களவழி நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு
இணை வேல் எழில் மார்வத்து இங்க, புண் கூர்ந்து, கணை அலைக்கு ஒல்கிய யானை, துணை இலவாய், தொல் வலியின் தீரா, துளங்கினவாய், மெல்ல நிலம் கால் கவவு மலை போன்ற - செங் கண் சின மால் பொருத களத்து. |
21 |
சோழன் சிவந்த கண்களை உடைய திருமால் போன்று போரிட்ட களத்தில், யானைகளின் கழுத்துக்குக் கீழ் மார்புப் பகுதிகளில் ஒரே அளவான வேல்கள் பாய்ந்து புண்களை உண்டாக்கின. அதற்கு முன் தைத்த அம்புகள் வலியை ஏற்படுத்தின. இந்த நிலையில் பாகர்கள் துணையில்லாமல் வலியைப் பொறுத்துக்கொண்டு உடல் நடுங்கச் சோர்வோடு நின்ற யானைகள் நிலையாக நிலங்களில் இடம்பெற்ற மலைகள் போன்று இருந்தன.
இரு நிலம் சேர்ந்த குடைக் கீழ், வரி நுதல் ஆடு இயல் யானைத் தடக் கை ஒளிறு வாள் ஓடா மறவர் துணிப்ப, துணிந்தவை கோடு கொள் ஒண் மதியை நக்கும் பாம்பு ஒக்குமே- கூடாரை அட்ட களத்து. |
22 |
சோழன் பகைவர்களை வென்ற களத்தில், புறங்காட்டி ஓடாத வீரர்கள், கூரிய வாளால் எப்போதும் அசைந்து கொண்டிருக்கும் தலையைக் கொண்ட யானைகளின் துதிக்கைகளை வெட்டினர். அவை (துதிக்கை) தரையில் வீழ்ந்து கிடக்கும் வெண்கொற்றக் குடைக்கு அருகே வீழ்ந்து கிடந்தன. அக்காட்சி கதிர்நிறைந்த ஒளிவீசும் நிலவைத் தொட்டுச் சுவைக்கும் பாம்பைப் போன்றிருந்தது.
எற்றி வயவர் எறிய, நுதல் பிளந்து நெய்த் தோர்ப் புனலுள் நிவந்த களிற்று உடம்பு, செக்கர் கொள் வானில் கருங் கொண்மூப் போன்றவே- கொற்ற வேல் தானை, கொடித் திண் தேர், செம்பியன் செற்றாரை அட்ட களத்து. |
23 |
வீரம் பொருந்திய செம்பியன் (சோழன்) தன்னோடு பொருந்தாதவர்களை வென்ற போர்க்களத்தில், வீரர்களின் போர்க்கருவிகள் வீசப்பெற்று, அதனால் பிளவுபட்ட நெற்றியிலிருந்து ஒழுகிய இரத்த நீரில் குளித்தெழுந்த யானைகளின் உடம்புகள், மாலை நேரச் சிவந்த வானில் திட்டுத் திட்டாகப் படர்ந்த மேகம் போல் இருந்தன.
திண் தோள் மறவர் எறிய, திசைதோறும் பைந் தலை பாரில் புரள்பவை, நன்கு எனைத்தும் பெண்ணைஅம் தோட்டம் பெரு வளி புக்கற்றே- கண் ஆர் கமழ் தெரியல், காவிரி, நீர் நாடன் நண்ணாரை அட்ட களத்து. |
24 |
சோழன் தன்னோடு சேராத பகைவர்களை வென்ற களத்தில், வீரர்கள் எல்லாத் திசைகளிலும் வாளை வீசியதால் வெட்டுப்பட்ட புதிய தலைகள் போர்க்களத்தில் நிறைந்து கிடந்தன. அக்காட்சி, புயல் வீச்சால் தாக்கப்பட்டுக் கரிய காய்கள் எல்லாம் சிதறி விழுந்த பனந்தோப்பாகத் தெரிந்தது.
மலை கலங்கப் பாயும் மலை போல் நிலை கொள்ளாக் குஞ்சரம் பாய, கொடி எழுந்து, பொங்குபு வானம் துடைப்பன போன்ற - புனல் நாடன் மேவாரை அட்ட களத்து. |
25 |
சோழ மன்னன் பகைவரை அழித்த போர்க்களத்தில் மலைகள் நடுங்க மலைகள் வந்து மோதுவன போல யானைகள் யானைகளுடன் மோதின. அப்போது யானைகள் மீது கட்டப்பட்டிருந்த கொடிகள், வானத்தில் பட்ட இரத்தக் கறைகளைத் துடைப்பன போல் நிமிர்ந்து பறந்து ஆடின.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
களவழி நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு, களத்து, இலக்கியங்கள், அட்ட, சோழன், யானைகளின், யானைகள், மலைகள், வென்ற, களவழி, போர்க்களத்தில், களத்தில், கீழ்க்கணக்கு, பதினெண், நாற்பது, போல், கிடந்தன, எறிய, வானில், அக்காட்சி, திண், வீழ்ந்து, செம்பியன், நாடன், துடைப்பன, தன்னோடு, நுதல், சிவந்த, நிலம், வேல், சங்க, போன்று, கீழ், பகைவர்களை, கொள், மறவர், இருந்தன, வீரர்கள்