பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு

நண்பு ஒன்றித் தம்மாலே நாட்டப்பட்டார்களை, கண் கண்ட குற்றம் உள எனினும், காய்ந்தீயார்;- பண் கொண்ட தீம் சொல் பணைத் தோளாய்!-யார் உளரோ, தம் கன்று சாக் கறப்பார். |
131 |
பண்ணினது இயல்பைக் கொண்ட இனிமையான சொற்களையும் மூங்கில்போன்ற தோள்களையும் உடையாய்! நண்பு செய்து தம்மால் நிலை நிறுத்தப்பட்டவர்களை தாம் கண்கூடாகக் கண்ட குற்றம் அவர் மாட்டு இருக்கின்றன என்றறிந்தாலும் அறிவுடையோர் கோபிக்கமாட்டார்கள் தம்முடைய கன்றிற்குப் பால் விடாமல் அஃது இறக்கும்படி பசுவினைக் கறப்பவர் யாருமிலர் (அதுபோல).
கருத்து: அறிவுடையோர் தம் நட்டார் குற்றம் செய்யினும் அதுகருதிச்சினத்தல் இலர்.
தம் தீமை இல்லாதார், நட்டவர் தீமையையும், 'எம் தீமை' என்றே உணர்ப, தாம்;-அம் தண் பொரு திரை வந்து உலாம் பொங்கு நீர்ச் சேர்ப்ப!- ஒருவர் பொறை, இருவர் நட்பு. |
132 |
அழகிய குளிர்ந்த கரைகளில் மோதுகின்ற அலைகள் மேன்மேல் வந்து வீசுகின்ற மிகுந்த நீரை உடைய கடல்நாடனே! ஒருவர்பொறுக்கும் பொறுமையால் இருவரது நட்பும் நிலைபெறுமாதலால் நட்டார்க்குத் தம்மால் செய்யப்பட்டதொரு தீமையில்லாதார் தம் நட்டார் தமக்குச் செய்த தீமையையும் எம்மால் செய்யப்பட்ட தீமையேஎன்று நினைத்துப் பொறுப்பார்கள்.
கருத்து: நட்புப் பூண்டொழுகு மிருவருள் ஒருவராவதுபொறுமை மேற்கொண்டொழுகுதல் அவர்கள் நட்பு நீடித்துநிற்பதற்கு ஏதுவாகும்.
தெற்றப் பரிந்து ஒருவர் தீர்ப்பர் எனப்பட்டார்க்கு உற்ற குறையை உரைப்ப, தாம்;-தெற்ற அறை ஆர் அணி வளையாய்!-தீர்தல் உறுவார் மறையார், மருத்துவர்க்கு நோய். |
133 |
தெளிவாக அறைதலைப் பொருந்திய (ஒலிக்கின்ற) அழகிய வளையினை உடையாய்! பிணி நீங்க விரும்புவோர் வைத்தியனுக்கு நோயை மறைத்துச் சொல்லார் (விளங்கச் சொல்லுவர்). (அதுபோல) மிகவும் மனம் இரங்கி தனது துன்பத்தை அறியின் தீர்ப்பர் என்று தம்மால் கருதப்பட்டார்க்கு தாம்அடைந்த துன்பத்தைக் கூறுவார்கள் அறிவுடையோர்.
கருத்து:அறிவுடையோர் தீர்க்கத்தக்கவரிடம் தம் குறையைக்கூறுவார்கள்.
முட்டு இன்று ஒருவர் உடைய பொழுதின்கண், அட்டிற்றுத் தின்பவர் ஆயிரவர் ஆபவே;- கட்டு அலர் தார் மார்ப!-கலி ஊழிக் காலத்து, கெட்டார்க்கு நட்டாரோ இல்! |
134 |
மொட்டுக்கள் முறுக்குடைந்து மலருகின்ற மாலையை உடைய மார்பனே! குறைவின்றி ஒருவர் செல்வமுடையராய பொழுதின்கண் சமைத்த உணவினை உண்ணவருவோர் ஆயிரம் பேர் உளராவர் கலியுகமாகிய காலத்தில் செல்வம் இல்லாதவர்க்கு நட்பினர் ஒருவரும்இலர்.
கருத்து: ஒருவன் செல்வமுடையனாய காலத்து அவனைச் சூழ்ந்து நிற்பதும், அஃதிலனாய காலத்துப் பிரிந்து நிற்பதும்கீழ்மக்களது இயற்கையாகும்.
15. நட்பில் விலக்கு
கண்ணுள் மணியேபோல் காதலாய் நட்டாரும், எண்ணுந் துணையிற் பிறராகி நிற்பராய் எண்ணி உயிர் கொள்வான் வேண்டித் திரியினும், உண்ணும் துணைக் காக்கும், கூற்று. |
135 |
இயமன் ஆராய்ந்து உயிரை உண்ணும்பொருட்டு விரும்பித் திரிவானேயாயினும் தான் உண்ணவேண்டிய காலம் வருமளவும் உயிரைப் பாதுகாத்து நிற்பான். (அதுபோல) கண்ணினுள்ளேயிருக்கும் கருமணியைப்போல் தம் கருமத்தின்மேல் உள்ள ஆசையால் தம்மோடு நட்புச்செய்தவர்களும் தமக்கு ஆக வேண்டிய கருமம் முடிந்தது என்று நினைத்த அளவில் முன்னர் இருந்தவராக அன்றி வேறொருவராக நிற்பர்.
கருத்து: கீழ்மக்கள் தாம் காரியம் முடியுமளவும் அதை முடிக்கவல்லாருடனிருந்து முடிந்தவுடன் விட்டுநீங்குவார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 25 | 26 | 27 | 28 | 29 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, தாம், ஒருவர், இலக்கியங்கள், அறிவுடையோர், பழமொழி, கீழ்க்கணக்கு, அதுபோல, நானூறு, உடைய, தம்மால், பதினெண், குற்றம், அழகிய, நட்பு, நண்பு, பொழுதின்கண், காலத்து, கண்ட, தீர்ப்பர், வந்து, சங்க, கொண்ட, நட்டார், தீமை, தீமையையும், உடையாய்