பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு

'எனக்குத் தகவு அன்றால்' என்பதே நோக்கி, தனக்குக் கரி ஆவான் தானாய், - தவற்றை நினைத்து, தன் கை குறைத்தான் தென்னவனும் காணார் எனச் செய்யார், மாணா வினை. |
76 |
பாண்டியனும் எனக்குத் தகுதியன்று என்பதனை ஆராய்ந்து அறிந்து தனக்குச் சான்றாவான் தானேயாய் நின்று கதவையிடித்த குற்றத்தை நினைத்து தனது கையை வெட்டி வீழ்த்தினான். (ஆகையால்) அறிவுடையோர் பிறர் காண்டலிலர் என்பது கருதிச்செய்தலிலர் மாட்சிமைப்படாத செயலை.
கருத்து: அறிவுடையோர் பிறர் காணாமை கருதித் தீயசெயல்களைச் செய்யார்.
தீப் பால் வினையினைத் தீரவும் அஞ்சாராய்க் காப்பாரே போன்று உரைத்த பொய், குறளை,- ஏய்ப்பார் முன் சொல்லோடு ஒருப்படார், சோர்வு இன்றி மாறுபவே- வில்லொடு காக்கையே போன்று. |
77 |
கொடிய செயல்களின்பாற்பட்ட வினைகளுக்கு மிகவும் அஞ்சாதவர்களாய் தம்மைக் காப்பாற்றுகின்றவர்களைப்போல் கூறிய பொய்யாலும் குறளையாலும் தம்மை ஏமாற்றுகின்றவர்கள் முன்பு அவர் கூறிய இனிய சொற்களுக்கு இணங்காதவர்களாய் வில்லைவிட்டு நீங்கும் காக்கையைப்போல தளர்ச்சியின்றி விட்டுநீங்குவார்கள்.
கருத்து:தீயார் சொற்களைக் கேட்டவுடனேயே அவர்களைவிட்டுநீங்குவர் நல்லோர்.
மடங்கிப் பசிப்பினும், மாண்புடை யாளர், தொடங்கிப் பிறர் உடைமை மேவார்-குடம்பை மடலொடு புள் கலாம் மால் கடல் சேர்ப்ப! கடலொடு காட்டு ஒட்டல் இல். |
78 |
கூடு பொருந்திய மடல்களோடு பறவைகள் விரவா நின்ற பெரிய கடலையுடைய நெய்தல்நிலத் தலைவனே! கடலோடு துரும்பு பொருந்துதல் இல்லை (அதுபோல) (தமது உடம்பு) ஒடுங்கும்படி பசித்தாராயினும் மாட்சிமை உடையார் பிறர் பொருளைத் தாம் கொள்ளத் தொடங்க விரும்பார்.
கருத்து: பெரியோர் பிறர் பொருளை விரும்பார்.
நிரை தொடி தாங்கிய நீள் தோள் மாற்கேயும், உரை ஒழியாவாகும்; உயர்ந்தோர்கண் குற்றம்,- மரையா கன்று ஊட்டும் மலை நாட!-மாயா; நரை ஆன் புறத்து இட்ட சூடு. |
79 |
பெண் மான் தனது கன்றிற்குப் பால் அளிக்கும் மலைநாடனே! வரிசையாகத் தோள் வலயத்தைத் தாங்கிய நீண்ட தோளையுடைய திருமாலுக்கு பொருந்தியிருக்கும் குற்றங்கள் ஒருநாளும் விட்டு நீங்கா. (ஆதலால்) எல்லாவகையினுமுயர்ந்தாரிடத்துள்ள குற்றம் வெண்மையாகிய மாட்டின்மேல் இட்ட சூடுபோல் ஒருநாளும் மறையா.
கருத்து: பெரியோர்செய்த குற்றம் மறையாது.
கன்றி முதிர்ந்த கழியப் பல் நாள் செயினும், ஒன்றும், சிறியார்கண் என்றானும் - தோன்றாதாம் ஒன்றாய்விடினும், உயர்ந்தார்ப் படும் குற்றம்- குன்றின்மேல் இட்ட விளக்கு. |
80 |
வெகுண்டு அளவுகடந்த தீயசெயல்களை மிகப்பல நாட்கள் செய்தாராயினும் அவற்றுள் ஒரு குற்றமும் சிறியாரிடத்து எப்பொழுதாயினும் தோன்றுதல் இல்லை உயர்ந்தோரிடத்துளதாகிய குற்றம் ஒன்றாக இருப்பினும் மலையின்மீது வைத்த விளக்கினைப்போல் என்றும் விளங்கித்தோன்றும்.
கருத்து: பெரியோர்கள் செய்த குற்றம் நன்றாக விளங்கித்தோன்றும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, குற்றம், கருத்து, பிறர், இலக்கியங்கள், பதினெண், கீழ்க்கணக்கு, பழமொழி, நானூறு, இட்ட, விளங்கித்தோன்றும், விரும்பார், ஒருநாளும், இல்லை, தாங்கிய, தோள், பால், நினைத்து, எனக்குத், சங்க, செய்யார், தனது, போன்று, அறிவுடையோர், கூறிய