பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு

'எய்ப்புழி வைப்பாம்' எனப் போற்றப் பட்டவர் உற்றுழி ஒன்றுக்கு உதவலர்- பைத்தொடீஇ! அச்சு இடையிட்டுத் திரியின், அது அன்றோ, மச்சு ஏற்றி, ஏணி களைவு. |
136 |
பசுமையான பொன் வளையலை உடையாய்! தளர்வு வந்த இடத்து வைத்த பெருநிதியை ஒப்ப உதவி செய்வர் எனக் கருதி நம்மால் விரும்பி நட்புக்கொள்ளப்பட்டவர் நமக்கு ஓர் இடையூறு வந்துற்ற விடத்து ஒரு சிறிதும் உதவிசெய்யாதவராகி அச்சம் காரணமாக மறுத்தொழுகின் அச் செய்கை ஒருவனை மச்சின்மீது ஏற்றி ஏணி நீக்குதலை யொக்கும்அல்லவா!
கருத்து: தம்மையே அடைக்கலமாக நினைத்து அடைந்தவர் ஒரு தீதுற்றால் தமக்கு இறுதி பயப்பினும் அவர்க்கு முன்னின்று உதவுதல்வேண்டும்.
பாப்புக் கொடியாற்குப் பால்மேனியான் போலத் தாக்கி அமருள் தலைப்பெய்யார், போக்கி, வழியராய் நட்டார்க்கு மா தவம் செய்வாரே- கழி விழாத் தோள் ஏற்றுவார். |
137 |
பாம்புக் கொடியை உடைய துரியோதனனுக்கு போர் ஏற்பட்டவுடன் அதற்குதவாது சென்ற பால்போன்ற உடம்பினையுடைய பலராமனைப் போல வழி வழியாகத் தம்மோடு நட்பினைச் செய்தார் பொருட்டு மிகத் துன்புறுத்தும் போரின்கண் கலத்தலிலராய் அவர் உயிரைப் பகைவரால் போகச் செய்து இறந்தார் பொருட்டு நீத்தார் கடனைச் சிறப்பாகச் செய்பவர்கள் கழிந்த விழாவினை உடைய ஊரில் தம் புதல்வற்கு விழாக்காட்டும்பொருட்டு அவரைத் தோள்மீது சுமப்பாரோடொப்பர்.
கருத்து:நட்டார் துன்புற்றபோது அவர்க்காவன செய்யாது அவர்இறந்தபின் சிறப்புச் செய்தல் கீழ்மக்களது செய்கையாகும்.
'இடையீடு உடையார் இவர் அவரோடு' என்று, தலையாயார் ஆராய்ந்தும் காணார்; கடையாயர் முன் நின்று கூறும் குறளை தெரிதலால்,- பின் இன்னா, பேதையார் நட்பு. |
138 |
மேம்பட்ட குணங்களை உடையவர்கள் கோள் கூறிய இவர்கள் நம் நட்டாரோடு மாறுபாடு உடையவர் என்று நினைத்து அவர் கூறியனவற்றை ஆராய்ச்சிசெய்து குற்றம் காண்பதிலர் கடைப்பட்ட குணங்களை உடைய கீழோர் தம் நட்டார் மேல் பிறர் வந்து கூறும் கோள்களை ஆராய்ச்சி செய்து அவர் குற்றங்களைக் காண்டலின் அறிவிலாரோடு கொண்ட நட்பு பின்னர் இன்னாததாக முடியும்.
கருத்து: அறிவுடையோர் நட்டார் குற்றத்தைக் காணமாட்டார்கள், அறிவிலார் அவர் குற்றத்தை ஆராய்ந்து காண்பார்கள்.
தாம் அகத்தான் நட்டு, தமர் என்று ஒழுகியக்கால், நாண் அகத்துத் தாம் இன்றி நன்கு ஒழுகார் ஆயினென்,- மான் மானும் கண்னால் மறந்தும் பரியலரா கானகத்து உக்க நிலா. |
139 |
மான்போன்ற (மருண்ட) நோக்கினை உடையாய் தாம் மனத்தால் நட்புப்பூண்டு சுற்றத்தார் என்னும்படி ஒழுகியவிடத்தும் தம்மால் நட்பாகக் கொள்ளப்பட்டார் மனதின் கண் நாணம் இல்லாது அந்நட்பால் என்ன பயனுண்டாம்? மறந்தும் மனத்தால் நட்புச்செய்த அவர்கள் மறந்தும் இரங்குதல் இலர் அந்நட்பு (அனுபவித்தற்குரிய மக்களில்லாத) காட்டில்எறித்த நிலவினை ஒக்கும்.
கருத்து: கீழ்மக்களோடு கொண்டநட்புப் பயனற்று ஒழியும்.
கண்டு அறிவார் போலார் கெழீஇயின்மை செய்வாரைப் பண்டு அறிவார் போலாது, தாமும் அவரேபோல், விண்டு ஒரீஇ, மாற்றிவிடுதல்!-அது அன்றோ, விண்டற்கு விண்டல் மருந்து. |
140 |
(முன்னரே அறிந்து வைத்தும்) கண்டு அறிவார் போலாராகி நட்பு இன்மையை உண்டாக்குவாரை தாமும் முன்னரே அறிவார்போன்று இல்லாது அவர் நட்பின்மையை உண்டாக்கியது போல அவரின் பிரிந்துநீங்கி நட்பினை மாற்றிவிடுக அச்செய்கை தன்னிடத்துப் பூண்ட அன்பினை நீக்கியதனுக்குத் தானும் அதுநீக்குதல் மருந்தாமாறு போலாகுமல்லவா!
கருத்து:தம்மை நன்றாக அறிந்திருந்தும் அறியாதார் போன்றுநடிப்பார் நட்பு விடுதற்குரியதாகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 26 | 27 | 28 | 29 | 30 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, அவர், நட்பு, இலக்கியங்கள், பழமொழி, பதினெண், நட்டார், உடைய, மறந்தும், நானூறு, அறிவார், கீழ்க்கணக்கு, தாம், முன்னரே, தாமும், கண்டு, மனத்தால், இல்லாது, செய்து, ஏற்றி, அன்றோ, சங்க, உடையாய், நினைத்து, கூறும், பொருட்டு, குணங்களை