ஐந்தினை எழுபது - பதினெண் கீழ்க்கணக்கு
தேன்கமழ் பொய்கை அகவயல் ஊரனைப் பூங்கண் புதல்வன் மிதித்துழக்க - ஈங்குத் தளர்முலை பாராட்டி என்னுடைய பாவை வளர்முலைக் கண்ஞமுக்கு வார். |
56 |
நறு மணமிக்க மலர்த் தடங்களையுடைய மருத நிலத்தேயுள்ள கழனி சூழ்ந்த ஊர்க்குத் தலைவனாகிய தலைமகனை அழகிய கண்களையுடைய மகன் கால்களால் துவைத்து சிதைத்துக் கொண்டிருக்க (தலைமகனார்) இந் நிலையிலே என் பாவை போல்பவளாகிய தலைமகளின் (மகப் பெற்றமையால்) நெகிழ்ந்துள்ள முலைகளை விரும்பி முன்னோக்கி வளர்ந்து காணும்படியான அம் முலைகளின் நுனியினை கைகளால் நெருடி மகிழ்ச்சி யுறுவார். (என்று செவிலி நற்றாயிடங் கூறினாள்.)
5. நெய்தல்
ஒழுகு நிரைக்கரை வான்குருகின் தூவி உழிதரும் ஊதை எடுக்கும் துறைவனைப் பேதையான் என்றுணரும் நெஞ்சும் இனி(து)உண்மை ஊதியம் அன்றோ உயிர்க்கு. |
57 |
(தோழியே !) (ஏறிவந்து பாய்ந்து) இறங்கிச் செல்லும்படியான அலைகளையுடைய கடற்கரையினிடத்தே (வாழும்படியான) பெரிய கடற் பறவைகளின் இறகுகளினின்றும் சுழன்று வெளிபடும் காற்றானது எடுப்பாக வீசும்படியான துறைமுகத்துக்குரிய தலைவனாகிய தலைமகனை (வஞ்சகமின்றி) அறியாமை யொன்றினையே யுடையான் என தெரியும்படியான மனத்தையும் நன்றாக நாம் கொண்டிருத்தல் நம் வாழ்க்கைக்கு நன்மையையுண்டாக்கும் நற்போக்கன்றோ ? (என்று தலைமகள் தோழியை வினவினள்.)
என்னைகொல் தோழி! அவர்கண்ணும் நன்கில்லை அன்னை முகனும் அதுவாகும் - பொன்னலர் புன்னையம் பூங்கானல் சேர்ப்பனைத் தக்கதோ நின்னல்ல(து) இல்லென்(று) உரை. |
58 |
தோழியே ! என்னை கொல் - யாது காரணம் ? அவர்கண்ணும் - நம்தலைமகனார் மாட்டும் விரைந்து வரைதலை மேற்கொள்ளுமாறு காணப்பட்டிலது செவிலி நம்மாட்டு நடந்து கொள்ளும் மனப்போக்கும் (களவு வெளிப்பட்டமையினாலே அம்முறையிற் கொடுமையினைக் கொண்டுள்ளது அழகிய மலர்களையுடைய புன்னை மரங்கள் நிரம்பிய துறைமுகத்துக்குரிய தலைவனாகிய தலைமகனுக்கு (இம்முறையாக வரைவு நீட்டித்தல்) பொருத்தமாகுமோ ? (பொருந்தாது ஆதலின்) நின்னையல்லாமல் வேறு துணை (எனக்கு) இல்லையென்று (தலைமகனுக்குச்) சொல்வாயாக. (என்று தலைமகள் தோழியிடங் கூறினாள்.)
இடுமணல் எக்கர் அகன்கானல் சேர்ப்பன் கடுமான் மணியவரம் என்று- கொடுங்குழை புள்ளரவம் கேட்டுப் பெயர்ந்தாள் சிறுகுடியர் உள்ளரவம் நாணுவர் என்று. |
59 |
வளைந்த காதணிகளையுடைய தலைமகள் பறவைகளின் ஒலிகளை அறிந்து (அலைகளாலும் காற்றினாலும்) இடப்பட்ட மணல் மேடுகளையுடைய இருப்பிடமாகிய கடற்கரைச் சோலைகளையுடைய துறைமுகத்திற்குரிய தலைமகனது விரைந்து செல்லுங் குதிரையின் (கழுத்திலணியப்பெற்ற மணிகளின் ஒலியென்று (நினைத்து தன் சுற்றத்தாராகிய பரதவர்கள் தனது மனத்தினடத்தே உண்டாகுகின்ற மனக்கலக்கத்திற்கு (இவ்வொலி காரணமாகுமோ என மதித்தறிவர் என நினைத்து இரவுக்குறி யிடம்வரை சென்று தலைமகனாகிய நின்னைக் காணாது திரும்பினாள். (என்று தோழி தலைமகற்குக் கூறினாள்.)
மணிநிற நெய்தல் இருங்கழிச் சேர்ப்பன் அணிநலம் உண்டகன்றான் என்றுகொல் எம்போல் திணிமணல் எக்கர்மேல் ஓதம் பெயரத் துணிமுந்நீர் துஞ்சா தது. |
60 |
(தலைமகனை இரவுக்குறிக்கண் சார்ந்து திரும்பிவந்து உறக்கங் கொள்ளாத) எம்மைப்போல செறிந்த மணன்மேடுகளின் மீது அலைகள் மோதி நடக்கும்படி (பெரியோர்களால்) துணிந்து வரையறுக்கப்பட்ட மூன்று தன்மைகளையுடைய கடல் உறங்காமையை மேற்கொண்டது நீலமணிபோன்ற நிறத்தையுடைய நெய்தற்பூக்கள் (மலர்ந்த பெரிய உப்பங்கழிகளையுடைய கடற்கரைத்தலைவன் தனது அழகிய நலமாகிய இன்பத்தை மேற்கொண்டு நீங்கிவிட்டான் என்று நினைத்துதானோ ? (என்று தலைமகள் தோழியை வினவினள்.)
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்தினை எழுபது - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், தலைமகள், அழகிய, ஐந்தினை, தலைவனாகிய, கூறினாள், தலைமகனை, எழுபது, கீழ்க்கணக்கு, பதினெண், தோழி, வினவினள், தோழியை, அவர்கண்ணும், விரைந்து, தனது, நினைத்து, சேர்ப்பன், நெய்தல், பாவை, சங்க, செவிலி, தோழியே, பறவைகளின், பெரிய, துறைமுகத்துக்குரிய