பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு

தெற்றப் பகைவர் இடர்பாடு கண்டக்கால், மற்றும் கண்ணோடுவர், மேன்மக்கள்;-தெற்ற நவைக்கப்படும் தன்மைத்துஆயினும், சான்றோர் அவைப்படின், சாவாது பாம்பு. |
86 |
பாம்பானது தெளிவாகத் துயர்செய்யப்படும் தன்மையது ஆயினும் அறிவுடையோர் கூட்டத்திற் சென்றால் இறவாது; (அதுபோல) உயர்குடிப் பிறந்தோர் தெளிவாக அறியப்பட்ட பகைவர்கள் அடையும் துன்பத்தினைக் கண்டால் தமக்குப் பல பிழைகளைச் செய்தவராயிருப்பினும் மீண்டும் அவரிடத்தில் கண்ணோட்டம் செலுத்துவர்.
கருத்து: சான்றோர் துன்பப்படுபவர் தம் பகைவராயினும் அத்துன்பத்தை நீக்க முயலுவர்.
'இறப்ப எமக்கு ஈது இழிவரவு!' எண்ணார், பிறப்பின் சிறியாரைச் சென்று, பிறப்பினால் சாலவும் மிக்கவர் சார்ந்து அடைந்து வாழ்பவே- தால அடைக்கலமே போன்று. |
87 |
குடிப்பிறப்பினால் மிகவும் உயர்ந்தவர்கள் போய் குடிப்பிறப்பினால் இழிந்தவர்களைச் சார்பாகப் பெற்று எமக்கு இங்ஙனம் வாழ்தல் மிகவும் இழிவைத்தரும் என்று நினையாராய் ஒருவரிடம் வைக்கப்பெற்ற நிலமாகிய அடைக்கலப் பொருளைப்போல் பெருமையின்றி வாழ்வார்கள்.
கருத்து: உயர்குடிப் பிறந்தோர் சில காரணங்களை முன்னிட்டு : இழிந்த குடியில் பிறந்தாரது சார்பு பெற்று ஒளியின்றி வாழ்வார்கள்.
பெரிய குடிப் பிறந்தாரும் தமக்குச் சிறியார் இனமாய் ஒழுகுதல்-எறி இலை வேலொடு நேர் ஒக்கும் கண்ணாய்!-அஃது அன்றோ, பூவொடு நார் இயைக்குமாறு. |
88 |
ஒளி வீசுகின்ற இலைவடிவாகச் செய்யப்பட்ட வேலொடு நேராக ஒத்த கண்ணையுடையாய்! உயர்ந்த குடியிற் பிறந்தவர்களும் கீழ்மக்களைத் தமக்கு இனமாகக் கொண்டொழுகுதல் அச்செய்கை பூவோடு நாரைச் சேர்க்கும்நெறியல்லவா?
கருத்து: பெரியார் சிறியாரோடு ஒழுகுதல் பூமாலையைப் போல் அழகினைத் தருவதாம்.
சிறியவர் எய்திய செல்வத்தின், நாண பெரியவர் நல்குரவு நன்றே, தெரியின்;- மது மயங்கு பூங் கோதை மாணிழாய்!-மோரின் முது நெய் தீது ஆகலோ இல். |
89 |
தேன் மிகுந்த அழகிய மாலையையும் மாட்சிமைப்பட்ட கலன்களையுமுடையாய்! ஆராய்ந்தால் புதிய மோரினைவிடப் பழைய நெய் தீது ஆவதில்லை. (நன்மையே பயக்கும்) அறிவிற் சிறியார் பெற்ற செல்வத்தைவிட அறிவுடையோர் எய்திய வறுமை மாட்சிமைப்பட நல்லதே யாகும்.
கருத்து: அறிவிலார் பெற்ற செல்வத்தைவிட அறிவுடையோர் பெற்ற வறுமையேமிகச் சிறந்தது.
12. கிழ்மக்கள் இயல்பு
மிக்குப் பெருகி, மிகு புனல் பாய்ந்தாலும், உப்பு ஒழிதல் செல்லா ஒலி கடல்போல், மிக்க இன நலம் நன்கு உடைய ஆயினும், என்றும், மன நல ஆகாவாம் கீழ். |
90 |
மிகப் பெருகி நன்மை மிகுதலான நன்னீர் கடலில் வீழ்ந்தாலும் தன்னிடத்துள்ள உவர்ப்பு நீங்காத ஆரவாரிக்கும் கடலைப்போல் கீழ்மக்கள் மிகவும் நல்லோரினத்தோடு சேர்ந்து வாழும் நன்மையை நன்றாகப் பெற்றிருந்தாலும் எப்பொழுதும் மனத்தின்கண் தூய்மை பெறுதல் இலர்.
கருத்து: கீழ்மக்கள் பெரியார்இணக்கம் பெற்றிருப்பினும் மனச்செம்மை அடையார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 16 | 17 | 18 | 19 | 20 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, இலக்கியங்கள், பெற்ற, பழமொழி, மிகவும், அறிவுடையோர், நானூறு, பதினெண், கீழ்க்கணக்கு, செல்வத்தைவிட, எய்திய, வேலொடு, ஒழுகுதல், நெய், தீது, பெருகி, கீழ்மக்கள், குடிப்பிறப்பினால், ஆயினும், சான்றோர், சங்க, உயர்குடிப், பிறந்தோர், வாழ்வார்கள், பெற்று, எமக்கு, சிறியார்