பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு

ஓரும் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தைத் தேரும் திறம் அரிதால்;-தேமொழி-ஆரும் குலக் குல வண்ணத்தர் ஆகுப; ஆங்கே, புலப் புல வண்ணத்த, புள். |
146 |
தேன் போன்ற சொற்களை உடையாய்! ஒருவரது உள்ளத்தின் தன்மை ஆராய விரும்பும் ஒருவரால் ஆராயும் திறம் இல்லை நிலந்தோறும் தாம் வாழும் நிலத்திற்குத் தக்க தன்மையாயிருக்கும் புட்கள் அதுபோல மக்கள் குலங்கள்தோறும் அவ்வக் குலத்திற்குரியதன்மையை உடையவராயிருப்பார்கள்.
கருத்து: ஒருவரதுகுலத்தால் அவரது குணம் அறியப்படும்.
காப்பான் மட மகள், காப்பான் கைப்பட்டிருந்தும், 'மேய்ப்பு ஆட்டது' என்று உண்ணாள் ஆயினாள்-தீப் புகைபோல் மஞ்சு ஆடு வெற்ப!-மறைப்பினும், ஆகாதே, தம் சாதி மிக்குவிடும். |
147 |
தீயினது புகையைப்போல் மேகம் பரவி உலாவுகின்ற மலைநாடனே! மந்தையைக் காக்கும் இடையனின் மகள் உலகத்தினைக் காக்கும் அரசனுக்கு மனைவியாயிருந்தும் (ஒருநாள் பால் உண்ணும்போது) மேய்ச்சல் ஆட்டினது பால் இதுவாதலால் மதுரமாயிருந்ததில்லை யென்று அப்பாலை உண்ணாது நீக்கினாள் ஒருவர் தங்குலத்திற்குரிய ஒழுக்கத்தை மறைத்தாராயினும் மறைபடாது தம் சாதி மிக்குவிடும் - தமது குலத்திற் குரிய ஒழுக்கம் அவருக்கு முற்பட்டுத் தோன்றிக்குலத்தினைப் பிறரறியச் செய்யும்.
கருத்து: குலத்திற்குரிய ஒழுக்கம் மறைப்பினும் மறைபடாது முற்பட்டுத்தோன்றும்.
முயலவோ வேண்டா; முனிவரையானும் இயல்பு இன்னர் என்பது இனத்தான் அறிக!- கயல் இகல் உண் கண்ணாய்!-கரியரோ வேண்டா; அயல் அறியா அட்டூணோ இல். |
148 |
சேலை ஒத்து விளங்கும் கண்ணை உடையாய்! அயல் மனையாரால் அறியப்படாது சமைக்கப்படும் உணவோ இல்லை ஒருவரது இயல்பை யறிய மற்றொன்றால் அறியவேண்டுவதில்லை முனிவரேயாயினும் நல்ல இயல்பினை உடையார் தீய இயல்பினை உடையார் என்பதை அவரால் கூடப்பட்ட இனத்தாரால் அறிக. (ஆகையால்) சாட்சி சொல்வோர்வேண்டுவதில்லை.
கருத்து: ஒருவருடையஇயல்பை அவரது இனத்தால் அறியலாம்.
17. முயற்சி
'எமக்குத் துணையாவார்?' வேண்டும் என்று எண்ணி, தமக்குத் துணையாவார்த் தாம் தெரிதல் வேண்டா; பிறர்க்குப் பிறர் செய்வது ஒன்று உண்டோ ? இல்லை;- தமக்கு மருத்துவர் தாம். |
149 |
எமக்கு ஓர் இடர் வந்தால் அதனைக் களைந்து துணை செய்வோர் வேண்டுமென்று நினைத்து தமக்கு உதவிசெய்வோரைத் தாம் ஆராய்தல் வேண்டா பிறர் ஒருவருக்குப் பிறரால் செய்யத்தக்கது ஒன்று உண்டோ? துணை யாவாரைக் கண்டிடினும் ஒரு சிறிதும் நன்மை விளைதல் இல்லை தம் நோயைத் தடுப்பார் தாமே யாவர்.
கருத்து: நமக்கு வேண்டிய நன்மையை நாமே தேடிக் கொளல்வேண்டும்.
கற்றது ஒன்று இன்றிவிடினும், கருமத்தை அற்றம் முடிப்பான் அறிவுடையான்; உற்று இயம்பும்;- நீத்த நீர்ச் சேர்ப்ப!-இளையோனே ஆயினும், மூத்தானே, ஆடு மகன். |
150 |
பொருந்தி ஆரவாரிக்கும் பிரளய கால வெள்ளம்போல் பரக்கும் நீரையுடைய கடல்நாடனே! படித்தறிந்தது ஒரு சிறிதும் இல்லையாயினும் தொடங்கிய செயலைச் சோம்பலின்றி முடிப்பவன் அறிவுடையானெனப்படுவான் அங்ஙனம் செயலை ஆற்றுவோன் ஆண்டில் இளையவனேயானாலும் அறிவில் முதிர்ந்தவன்எனப்படுவான்.
கருத்து: நூலறி வில்லானேயாயினும் கருமச் சூழ்ச்சியறிதலின், எடுத்த செயலை முடிப்போன்அறிவுடையா னெனப்படுவான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 28 | 29 | 30 | 31 | 32 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, தாம், வேண்டா, இலக்கியங்கள், இல்லை, ஒன்று, பழமொழி, நானூறு, கீழ்க்கணக்கு, பதினெண், துணை, அயல், அறிக, சிறிதும், இயல்பினை, உடையார், உண்டோ, செயலை, தமக்கு, பிறர், ஒழுக்கம், சாதி, உடையாய், ஒருவரது, திறம், ஒருவர், சங்க, அவரது, காப்பான், காக்கும், பால், மிக்குவிடும், மறைப்பினும், மகள், மறைபடாது