பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு
காடு உறை வாழ்க்கைக் கரு வினை மாக்களை நாடு உறைய நல்கினும், நன்கு ஒழுகார்;-நாள்தொறும் கையுளதாகிவிடினும், குறும்பூழ்க்குச் செய் உளது ஆகும், மனம். |
96 |
தினந்தோறும் கையின்கண் இருந்து வளர்ந்தாலும் காடைக்கு மனம் காட்டில் வசிப்பதிலேயே பொருந்தியிருக்கும். (அதுபோல) காட்டின்கண் வசிக்கும் வாழ்க்கையால் கொடிய தொழில்களைச் செய்கின்ற விலங்கொப்பாரை நாட்டின்கண்ணே தங்கவிடினும் நன்னெறியில் ஒழுகார்.
கருத்து:கீழ்மக்கள் என்ன செய்யினும் திருந்தப்பெறார்.
கருந் தொழிலர் ஆய கடையாயார் தம்மேல் பெரும் பழி ஏறுவ பேணார்;-இரும் புன்னை புன் புலால் தீர்க்கும் துறைவ!-மற்று அஞ்சாதே, தின்பது அழுவதன் கண். |
97 |
பெரிய புன்னையது பூக்கள் புல்லிய புலால் நாற்றத்தைப் போக்கும் கடற்றுறையை உடையவனே! உண்ண விரும்புவது உண்ணப்படும் பொருளின் துன்பத்தைக்கண்டு அஞ்சுவதில்லை (அதுபோல) கொடிய தொழில்களைப் புரிவோராகிய கீழ்மக்கள் தம்மீது மிக்கபழிசேறலைப் பொருட்படுத்தார்.
கருத்து:கீழ்மக்கள் பழிக்கு அஞ்சார்.
மிக்க பழி பெரிதும் செய்தக்கால், மீட்டு அதற்குத் தக்கது அறியார், தலைசிறத்தல்,-எக்கர் அடும்பு அலரும் சேர்ப்ப!-அகலுள் நீராலே துடும்பல் எறிந்து விடல். |
98 |
மணல் மேடுகளில் அடும்பின் பூக்கள் மலரும் கடல் நாடனே!' மிகுதியான பழிச்செயல்களை மிகவும் செய்தால் அது தீர்த்தற்குத் தக்கதனை அறியாராய் மீண்டும் பழிக்குரிய அச்செயல்களிலே சிறந்து விளங்குதல் ஊரினரால் அழிக்கப்பட்ட நீரில் ததும்புமாறு நீரை வாரி எறிந்து அதனால் மூழ்கிவிடுதலை ஒக்கும்.
கருத்து: செய்த பழியை நீக்க அறியாது பின்னும் அது செய்தல் ஊர்வாரி நீரிலேபடிந்ததை ஒக்கும்.
பழியொடுபட்ட வாழ்வு பயனற்ற வாழ்வு. 'அகலுள் நீராலே துடும்பல் எறிந்து விடல்' என்பது பழமொழி.
மாணாப் பகைவரை மாறு ஒறுக்கல்லாதார் பேணாது உரைக்கும் உரை கேட்டு உவந்ததுபோல்,- ஊண் ஆர்ந்து, உதவுவது ஒன்று இல் எனினும், கள்ளினைக் காணாக் களிக்கும், களி. |
99 |
மாட்சிமையில்லாத பகைவர்களை எதிர்த்து நின்று தண்டிக்க முடியாதவர்கள் தம் பகைவரைப் பொருட்படுத்தாது பிறர் இகழ்ந்து கூறும் சொற்களைக் கேட்டு மகிழ்ந்தவர்களைப் போன்று உணவாக உண்டு அதனால் அடையும் பயன் ஒரு சிறிதும் இல்லை யெனினும் கள்ளினைக்கண்ட அளவில் மகிழும் கீழ்மகன்.
கருத்து:கீழ்மகன் கள்ளினைக் கண்ட அளவிலேயே மகிழ்வு எய்துவான்.
உழந்ததூஉம் பேணாது, ஒறுத்தமை கண்டும், விழைந்தார்போல் தீயவை பின்னரும் செய்தல்,- தழங்கண் முழவு இயம்பும் தண் கடல் சேர்ப்ப! முழம் குறைப்பச் சாண் நீளூமாறு. |
100 |
ஒலிக்கின்ற கண்ணை உடைய முழவுபோல் ஆரவாரிக்கும் குளிர்ந்த கடல் நாடனே! தம்மொடு வருந்திப் போந்த நட்பினையும் பாராது தண்டித்தமையை அறிந்திருந்தும் அவரிடத்து விருப்பமுடையார் போன்று தீய செயல்களைப் பின்பும் செய்தொழுகுதல் சாண் நீளமுள்ள தொன்றனைக் குறைக்க அது முழம் நீளமாக நீளுவது போலும்.
கருத்து: தீயவர்களைத் தண்டித்தாலும் பின்னரும் தீமையேசெய்ய முற்படுவர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 18 | 19 | 20 | 21 | 22 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, இலக்கியங்கள், கீழ்மக்கள், பழமொழி, எறிந்து, நானூறு, கீழ்க்கணக்கு, கடல், பதினெண், வாழ்வு, ஒக்கும், பேணாது, செய்தல், அதனால், முழம், சாண், பின்னரும், கீழ்மகன், கள்ளினைக், போன்று, கேட்டு, நீராலே, அதுபோல, கொடிய, மனம், ஒழுகார், சங்க, புலால், பூக்கள், விடல், துடும்பல், அகலுள், சேர்ப்ப, நாடனே