பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு

அல்லவை செய்ப, அலப்பின்; அல்வாக்கால், செல்வது அறிகிலர் ஆகிச் சிதைந்து எழுவர்;- கல்லாக் கயவர் இயல்போல்;-நரியிற்கு ஊண் நல் யாண்டும் தீ யாண்டும் இல். |
101 |
(கீழ்மக்கள் வறுமையுற்ற இடத்து அது காரணமாகத் தீமையைச் செய்துண்பார்கள் செல்வம் உற்ற இடத்து செல்லும் நன்னெறியை அறியாதவர்களாகி அறத்தைக் கெடுத்து ஒழுகுவார் கல்லாத கீழ் மக்களுக்கு நன்மை என்பதில்லாததுபோல நரியினுக்கு உணவு பெறுகின்ற நல்லகாலமும் பெறாத பஞ்ச காலமும் இல்லை.
கருத்து: கல்வியறிவில்லாத கயவர்கள் எக்காலமும் தீமையையே புரிந்தொழுகுவார்கள்.
கூர் அறிவினார் வாய்க் குணமுடைச் சொல் கொள்ளாது, கார் அறிவு கந்தா, கடியன செய்வாரைப் பேர் அறியார் ஆயின பேதைகள் யார் உளரோ?- ஊர் அறியா மூரியோ இல். |
102 |
ஊரில் வாழ்பவர்களால் அறியப்படாத பொலி காளை இல்லை (அதுபோல) உண்மை ஞானம் உடையார் வாயால் சொல்லும் நற்குணம் உடைய சொற்களை மனத்துட் கொள்ளாது. கார் அறிவு கந்து ஆ(க) - அஞ்ஞானத்தைப் பற்றுக்கோடாகக்கொண்டு தீய செயல்களைச் செய்தொழுகுவோரை அவரது பேரினை அறியாதவர்களாகிய அறிவிலிகள் யாவர் உலகத்துளர். (இல்லை.)
கருத்து:கயவர் எல்லோராலும் அறியப்படுவர்.
நிரந்து வழி வந்த நீசருள் எல்லாம் பரந்து ஒருவர் நாடுங்கால், பண்புடையார் தோன்றார்;- மரம் பயில் சோலை மலை நாட!-என்றும் குரங்கினுள் நன் முகத்த இல். |
103 |
மரங்கள் மிக்குச் செறிந்த சோலைகள் சூழ்ந்த மலைநாட்டிற்கு உரியவனே குரங்கினங்களுள் நல்ல முகத்தை உடையவை இல்லை; (அதுபோல) நிரந்து வழிவந்த - பெருகி வழிவழியாகவந்த தீயகுணமுடையாரெல்லாருள்ளும் பெருக ஆராய்ந்து ஒருவரைத் தேறும்பொழுது நல்ல குணமுடையார் காணப்படார்.
கருத்து:கீழ்மக்களுள் நல்லோர் காணப்படார்.
ஊழாயினாயிரைக் களைந்திட்டு, உதவாத கீழாயினாரைப் பெருக்குதல்,-யாழ் போலும் தீம் சொல் மழலையாய்!-தேன் ஆர் பலாக் குறைத்து, காஞ்சிரை நட்டு விடல். |
104 |
யாழிசையைப்போன்ற இனிமையான மழலைச்சொல்லை உடையாய்! முறைப்படியே தமக்கு நன்மை செய்வாரை நீக்கிவிட்டு பயன்படாத கீழ்மக்களைத் தம்மோடு மிகுதியும் சேர்த்தல் தேன் நிறைந்த பலாமரத்தை வெட்டி அவ்விடத்தில் எட்டி மரத்தை வைத்து நீர் முதலியன கொண்டு வளர்த்துவிடுதலோடொக்கும்.
கருத்து: கீழ்மக்களைத் தம்மோடு சேர்த்துக்கொள்ளுதல் துன்பத்திற் கேதுவாம்.
பெரியார்க்குச் செய்யும் சிறப்பினைப் பேணிச் சிறியார்க்குச் செய்து விடுதல்,-பொறி வண்டு பூ மேல் இசை முரலும் ஊர்!-அது அன்றோ, நாய்மேல் தவிசு இடும் ஆறு. |
105 |
பொறிவண்டு பூமேல் இசை முரலும் ஊர புள்ளிகளையுடைய வண்டுகள் பூக்களின்மீது இருந்து இசை பாடும் மருதநிலத் தலைவனே! அறிவிற் பெரியார்க்குச் செய்யும் சிறப்பினை விரும்பி அறிவிற் சிறியார்க்குச் செய்தல் அச்செயலன்றோ யானைமேல் இடவேண்டிய கல்லணையை இழிந்த நாயின்மீதுஇட்டதை ஒக்கும்.
கருத்து: பெரியோர்க்குச் செய்யும் சிறப்பினைச் சிறியோர்க்குச்செய்தலாகாது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 19 | 20 | 21 | 22 | 23 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, இலக்கியங்கள், இல்லை, பழமொழி, செய்யும், நானூறு, பதினெண், கீழ்க்கணக்கு, கீழ்மக்களைத், தேன், காணப்படார், முரலும், தம்மோடு, பெரியார்க்குச், அறிவிற், சிறியார்க்குச், நல்ல, கொள்ளாது, இடத்து, யாண்டும், கயவர், சங்க, நன்மை, சொல், அதுபோல, அறிவு, கார், நிரந்து