களவழி நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு
ஓடா மறவர் எறிய, நுதல் பிளந்த கோடு ஏந்து கொல் களிற்றின் கும்பத்து எழில் ஓடை மின்னுக் கொடியின் மிளிரும் - புனல் நாடன் ஒன்னாரை அட்ட களத்து. |
31 |
சோழன் பகைவர்களை வென்ற களத்தில், வீரர்கள் வீசிய வேல்பட்டு யானையின் நெற்றி பிளக்கப்படுகிறது. அதனால் கொல்லப்பட்ட யானையின் மத்தகத்தில் கட்டப்பெற்ற அழகிய ஓடை என்னும் பட்டமானது தெறித்து விழும்போது 'பளிச்' என்ற ஒளியோடு வீழ்கிறது. அக்காட்சி மின்னல் கயிற்றில் பறக்கும் கொடி போல் இருந்தது.
மை இல் மா மேனி நிலம் என்னும் நல்லவள் செய்யது போர்த்தாள்போல் செவ்வந்தாள் - பொய் தீர்ந்த பூந் தார், முரசின், பொரு புனல், நீர் நாடன் காய்ந்தாரை அட்ட களத்து. |
32 |
சோழன் பகைவர்களை அழித்த போர்க்களத்தில், குற்றம் இல்லாத உடலைப் பெற்ற நிலம் என்னும் நன்மைகள் தரும் பெண்ணானவள் சிவந்த நிறமுள்ள போர்வையை விரும்பிப் போர்த்திக் கொள்வதைப் போல வீரர்கள் சிந்திய இரத்தம் எங்கும் பரவியது.
பொய்கை உடைந்து புனல் பாய்ந்த வாய் எல்லாம், நெய்தல் இடை இடை வாளை பிறழ்வனபோல் ஐது இலங்கு எஃகின் அவிர் ஒளி வாள் தாயினவே- கொய் சுவல் மாவின், கொடித் திண் தேர், செம்பியன் தெவ்வரை அட்ட களத்து. |
33 |
வலிமையான குதிரை பூட்டிய கொடி பொருந்திய திண்மையான தேரினை உடைய சோழன் போரிட்ட களத்தில், கரையை உடைத்துக் கொண்டு வெளியேறும் பொய்கை நீர் வெள்ளத்தில் நெய்தல் பூக்களுக்கு நடுவே வாளைமீன் அசைந்து புரள்வது போல், போர்க்களத்தில் வழிந்தோடும் இரத்த வெள்ளத்தில் மிதக்கும் வேலின் தலைப்பகுதிகளுக்கு நடுவே வாள்கள் மிதந்து சென்றன.
இடரிய ஞாட்பினுள் ஏற்று எழுந்த மைந்தர் சுடர் இலங்கு எஃகம் எறிய, சோர்ந்து உக்க குடர் கொடு வாங்கும் குறு நரி, கந்தில் தொடரொடு கோள் நாய் புரையும் - அடர் பைம் பூண் சேய் பொருது அட்ட களத்து. |
34 |
அழகிய அணிகலனை அணிந்த சோழ மன்னன் போரிட்டு வென்ற போர்க்களத்தில் சோழ வீரர்களின் வேல்கள் பகைவர்கள் மீது பட்டன. பகைவர்கள் குடல் சரிந்து கிடக்கிறார்கள். சரிந்த குடல்களைக் கவ்விக் கொண்ட குள்ள நரிகள் அவற்றை இழுக்கின்றன. அச்செயல் தூணில் கட்டப்பெற்ற நாய்கள் சங்கிலியை இழுக்கும் செயலாக உள்ளது.
செவ் வரைச் சென்னி அரிமானோடு அவ் வரை ஒல்கி உருமிற்கு உடைந்தற்றால் - மல்கிக் கரை கொன்று இழிதரும் காவிரி நாடன் உரை சால் உடம்பிடி மூழ்க, அரசோடு அரசுஉவா வீழ்ந்த களத்து. |
35 |
சோழ வேந்தனின் வேல்கள் பாய்ந்தமையால் எதிர்த்த அரசனும் வீழ்கிறான். அவன் ஏறி வந்த பட்டத்து யானையும் வீழ்கிறது. அக்காட்சியானது சிவந்த மலை மீது இடி வீழ்ந்தமையால் மலையோடு சிங்கமும் சிதறுண்டு கிடக்கும் காட்சி போல் உள்ளது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
களவழி நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு, களத்து, இலக்கியங்கள், அட்ட, களவழி, என்னும், போர்க்களத்தில், போல், நாடன், சோழன், புனல், கீழ்க்கணக்கு, பதினெண், நாற்பது, நெய்தல், சிவந்த, உள்ளது, பொய்கை, இலங்கு, நீர், மீது, பகைவர்கள், வேல்கள், நடுவே, வெள்ளத்தில், கட்டப்பெற்ற, வென்ற, பகைவர்களை, எறிய, சங்க, களத்தில், வீரர்கள், கொடி, வீழ்கிறது, அழகிய, யானையின், நிலம்