ஆச்சாரக் கோவை - பதினெண் கீழ்க்கணக்கு
மன்னருடன் பழகும் முறை
(இன்னிசை வெண்பா)
கடை விஇலக்கின், காயார்; கழி கிழமை செய்யார்; கொடை அளிக்கண் பொச்சாவார்; கோலம் நேர் செய்யார்; இடை அறுத்துப் போகி, பிறன் ஒருவற் சேரார்; - 'கடைபோக வாழ்தும்!' என்பார். |
66 |
அரசர் வாயிலின்கண் தடையுண்டானால் வெகுண்டு காயார், அரசரோடு மிகக்கிழமையை அவர்பொறாத வகை செய்யார், தமக்கு ஒன்று உதவுமிடத்தும், அவர்தம்மைத் தலையளிக்குமிடத்தும், தமக்கு அவை அமையா என்றிகழார், அரசரொக்கக் கோலஞ் செய்யார், அரசர் இருந்த அவையின் கண் ஊடறுத்துப் போகார், பிறனொருவனைச் சேர்ந்திரார்; முன்பு போலப் பின் கடை போக வாழ்தும் என்று கருதுவார்.
கருத்துரை: அரசருடன் பழகுவோர் அவரிடம் எந்த அளவில் நடந்துகொள்ளல் நலந்தருமோ அவ்வளவில் நடப்பதே முறை யென்க.
குற்றம் ஆவன
(இன்னிசை வெண்பா)
தமக்கு உற்ற கட்டுரையும், தம்மில் பெரியார் உரைத்ததற்கு உற்ற உரையும், அஃது அன்றிப் பிறர்க்கு உற்ற கட்டுரையும், சொல்லற்க! சொல்லின், வடுக் குற்றம் ஆகிவிடும். |
67 |
தமக்குற்ற கட்டுரைகளும், தம்மிற்பெரியராக அரசனாற் சிறப்புச் செய்யப்பட்டார் உரைத்த உரைகளும், அஃதன்றியே பிறர்க்குறுதியாகிய கட்டுரைகளும்; அரசர்க்குச் சொல்லற்க, சொல்லுவராயின் தமக்கு வடுப்படுங் குற்றமாம்.
கருத்துரை: அரசனிடத்தில் தமக்குப் பொருந்திய உறுதிச்சொல், அரசனாற் சிறப்புச் செய்யப்பட்டவர் உறுதி மொழி, பிறர்க்குறுதியாகிய கட்டுரை இவற்றைச் சொல்லுதல் பெருங்குற்றமாம்.
நல்ல நெறி
(இன்னிசை வெண்பா)
பெரியார் உவப்பன தாம் உவவார்; இல்லம் சிறியாரைக் கொண்டு புகாஅர்; அறிவு அறியாப் பிள்ளையேயானும் இழித்து உரையார், தம்மோடு அளவளாவு இல்லா இடத்து. |
68 |
பெரியராயுள்ளார் உவந்தனவற்றைத் தாம் உவவார்; தம்மில்லத்தின்கண் கீழ்மக்களைக் கொண்டு புகார்; அறிவினையறியாத பிள்ளையேயாயினும், உயர்த்தன்றி இழித்துச் சொல்லார், தம்மோடு அளவளாவு இல்லாத விடத்து.
கருத்துரை: பெரியார் உவந்தவற்றைத் தாம் விரும்புதலும், வீட்டுட் சிறியாரை யழைத்துச் செல்லுதலும் தம்மொடு பழக்கமில்லாதவர் சிறுவராயிருப்பினும் இகழாதிருத்தலும் நன்னெறி.
மன்னர் செய்கையில் வெறுப்படையாமை முதலியன
(இன்னிசை வெண்பா)
முனியார்; துனியார்; முகத்து எதிர் நில்லார்; தனிமை இடத்துக்கண் தம் கருமம் சொல்லார்; 'இனியவை யாம் அறிதும்!' என்னார்; கசிவு இன்று, காக்கை வெள்ளென்னும் எனின். |
69 |
அரசன் செய்வனவற்றை வெறார் அவனோடு கலாயார், விலங்கலின்றி நேர்முகத் தெதிர் நில்லார், அரசன் தனியே இருக்கும் இடத்தின்கண் தம் கருமம் சொல்லார், இனியவான பொருள்களை யாங்கள் நுகர்ந்தறிவோம் என்று அரசர்க்குச் சொல்லார், காக்கை வெள்ளென்றிருக்கு மென்ன அரசன் சொல்லினானாயினும் அவன்மேல் அன்பின்றி மறுத்துரையார்.
கருத்துரை: அரசன் செய்வனவற்றை வெறுத்தல், அவனோடு கலாய்த்தல், முகத்தெதிர் நிற்றல், தங்கருமங் கூறல் இனியவை யறிவே மென்றல் ஆகா.
மன்னன் முன் செய்யத் தகாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உமிவும், உயர்ந்துழி ஏறலும், பாக்கும், வகைஇல் உரையும், வளர்ச்சியும், ஐந்தும் புணரார் - பெரியாரகத்து. |
70 |
உமிதலும், உயர்ந்தவிடத் தேறியிருத்தலும், பாக்குத் தின்னலும், கூறுபாடில்லாதவுரையும், உறங்குதலும், இவ்வைந்தும், அரசர் முன்பு செய்யார்.
கருத்துரை: அரசர் முன்னிலையில் உமிழ்தல் வெற்றிலை தின்னல் முதலிய செய்கைகளைச் செய்தலாகாது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 19 | 20 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆச்சாரக் கோவை - பதினெண் கீழ்க்கணக்கு, வெண்பா, கருத்துரை, செய்யார், தமக்கு, இன்னிசை, இலக்கியங்கள், அரசன், அரசர், சொல்லார், ஆச்சாரக், உற்ற, தாம், பெரியார், கீழ்க்கணக்கு, பதினெண், கோவை, உவவார், அளவளாவு, தம்மோடு, கொண்டு, கருமம், அவனோடு, செய்வனவற்றை, காக்கை, இனியவை, நில்லார், அரசர்க்குச், முறை, கட்டுரையும், குற்றம், காயார், முன்பு, சங்க, உரையும், சிறப்புச், பிறர்க்குறுதியாகிய, அரசனாற், கட்டுரைகளும், சொல்லற்க, வாழ்தும்