும்; இடர் ஆய்விடும். |
164 |
மலைமேலுண்டாகிய நாடனே! உள்ளம் ஒப்ப நட்புக்கொண்டவரிடத்தும் அவரால் உளவாகும் செயலை கூறுஞ் சொற்களில் வழுவாது அவர்கள் மனம் மகிழும்படி செயலை முடித்துக்கொள்க.விரைவில் - தமக்கு வேண்டிய பொழுதே அச் செயலைக் கொள்ள விரைவாயாயின் செயலும் முடிவுறாது இடையிலே அழிந்தொழியும் அங்ஙனம் அழிதலால் தமக்குத் துன்பம் உண்டாகும்.
கருத்து:மேற்கொண்ட செயலை அமைதியாகச் செய்க.இல்லையாயின் மிகுந்ததுன்பங்களை அடைவாய்.
'நிலைஇய பண்பு இலார் நேர் அல்லர்' என்று, ஒன்று உளைய உரையாது, உறுதியே கொள்க!- வளை ஒலி ஐம்பாலாய்!-வாங்கியிருந்து, தொளை எண்ணார், அப்பம் தின்பார். |
165 |
சுருண்டு தழைத்த ஐந்து பகுதியாகிய கூந்தலையுடையாய் அப்பத்தை உண்ண விரும்பினவர்கள் அதைக் கையில் வாங்கிய பின்னர்த் தொளைகள் இருக்கின்றன வென்று குற்றங்கூறி அவற்றை நீக்குவாரில்லை நிலைபெற்ற பண்பில்லாதவர் நடுவு நிலைமையை உடையவர் அல்லர் என்று மனம் வருந்தத்தக்க ஒரு சொல்லும் சொல்லாது.உறுதியே கொள்க - அவரிடத்தில் தாம் கொள்ள நினைத்த உறுதியாகிய பயனையே கொள்க.
கருத்து: நமது காரியத்தை முடிக்கவல்லாரது குறைகளைக் கூறித் திரிய வேண்டாம்.காரியம் முடியுமாற்றையே நோக்குக.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 31 | 32 | 33 | 34 | 35 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, தாம், இல்லை, செயலை, கருத்து, இலக்கியங்கள், போன்று, கொள்க, தம்மால், பழமொழி, துன்பம், கருமம், நானூறு, கீழ்க்கணக்கு, பதினெண், செயலுக்கு, வழுவாது, முன், மனம், கொள்ள, உறுதியே, அல்லர், கண்ணுடையார், காரியத்திற், நீரில், முயற்சி, சங்க, நீர்மையுடையாரைப், தோன்றி, நினைத்த, முடிவுறாது, செய்க