ஐந்தினை எழுபது - பதினெண் கீழ்க்கணக்கு

பொய்கைநல் லூரன் திறங்கிளத்தல் என்னுடைய எவ்வம் எனினும் எழுந்தீக - வைகல் மறுவில் பொலந்தொடி வீசும் அலற்றும் சிறுவன் உடையேன் துணை. |
51 |
(பாணனே !) நாடோறும் குற்றமில்லாத பொன்னாற் செய்த வளையணிந்த கைகளை வீசியும் விரித்தும் விளையாடும் என் புதல்வனாகிய சிறுவனை பாது காவலாக கொண்டுளேன் (ஆகலின்) பொய்கை - நல்ல நீர் நிலைகளையுடைய நல்ல மருத நிலத்தலைவனாகிய தலைமகனின் ஒழுக்க முறைகளை எடுத்தியம்ப வேண்டா (தலைமகன் பிரிய நேரிட்டது) எனது தவறேயாயினும் (ஆகட்டும்) (இவ்விடத்தை விட்டு) எழுந்து நடப்பாயாக. (என்று தலைமகள் பாணனிடங் கூறினாள்.)
உண்டுறைப் பொய்கை வராஅல் இனம்இரியும் தண்டுறை யூர! தருவதோ? - ஒண்டொடியைப் பாராய் மனைதுறந்(து) அச்சேரிச் செல்வதனை ஊராண்மை யாக்கிக் கொளல். |
52 |
தடாகத்தினிடத்தே மேய்ந்து வாழும் வரால்மீன் கூட்டம் திரியும்படியான குளிர்ந்த இடத்தினையுடைய மருதநிலத்திற்குரிய தலைவனே ! ஒண் தொடியை - ஒள்ளிய வளையினையணிந்த தலைமகளை கடைக்கணிக்காதவனாய் எமது மனையினைவிட்டு நீங்கி அப்பரத்தையர் சேர்ந்து வசிக்கும் சிற்றூர்க்கு போகின்ற போக்கினை பெரிய காரியமாக ஏற்படுத்திக் கொள்வது (பெருந்தன்மை மிக்க நினக்குத்) தக்கதாமோ ? (என்று தோழி தலைமகனை வினவினள்.)
வளவயல் ஊரன் மருளுரைக்கு மாதர் வளைகிய சக்கரத்(து) ஆழி - கொளைபிழையா வென்றிடை யிட்டு வருமேல்நின் வாழ்நாட்கள் ஒன்றி அனைத்தும் உளேன். |
53 |
(எம் பெருமாட்டீ !) பல்விதவளத்தாற் சிறந்த வயல்களாற் சூழப்பட்ட மருத நிலத்தூர்த் தலைவனாகிய தலைமகன் மாயமொழிகளைக் கூறி மயக்கும் பரத்தையரது வளைந்த சக்கரம் போன்ற மோதிரமணிந்த கைகளால் கொள்ளப்படுதலினின்றும் தப்பி என்றைக்காவது நடுவிலே தோன்றி நம்மிடத்து வருவானாயின் உன்னுடைய வாழுங் காலத்திலே அவனைச் சாருவித்து வேண்டியவெல்லாம் பெற்றவள்போல மகிழ்வேன். (என்று தோழி தலைமகளிடங் கூறினாள்.)
உள்நாட்டம் சான்றவர் தந்த நசையிற்றென்(று) எண்ணார்க்குக் கண்ணோட்டம் தீர்க்குதும்என்(று) - எண்ணி வழிபாடு கொள்ளும் வயவயல் ஊரன் பழிபாடு நின்மே லது. |
54 |
ஆழ்ந்த ஆராய்ச்சிமுறைகள் நிறைந்த பெரியோர்கள் ஏற்படுத்தியது (இல்லறம் அன்போடு கூடியது என நினையாது கலவியொன்றினையே கருதும் பரத்தையரிடத்தில் (காட்டிய) அருளினை இனி விட்டொழிப்போம் எனக் கருதி நின்பால் வணக்கத்தினை மேற்கொண்டுள்ள வளப்ப மிக்க கழனிகள் சூழ்ந்துள்ள ஊர்க்குத் தலைவனாகிய தலைமகனது (நீ அவனை ஏற்றுக் கொள்ளாமையாலுண்டாங்) குற்றப்பாடு நின்னையே சாரும். (ஆகலின், அவனை ஏற்றுக் கொள்வாயாக, என்று தோழி தலைமகளிடங் கூறினாள்.)
காதலில் தீரக் கழிய முயங்கல்மின் ஓதம் துவன்றும் ஒலிபுனல் ஊரனைப் பேதைப்பட்(டு) ஏங்கல்மின் நீயிரும் எண்ணிலா ஆசை ஒழிய வுரைத்து. |
55 |
யானே யன்றி நீங்களும் வெள்ளமானது நெருங்கி மிகுதலானுண்டாகிய ஒலிக்கின்ற நீர்வளமிக்க மருதநிலத் தலைவனாகிய நம் தலைமகனை உள்ளன்பின் மிகுதியினின்று முழுவதும் நீங்கும்படியாக இனித் தழுவாதிருப்பீர்களாக அறியாமையிலே அகப்பட்டு அளவில்லாத தலைமகனது விருப்பம் நீங்கும்படி (காதன் மொழிகள் பல) கூறி (தலைமகன்மாட்டுக்) குறையிரக்கா திருப்பீர்களாக. (இங்ஙனம் சில காலம் நாம் ஒற்றுமையாக இருப்போமாயின், தலைமகன் முன்போல் நம்மாட்டுக் காதல் கொண்டு ஒழுகுவன், என்று தலைமகள் தன் மாட்டு வந்து, தலைமகனின் அன்பின்மையினை எடுத்துச் சொன்ன பரத்தையரிடத்தும், ஏனைத் தலைவியரிடத்தும் கூறினாள்.)
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐந்தினை எழுபது - பதினெண் கீழ்க்கணக்கு, கூறினாள், இலக்கியங்கள், ஐந்தினை, தோழி, தலைவனாகிய, தலைமகன், எழுபது, பதினெண், கீழ்க்கணக்கு, ஊரன், கூறி, தலைமகளிடங், ஏற்றுக், அவனை, தலைமகனது, தலைமகனை, மிக்க, நல்ல, பொய்கை, மருத, தலைமகனின், தலைமகள், சங்க, ஆகலின்