பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு

'தக்காரோடு ஒன்றி, தமராய் ஒழுகினார்; மிக்காரால்' என்று, சிறியாரைத் தாம் தேறார்;- கொக்கு ஆர் வள வயல் ஊர!-தினல் ஆமோ, அக்காரம் சேர்ந்த மணல். |
91 |
மீன் உண்ணும் கொக்குகள் நிறைந்திருக்கின்ற நீர்வளம் பெற்ற வயல்களை உடைய மருதநிலத் தலைவனே! சர்க்கரையோடு கலந்திருக்கின்ற மணலை சர்க்கரையென்று கருதி உண்ணலாமோ; (அதுபோல்) தகுதி உடையாரோடு பொருந்தி அவர் உறவினரைப்போல் நெருங்கி ஒழுகினார் (ஆதலால்) குணத்தினால் மிக்கவர் என்று அறிவிற் சிறியாரை பெரியோர்கள் தெரிந்து நட்புக் கொள்ளார்.
கருத்து: சிறியார் பெரியாரோடுஇணங்கியிருப்பினும் அவரோ டிணங்கார் அறிவுடையோர்.
தம் தொழில் ஆற்றும் தகைமையார் செய்வன, வெந் தொழிலர் ஆய வெகுளிகட்குக் கூடுமோ?- மைந்து இறைகொண்ட மலை மார்ப!-ஆகுமோ, நந்து உழுத எல்லாம் கணக்கு. |
92 |
வலிமை தங்கிய மலைபோன்ற மார்பையுடையாய்! நத்தையாற் கீறப்பட்டன யாவும் எழுத்து ஆகுமோ? (ஆகா) (அதுபோல) தம்முடைய தொழில் திறமையுற நடாத்தும் தன்மையுடையார் செய்கின்ற செயல்கள் கொடுஞ்செயலை உடையாராகிய சினமுடையவர்களுக்குச் செய்தல் இயலுமோ? (இயலாது).
கருத்து:மேன்மக்கள் செய்யும் காரியங்கள் கீழ்மக்களுக்குச்செய்ய இயலா.
பூத்தாலும் காயா மரம் உள; மூத்தாலும் நன்கு அறியார் தாமும் நனி உளர்; பாத்தி விதைத்தாலும் நாறாத வித்து உள; பேதைக்கு உரைத்தாலும் தோன்றாது உணர்வு. |
93 |
பூத்தவிடத்தும் காய்க்கப்பெறாத பாதிரி முதலாகிய மரங்கள் உள்ளன வயது முதிர்ந்தாலும் நல்ல நூல்களை அறியாதவர்கள் தாம் மிகுதியும் உளர் எருவிட்டு வரம்பு கட்டப்பட்ட பாத்தியில் விதையினை விதைத்தாலும் முளைக்காத விதைகளும் உள. (அவைபோல) அறிவில்லாதவனுக்கு அறிவுரைகளை உரைப்பினும் உண்மை உணர்வு அவனுக்குத் தோன்றாது.
கருத்து:பேதைக்கு அறிவு ஊட்டுதல் இயலாது.
ஓர்த்த கருத்தும் உணர்வும் உணராத மூர்க்கர்க்கு உறுதி மொழியற்க!-மூர்க்கன் தான் கொண்டதே கொண்டு, விடான் ஆகும்;-ஆகாதே, உண்டது நீலம் பிறிது. |
94 |
ஆராய்ந்துவைத்த கருத்தும் உண்மையை அறியும் அறிவும் அறியாத மூர்க்கர்களுக்கு ஒரு பொருளையும் சொல்லாதொழிக. நீலம் உண்டது பிறிது ஆகாது - நீல நிறத்தை உண்டபொருள் வேறொரு நிறத்தைக் காட்டுதல் முடியாது. (அதுபோல) மூர்க்கன் தான் மேற்கொண்டதனையே மனத்தின்கண் கொண்டு விடான்.
கருத்து: மூர்க்கர்கள் பிறர்கூறுவனவற்றைக் கேட்டுத்திருந்தார்.
தெற்ற ஒருவரைத் தீது உரை கண்டக்கால், இற்றே அவரைத் தெளியற்க - மற்றவர் யாவரே ஆயினும், நன்கு ஒழுகார்;-கைக்குமே, தேவரே தின்னினும் வேம்பு. |
95 |
தெளிவாக நண்பு பூண்ட ஒருவரை ஒருவர் பொல்லாங்குரைக்கும் உரையைக் கேட்டால் நம்மையும் இப்பெற்றியே உரைப்பார் என்று கருதி அவரை நம்பாதொழிக உண்பவர்கள் தேவர்களேயானாலும் வேம்பு கசக்குந் தன்மையது. (அதுபோல) நட்புப் பூண்பவர்கள் மிகவும்சிறந்தவர்களாயினும் அவர்களோடு நன்றாக ஒழுகுதல்இலர்.
கருத்து: தீயவரைநட்பாகக்கொண்டு ஒழுகுதல் கூடாது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 17 | 18 | 19 | 20 | 21 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, இலக்கியங்கள், பதினெண், அதுபோல, பழமொழி, கீழ்க்கணக்கு, நானூறு, தான், கருத்தும், உணர்வு, மூர்க்கன், உண்டது, பிறிது, வேம்பு, நீலம், தோன்றாது, விடான், கொண்டு, நன்கு, கருதி, தாம், ஒழுகினார், சங்க, தொழில், ஆகுமோ, விதைத்தாலும், உளர், இயலாது, பேதைக்கு