பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு

11. சான்றோர் செய்கை
ஈட்டிய ஒண் பொருள் இன்றெனினும், ஒப்புரவு ஆற்றும், குடிப் பிறந்த சான்றவன்;-ஆற்றவும் போற்றப் படாதாகி, புல் இன்றி மேயினும், ஏற்றுக் கன்று ஏறாய் விடும். |
81 |
நல்ல எருதிற்குப் பிறந்த ஆண் கன்று மிகவும் பாதுகாக்கப்படாததாய் பசும் புற்கள் இன்றி யாதானும் ஒன்றை மேய்ந்தாலும் பின்னர் எருதாக ஆகிவிடும்; (அதுபோல) மனை பிறந்த சான்றவன் - நல்ல குடியின்கட் பிறந்த அறிவுடையோன் தான் தேடிய மிக்க செல்வம் இல்லையாயினும் உலகநடையினை அறிந்து செய்யவல்லனாம்.
கருத்து: நற்குடிப் பிறந்தார் செல்வம் சுருங்கியகாலத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்.
அடர்ந்து வறியராய் ஆற்றாத போழ்தும், 'இடம் கண்டு அறிவாம்' என்று எண்ணி இராஅர்;- மடம் கொண்ட சாயல் மயில் அன்னாய்!-சான்றோர் கடம் கொண்டும் செய்வார் கடன். |
82 |
மடமாகிய குணத்தைக்கொண்ட சாயலில் மயில்போன்ற பெண்ணே! அறிவுசான்றவர்கள் வேறொருவரிடத்தில் கடன் பெற்றாயினும் செய்யவேண்டிய கடமைகளைச் செய்வார்கள்; (ஆகையால்) தொடர்ந்து வறுமையுடையராய் வருதலின் ஒப்புரவு செய்யமுடியாத இடத்தும் ஒப்புரவு செய்யும் காலம் வந்தால் அப்பொழுது செய்வோம்என்று நினையார்.
கருத்து: சான்றோர்கடன்பெற்றாயினும் ஒப்புரவு செய்வார்கள்.
மொய் கொண்டு எழுந்த அமரகத்து, மாற்றார் வாய்ப் பொய் கொண்டு, அறைபோய்த் திரிபவர்க்கு என்கொலாம்?- மை உண்டு அமர்த்த கண் மாணிழாய்!-சான்றவர், கை உண்டும், கூறுவர் மெய். |
83 |
மை பூசப்பெற்றுப் பொருந்தி இருக்கின்ற கண்களையும் மாட்சிமைப்பட்ட கலன்களையும் உடையாய் (தம்முட் பகைகொண்டு போர் செய்யும் பொருட்டுச் சேனைகள்) வீரத்தோடு நிற்கின்ற போரிடத்தில் பகைவர் கூறும் பொய்யான உரைகளைக் கேட்டு கீழறுக்கப்பட்டுத் திரிபவர்களுக்கு மெய்யுரையால் என்ன பயனுண்டு? ஒரு பயனும் இல்லை (ஆகையால்) அறிவு நிறைந்தோர் பிறர்கைப்பொருளை உண்டாராயினும் உண்மையே கூறுவார்கள்.
கருத்து: பெரியோர்கள் பிறர்கைப் பொருளைஉண்டாராயினும் உண்மையையே கூறுவார்கள்.
ஆண்டு ஈண்டு என ஒன்றோ வேண்டா; அடைந்தாரை மாண்டிலார் என்றே மறுப்பக் கிடந்ததோ? பூண் தாங்கு இள முலைப் பொற்றொடீஇ!-பூண்ட பறை அறையாப் போயினார் இல். |
84 |
ஆபரணத்தைத் தாங்குகின்ற இளமையான தனங்களையும் பொன்னாலாகிய தொடியையும் உடையாய்! தம்மிடத்துள்ள பறையை அடிக்காது சென்றார் ஒருவரும் இலர்; (ஆகையால்) அங்கே குற்றம் செய்தார்; இங்கே குற்றம் செய்தார் எனக் கூறுதல் ஒரு காரணமாகுமோ? தம்மிடத்து நட்பாக அடைந்தவர்களை அங்ஙனங் கூறுதல் வேண்டா மாட்சிமை உடையாரல்லர் என்று நட்பை விடுத்தற்குக் கிடந்ததொரு நீதி உண்டோ? (பொறுத்து நட்பாகவே கொண்டுவேண்டுவன செய்க.)
கருத்து: நட்டார் செய்த குற்றங் கருதி அவரைநீக்குதல் கூடாது.
பரியப் படுபவர் பண்பு இலரேனும், திரியப் பெறுபவோ சான்றோர்?-விரி திரைப் பார் எறியும் முந்நீர்த் துறைவ!-கடன் அன்றோ, ஊர் அறிய நட்டார்க்கு உணா? |
85 |
அகன்ற அலைகள் பாரில்வீசும் கடற்றுறைவனே! தம்மால் அன்பு செய்யப்படுபவர்கள் சிறந்த குணங்கள் உடையரல்லரேனும் அறிவுடையோர் நன்மை செய்தலினின்றும் திரிவார்களோ (இல்லை) (ஆதலால்) ஊரிலுள்ளோர் அறியத் தம்மோடு நட்புப் பூண்டவர்களுக்கு உணவுகொடுத்தல் கடமையல்லவா?
கருத்து: நட்டார் குணமிலாராயினும் சான்றோர்அவர்க்கு நன்மையே செய்வர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, இலக்கியங்கள், ஒப்புரவு, பிறந்த, கடன், ஆகையால், சான்றோர், நானூறு, பதினெண், கீழ்க்கணக்கு, பழமொழி, இல்லை, கூறுவார்கள், கூறுதல், நட்டார், உடையாய், செய்தார், குற்றம், வேண்டா, செல்வம், இன்றி, சான்றவன், சங்க, கன்று, நல்ல, செய்யும், செய்வார்கள், கொண்டு