களவழி நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு
நால் நால் - திசையும் பிணம் பிறங்க, யானை அடுக்குபு பெற்றிக் கிடந்த - இடித்து உரறி, அம் கண் விசும்பின் உரும் எறிந்து, எங்கும் பெரு மலை தூவ எறிந்தற்றே; அரு மணிப் பூண் ஏந்து எழில் மார்பின், இயல் திண் தேர், செம்பியன் வேந்தரை அட்ட களத்து. |
6 |
அருமையான மணிகள் கோர்த்த மாலையை மார்பிலே அணிந்தவனும் திண்ணிய தோள்களை உடையவனுமான சோழன் வேந்தர்களை வென்ற போர்க்களத்தில், பிணங்கள் எல்லாத் திசைகளிலும் காணப்பட்டன. யானைகள் கொல்லப்பட்டு ஒன்றின் மேல் ஒன்று அடுக்கப்பட்டன. இது மலைமீது விழுந்த இடியினால் பிய்த்தெறியப்பட்ட புதர்கள் மலை மீது சிதறிக் கிடப்பன போல இருந்தன.
அஞ்சனக் குன்று ஏய்க்கும் யானை அமர் உழக்கி, இங்குலிகக் குன்றேபோல் தோன்றுமே - செங் கண் வரி வரால் மீன் பிறழும் காவிரி நாடன் பொருநரை அட்ட களத்து. |
7 |
சிவந்த கண்களை உடைய வரால் மீன் விளையாடும் காவிரி பாயும் நாட்டினை உடைய சோழனது பொருந்திய படைகளை உடைய போர்க்களத்தில், கரிய மலையைப் போன்ற யானையானது, போரிட்டு இரத்தக் குளியல் நடத்தியதால் சிவந்த உடலைப் பெற்றுச் சாதிலிங்க மலை என்னும் சிவந்த மலையைப் போல காட்சி அளித்தது.
யானைமேல் யானை நெரிதர, ஆனாது கண் நேர் கடுங் கணை மெய்ம் மாய்ப்ப, எவ்வாயும் எண்ண அருங் குன்றில் குரீஇஇனம் போன்றவே- பண் ஆர் இடி முரசின், பாய் புனல், நீர் நாடன் நண்ணாரை அட்ட களத்து. |
8 |
முரசு ஒலிப்பதுபோல் பாயும் அருவிகளை உடைய சோழன் பகைவர்களை வென்ற போர்க்களத்தில், அவன் பகைவரை வீழ்த்திய காட்சி, நெருக்கமாக சாய்ந்துள்ள யானைகள் மீது பெண்களின் கண்களைப் போன்ற அம்புகள் ஆழமாகப் பாய்ந்தது. உடல்களை மறைக்கும் அளவிற்கு அம்புகள் தைத்த காட்சி குன்றின் மீது குருவிகளின் கூட்டம் இருப்பதைப் போல இருந்தது.
மேலோரைக் கீழோர் குறுகிக் குறைத்திட்ட கால் ஆசோடு அற்ற கழற் கால், இருங்கடலுள் நீலச் சுறாப் பிறழ்வ போன்ற - புனல் நாடன் நேராரை அட்ட களத்து. |
9 |
சோழன் பகைவர்களை வென்ற களத்தில், யானை, குதிரை, தேர்கள் மீதிருந்து போரிடும் வீரர்களின் கால்கள், கீழிருந்து போரிடும் வீரர்களால் வெட்டப்பெற்றுச் செருப்புகள் இல்லாமல் இரத்த வெள்ளத்துள் வீழ்ந்து கிடக்கும் காட்சி பசியோடிருக்கும் சுறாமீன்கள் கடல் நீரின் மேல் வந்து இரைதேடிப் புரள்வது போல் இருந்தது.
பல் கணை எவ் வாயும் பாய்தலின் செல்கலாது ஒல்கி, உயங்கும் களிறு எல்லாம், தொல் சிறப்பின் செவ்வல் அம் குன்றம்போல் தோன்றும் - புனல் நாடன் தெவ்வரை அட்ட களத்து. |
10 |
சோழன் பகைவர்களை வென்ற களத்தில், உடல் முழுமையும் அம்புகள் பாய்ந்து இரத்தத்தைப் போர்வையாக்கிக் கொண்டு மேலே தொடர முடியாமல் அசையாமல் உள்ள காட்சி, தொன்று தொட்டே செம்மை நிறம் படிந்து வரும் சிறப்பினைப் பெற்ற செம்மலை போல் தோன்றும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
களவழி நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு, அட்ட, களத்து, காட்சி, உடைய, நாடன், சோழன், யானை, வென்ற, இலக்கியங்கள், பதினெண், அம்புகள், சிவந்த, பகைவர்களை, புனல், களவழி, நாற்பது, மீது, போர்க்களத்தில், கீழ்க்கணக்கு, தோன்றும், போரிடும், போல், களத்தில், கால், வரால், யானைகள், நால், சங்க, மேல், மீன், பாயும், காவிரி, மலையைப்