களவழி நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு

கழுமிய ஞாட்பினுள் மைந்து இகந்தார் இட்ட ஒழி முரசம் ஒண் குருதி ஆடி, தொழில் மடிந்து, கண் காணா யானை உதைப்ப, இழுமென மங்குல் மழையின் அதிரும் - அதிராப் போர்ச் செங் கண் மால் அட்ட களத்து. |
11 |
கொடிய போர்க்களத்தில் வீரர்கள் விட்டொழித்த போர் முரசம், குருதி வெள்ளத்தில் மிதந்து வர, போரில் கண்ணிழந்த யானை முரசை உதைக்க, மேகக்கூட்டம் முழங்குவதுபோல் ஒலி தரும்படி சோழன் போர்க்களம் காட்சி தந்தது.
ஓவாக் கணை பாய ஒல்கி, எழில் வேழம் தீவாய்க் குருதி இழிதலால், செந் தலைப் பூவல்அம் குன்றம் புயற்கு ஏற்ற போன்றவே- காவிரி நாடன் கடாஅய், கடிது ஆகக் கூடாரை அட்ட களத்து. |
12 |
காவிரி பாயும் நாட்டையுடைய சோழன் பகைவர்களை வென்ற களத்தில், அம்புகள் உடம்பு முழுவதும் பட்டதால் யானைகள் சோர்ந்து நின்றன. இரத்தத்தால் யானைகளின் உடல்கள் நனைந்தன. இரத்தம் தரையில் சிந்தியது. அது சிவந்த அழகிய செம்மண் மலை மீது பெய்த மழை செந்நீராக ஓடுவது போல் இருந்தது. யாருக்கும் அஞ்சாத களிறைப் பகைவர்கள் மீது விரைந்து செலுத்தினான்.
நிரை கதிர் நீள் எஃகம் நீட்டி, வயவர் வரை புரை யானைக் கை நூற, வரை மேல் உரும் எறி பாம்பின் புரளும் - செரு மொய்ம்பின் சேய் பொருது அட்ட களத்து. |
13 |
முருகனைப் போன்று சோழன் போரிட்ட களத்தில், போர்வீரர்களால் வெட்டப்பட்டு யானைகளின் துதிக்கைகள் கீழே விழுந்து அசைந்தன. அக்காட்சி இடி ஒலியோடு மலைமீது பேரிடி விழுந்தமையால் அதிர்ச்சியடைந்த பாம்புகள் கீழே விழுந்து புரள்வது போல் இருந்தது.
கவளம் கொள் யானையின் கைகள் துணிக்க, பவளம் சொரிதரு பை போல், திவள் ஒளிய ஒண் செங் குருதி உமிழும் - புனல் நாடன் கொங்கரை அட்ட களத்து. |
14 |
சோழன் பகைவர்களை வென்ற களத்தில், யானைகளின் துதிக்கைகள் துண்டிக்கப்பட்டதால் அவற்றிலிருந்து இரத்தம் கொட்டுகிறது. அந்தக் காட்சி பைகளில் இருந்து பவளங்கள் இடைவிடாது கொட்டுவது போல் இருந்தது.
கொல் யானை பாய, குடை முருக்கி, எவ்வாயும் புக்க வாய் எல்லாம் பிணம் பிறங்க, தச்சன் வினை படு பள்ளியின் தோன்றுமே - செங் கண் சின மால் பொருத களத்து. |
15 |
சிவந்த கண்களை உடைய திருமால் போன்று போரிட்ட களத்தில், யானைகள் எல்லா இடங்களிலும் பாய்ந்தமையால் சிதைக்கப்பட்ட வெண்கொற்றக் குடைகளும் பிணங்களும் எங்கும் காணப்பட்டன. அக்காட்சி, தச்சுத் தொழில் வல்லவர், தச்சுத் தொழிலைச் செய்தும் பிறருக்குக் கற்றுக் கொடுத்தும் வருகின்ற தொழிற்பள்ளிக்கூடம் போல் இருந்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
களவழி நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு, போல், களத்து, சோழன், அட்ட, குருதி, களத்தில், இலக்கியங்கள், பதினெண், நாற்பது, களவழி, கீழ்க்கணக்கு, யானைகளின், செங், யானை, போரிட்ட, போன்று, மீது, கீழே, தச்சுத், அக்காட்சி, விழுந்து, சிவந்த, துதிக்கைகள், காவிரி, மால், தொழில், முரசம், சங்க, காட்சி, நாடன், யானைகள், வென்ற, பகைவர்களை, இரத்தம்