ஆச்சாரக் கோவை - பதினெண் கீழ்க்கணக்கு

ஒழுக்கமற்றவை
(பஃறொடை வெண்பா)
சுடர் இடைப் போகார்; சுவர்மேல் உமியார்; இடர் எனினும், மாசுணி தம் கீழ் மேல் கொள்ளார்; படை வரினும், ஆடை வளி உரைப்பப் போகார்; பலர் இடை ஆடை உதிராரே; - என்றும் கடன் அறி காட்சியவர். |
36 |
ஒருவருக்கும் விளக்கிற்கும் நடுவூடறுத்துப் போகார், சுவரின்மேல் உமியார், தமக்குக் குளிரான் இடர் வரினும் பிறருடுத்த மாசுணியைத் தங்கீழ்ப்படுப்பதும் மேற் போர்ப்பதும் செய்துகொள்ளார், படை வந்ததாயினும் தாமுடுத்த ஆடைக் காற்றுப் பிறர்மேல் உறைப்பப் போகார்; பலர் நடுவண் நின்று உடையை உதறார்; எஞ்ஞான்றும் கடப்பாட்டை அறிந்த அறிவுடையார்,
கருத்துரை: விளக்குக்கும் ஒருவர்க்கு மூடே செல்லுதல், சுவரில் உமிழ்தல், பிறரழுக்குடை யணிதல், அடுத்தவர்மேல் தம் ஆடைக் காற்றுப்படச் செல்லுதல், பலரிடைத் தம் ஆடையை உதறுதல் ஆகியவற்றைச் செய்தலாகாது
நரகத்துக்குச் செலுத்துவன
(நேரிசை வெண்பா)
பிறர் மனை, கள், களவு, சூது, கொலையோடு, அறன் அறிந்தார், இவ் ஐந்தும் நோக்கார் - திறன் இலர் என்று எள்ளப் படுவதூஉம் அன்றி, நிரயத்துச் செல்வுழி உய்த்திடுதலான். |
37 |
பிறர் மனையாளும், கள்ளும், களவும், சூதும், கொலையும் என்றிவ்வைந்தினையும், அறனறிந்தார் செய்வோமென்று கருதார். கருதுவாராயின் திறப்பாடிலரென்று பலரால் இழக்கப் படுதலுமன்றியே, நரகத்தின்கண் செல்லும் நெறியில் இவை செலுத்துதலான்.
கருத்துரை: பிறர்மனை நயத்தல். கள்ளுண்ணல், களவு செய்தல், கொலைசெய்தல், சூதாடல் இவை இகழ்ச்சிக்கும் நரகத்துக்கும் காரணமாதலால் இவைகளை மனத்திலும் நினைத்தல் ஆகாது.
எண்ணக் கூடாதவை
(இன்னிசை வெண்பா)
பொய், குறளை, வெளவல், அழுக்காறு, இவை நான்கும் ஐயம் தீர் காட்சியார் சிந்தியார்; சிந்திப்பின், ஐயம் புகுவித்து, அரு நிரயத்து உய்த்திடும்; தெய்வமும் செற்றுவிடும். |
38 |
பொய்யும் குறளையும் பிறர் பொருளை வௌவுதலும் பிறராக்கத்தின்கண் பொறாமையும் என இவை நான்கினையும் ஐயந்தீர்ந்த அறிவினையுடையார் நினையார்; நினைப்பாராயின் பிச்சை புகுவித்து நரகத்தின்கண்ணேயும் புகுவிக்கும் : தெய்வமும் கெடுத்துவிடும்.
கருத்துரை: பொய் குறளை பேசுதலும், பொறாமை யுறுதலும், பிறர் பொருள் வௌவுதலும் ஆகிய இவை வறுமையுறுவித்துத் தெய்வத்தின் கோபத்துக்கும் ஆளாக்கும்.
தெய்வத்துக்குப் பலியூட்டிய பின் உண்க!
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தமக்கு என்று உலை ஏற்றார்; தம்பொருட்டு ஊன் கொள்ளார்; அடுக்களை எச்சில் படாஅர்; மனைப் பலி ஊட்டினமை கண்டு உண்க, ஊண்! |
39 |
தமக்கென் றுலை யேற்றார்; பிறருக்கு உழைப்பதற்காக அன்றித் தமக்காக உணவும் உட்கொள்ளார்; அட்டிலின்கண் எச்சிற்படுத்தார்; மனையுறை தெய்வங்கட்குப் பலியூட்டினமை அறிந்த பின்னைத் தாம் உண்பர்.
கருத்துரை: பெரியோர் தந்நலம் கருதிச் செயல் செய்யார்.
சான்றோர் இயல்பு
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உயர்ந்ததின் மேல் இரார்; - உள் அழிவு செய்யார், இறந்து இன்னா செய்தக்கடைத்தும்; - குரவர், இளங் கிளைகள் உண்ணும் இடத்து. |
40 |
புதிய சுற்றத்தார் தம்மொடு சேர்ந்து உண்ணுமிடத்துக் குரவராயினார் உயர்ந்ததன் மேலிரார். இளங்கிளைஞர் மனமழிவனவற்றையும் செய்யார், முறைமை கடந்து மற்றவ் விளங்கிளைஞர் இன்னாத செய்த காலத்தும்.
கருத்துரை: புதிய உறவினர்கள் உண்ணுமிடத்துப் பெரியோர் உயர்ந்த பீடத்திலிருத்தலும், அவர்கள் மனம் நோகும்படி ஏதாவது செய்தலும் ஆகா.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 19 | 20 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆச்சாரக் கோவை - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்துரை, வெண்பா, பிறர், இலக்கியங்கள், போகார், கீழ்க்கணக்கு, செய்யார், பதினெண், ஆச்சாரக், கோவை, குறளை, புகுவித்து, ஐயம், சிந்தியல், பொய், பெரியோர், இன்னிசைச், உண்க, வௌவுதலும், தெய்வமும், அறிந்த, மேல், இடர், உமியார், சங்க, கொள்ளார், வரினும், செல்லுதல், ஆடைக், பலர், களவு