பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு

வேளாண்மை செய்து, விருந்து ஓம்பி, வெஞ் சமத்து வாள் ஆண்மையாலும் வலியராய், தாளாண்மை தாழ்க்கும் மடி கோள் இலராய் வருந்தாதார் வாழ்க்கை திருந்துதல் இன்று. |
151 |
தம்மோடு தொடர்பில்லாதவர்களுக்கு வேண்டிய உதவியைச் செய்து விருந்துஓம்பி தம்மோடு தொடர்புடையராய் வந்த விருந்தினரை உபசரித்து கொடிய போரிடத்து வாளால் செய்யும் ஆண்மையிலும் வலிமையுடையராய் முயற்சியைக் குறைவிக்கும் சோம்பலைக் கொள்ளாதவராய் வருந்திச் செய்யாதவர்களது மனைவாழ்க்கை செப்பம் அடைதல் இல்லை.
கருத்து: வேளாண்மை, விருந்தோம்பல், வாளாண்மை, தாளாண்மைமுதலியன மனைவாழ்க்கை யுடையார்க்கு வேண்டுமென்பதாம்.
'ஒன்றால், சிறிதால், உதவுவது ஒன்று இல்லையால்' என்று ஆங்கு இருப்பின், இழுக்கம் பெரிது ஆகும்; அன்றைப் பகலேயும் வாழ்கலார், நின்றது, சென்றது, பேரா தவர். |
152 |
உள்ள பொருள் ஒன்றே யென்றும் அதுவும் சிறியதே என்றும் எடுத்த செயலை முடிப்பதற்குப் போதிய உதவி இல்லையே என்று நினைத்துச் சோம்பி இருப்பின் குற்றம் பெரிதாகும் தம்மிடத்துள்ள பொருளைப் பிறர்க்குக் கொடுத்தும் பிறரிடத்துக் கொடுத்த பொருளைத் தாம் மீளக் கொண்டும் எவ்விதத்திலும் முயற்சி செய்யாதவர்கள் ஒருநாளின்உள்ளேயே அழிந்துவிடுவர்.
கருத்து:ஒருவன் சோம்பலுடையவனா யிருப்பின், அதனால் மிகுந்தகுற்றங்கள் உளவாம்.
'இனி, யாரும் இல்லாதார் எம்மின் பிறர் யார்? தனியேம் யாம்!' என்று ஒருவர் தாம் மடியல் வேண்டா; முனிவு இலராகி முயல்க!-முனிவில்லார் முன்னியது எய்தாமை இல். |
153 |
இப்பொழுது சார்வாக ஒருவரையு மில்லாதார் எம்மைவிட யாருளர் இவ்வுலகத்தில் தனிமையுடையவராக ஆயினோம் என்று கருதி ஒருவர் சோம்பியிருக்க வேண்டுவதில்லை எடுத்த காரியத்தின்கண் சோர்வு இல்லாதவராகி முயற்சி செய்க காரியத்தின்கண் வெறுப்பில்லாதவர்கள் தாம்நினைத்ததை அடையாமலிருத்தலில்லை யாதலால்.
கருத்து: தொடங்கிய காரியத்தில் சோம்பலும் வெறுப்பும் இன்றிஅதனைச் செய்தல் வேண்டும்.
தற்றூக்கி, தன் துணையும் தூக்கி, பயன் தூக்கி, மற்றவை கொள்வ, மதி வல்லார்; அற்று அன்றி, யாதானும் ஒன்று கொண்டு, யாதானும் செய்தக்கால், யாதானும் ஆகிவிடும். |
154 |
தன்னால் இக்காரியங்கள் முடியுமாவென்று முதலில் ஆராய்ந்து, தனக்குத் துணையாவாரையும் ஆராய்ந்து செய்தால் உளவாம் பயனையும் ஆராய்ந்து அறிவிற் சிறந்தோர் அவற்றை மேற்கொள்வர் அங்ஙனம் ஆராய்தல் இல்லாமல் இயலாத செயல்களுள் யாதானும் ஒன்றை மேற்கொண்டு செய்யும் முறை யறியாது ஏதாவது செய்தால் தான் தான் நினைத்ததின்றி அதற்கு மாறாகித்துன்பமே உண்டாகும்.
கருத்து:எக்காரியத்தையும் ஆராய்ந்தே தொடங்க வேண்டும்.
வீங்கு தோள் செம்பியன் சீற்றம் விறல் விசும்பில் தூங்கும் எயிலும் தொலைத்தலால், ஆங்கு முடியும் திறத்தால் முயல்க தாம்!-கூர் அம்பு அடி இழுப்பின், இல்லை, அரண். |
155 |
பருத்த தோளை உடைய சோழனது சினம் மிக்க ஆகாயத்தின்கண்ணே அசைந்து கொண்டிருந்த அசுரர்களது ஊரினைத் தேவர்கள் பொருட்டுத் தொலைவித்தலால் எவ்வளவு முடியுமோ முடியும் வழியால் முயற்சி செய்க. கூர் அம்பு அடி இழுப்பின் இல்லை அரண் - கூரிய அம்பு அடியானது பொருந்த மிக விரைவாகத் தொடுப்பின்அதனைத் தடுத்தற்குரிய கவசம் இல்லையாதலால்.
கருத்து: நம்மால் முடிந்த அளவும் முயற்சி செய்தால் முடியாதகாரியம் ஒன்றில்லையாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 29 | 30 | 31 | 32 | 33 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, முயற்சி, இலக்கியங்கள், யாதானும், அம்பு, பழமொழி, செய்தால், ஆராய்ந்து, இல்லை, தாம், நானூறு, பதினெண், கீழ்க்கணக்கு, சங்க, தூக்கி, வேண்டும், முடியும், அரண், இழுப்பின், கூர், செய்க, தான், காரியத்தின்கண், ஆங்கு, இருப்பின், ஒன்று, தம்மோடு, செய்யும், எடுத்த, செய்து, முயல்க, ஒருவர், உளவாம், வேளாண்மை, மனைவாழ்க்கை