பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு
பெரிய நட்டார்க்கும் பகைவர்க்கும், சென்று, திரிவு இன்றித் தீர்ந்தார்போல் சொல்லி, அவருள் ஒருவரோடு ஒன்றி ஒருப்படா தாரே, இரு தலைக் கொள்ளி என்பார். |
141 |
தம்மிடத்தில் மிகுதியாக நட்புப் பூண்டவர்க்கும் அவரது பகைவர்க்கும் அவரிடத்திற் சென்று மனவேறுபாடு இன்றி மிகவும் நட்டார்போன்று நின்று அவர்களது பகைமையை வளர்க்கும் சொற்களைச் சொல்லி அவர்களுள் ஒருவரோடு மனம் பொருந்த இருந்து உறுதியாயின செய்ய மனமியையாதார் இருகடையாலும் சுடுகின்றகட்டை என்று சொல்லப்படுவார்.
கருத்து: ஏற்பன கூறி இருவரது பகைமையைவளர்த்தல் அறிவிலாரது இயல்பு.
16. பிறர் இயல்பைக் குறிப்பால் அறிதல்
பேர் உலையுள் பெய்த அரிசியை வெந்தமை ஓர் மூழையாலே உணர்ந்தாங்கு, யார்கண்ணும் கண்டதனால் காண்டலே வேண்டுமாம்; யார்கண்ணும் கண்டது காரணமாம் ஆறு. |
142 |
யாவரிடத்தும் அறியப்பட்ட குணமே அறியப்படாத பிறவற்றையும் அறிதற்குரிய வழியாம் (ஆதலால்) கொதிக்கின்ற பெரிய உலையுள் இட்ட அரிசியை வெந்த விதத்தை ஓர் அகப்பைச் சோற்றாலே அறிந்ததைப்போல யாரிடத்தும் அறியப்பட்ட செயல் ஒன்றுகொண்டே குணம்
கருத்து: ஒருவருடைய செயல் கொண்டே அவரது குணம்,ஒழுக்கம் முதலியவற்றை அறியவேண்டும்.
'யாம் தீய செய்த மலை மறைத்தது' என்று எண்ணி, தாம் தீயார் தம் தீமை தேற்றாராய் ;-ஆம்பல் மண இல் கமழும் மலி திரைச் சேர்ப்ப! கணையிலும் கூரியவாம் கண். |
143 |
ஆம்பல்பூக்கள் மணமனையைப்போல் நறுநாற்றம் கமழுகின்ற மிக்க அலைகளை உடைய கடல்நாடனே! நாம் செய்த தீயசெயல்களை மலையானது வெளிக்காட்டாது மறைத்தது என்று நினைத்து தீயசெயல்களையுடைய அவர்கள் தாம் செய்யும் தம் தீய செயல்களினின்றும் தெளிதல் இலர் மனத்து நிகழ்ச்சியை முகத்தின் வாயிலாக மிகவும் கூர்மையாகக் கண்கள் அறிந்துகொள்ளலின் அவைஅம்பினும் கூர்மையுடையனவாம்.
கருத்து: பிறரது உள்ள நிகழ்ச்சியை அறிவதற்குக் கண்களே சிறந்த கருவிகளாம்.
வெள்ளம் வருங்காலை ஈரம்பட்டு; அஃதேபோல், கள்ளம் உடையாரைக் கண்டே அறியலாம்;- ஒள் அமர்க் கண்ணாய்!-ஒளிப்பினும், உள்ளம் படர்ந்ததே கூறும், முகம். |
144 |
ஒளிபொருந்திய கண்ணை உடையாய்! வெள்ளம் வருகின்ற காலத்தில் ஈரம் பொருந்திய மணலைப்போல வஞ்சனையான எண்ணம் உடையாரை மனத்தை முகங் காட்டுதலின் அதனைக்கொண்டே அறிந்துகொள்ளலாம் தங்கருத்தை வெளித்தோன்றாமல் ஒருவர் மறைப்பினும் முகமானது அவர் மனத்தில் உள்ளதையே வெளிப்படுக்குமாகலான்.
கருத்து:மறைப்பினும் உள்ளத்தில் உள்ளவாறே முகம்காட்டு மென்பதாம்.
நோக்கி அறிகல்லாத் தம் உறுப்பு, கண்ணாடி நோக்கி, அறிய அதுவேபோல் - நோக்கி, முகன் அறிவார் முன்னம் அறிய; அதுவே, மகன் அறிவு தந்தை அறிவு. |
145 |
தம் கண்ணால் நோக்கி அறியமுடியாத தமது உறுப்பாகிய முகத்தை கண்ணாடியில் பார்த்துத் தெரிந்துகொள்வர் அதேபோல் நோக்கி ஒருவன் முகத்தை அறிகின்றவர்கள் காணமுடியாத அவனது உட்கருத்தை அறிவார்கள் உள்ளத்தின் கருத்தை அவர் முகம் நோக்கி அறிதல் தந்தையினது அறிவை அவன் மகனது அறிவு நோக்கி அறிதல் போலும்.
கருத்து: முகத்தால் உள்ளக் கருத்துஅறியப்படும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 27 | 28 | 29 | 30 | 31 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, நோக்கி, கருத்து, இலக்கியங்கள், பழமொழி, அறிதல், அறிவு, கீழ்க்கணக்கு, நானூறு, பதினெண், நிகழ்ச்சியை, தாம், மறைத்தது, செய்த, அவர், அறிய, முகத்தை, குணம், மறைப்பினும், முகம், வெள்ளம், அரிசியை, சென்று, சொல்லி, பகைவர்க்கும், பெரிய, சங்க, ஒருவரோடு, அவரது, அறியப்பட்ட, யார்கண்ணும், உலையுள், மிகவும், செயல்