ஆச்சாரக் கோவை - பதினெண் கீழ்க்கணக்கு
சொல்லும் முறைமை
(இன்னிசை வெண்பா)
விரைந்து உரையார்; மேன்மேல் உரையார்; பொய் ஆய பரந்து உரையார்; பாரித்து உரையார்; - ஒருங்கு எனைத்தும் சில் எழுத்தினானே, பொருள் அடங்க, காலத்தால் சொல்லுக, செவ்வி அறிந்து! |
76 |
கடுகியுரையார், மேன்மேலுரையார், பொய்யாய சொற்களைப் பரக்க உரையார், தாம் உரைக்கத்தக்க சொற்களைப் பரப்பியுரையார், கூறவேண்டிய எனைத்தினையும் ஒரு மிக்க சில்லெழுத்தினானே பொருள் விளங்கும் வகை காலத்தோடு படுத்திக் கேட்போர் செவ்வியறிந்து சொல்லுவர்.
கருத்துரை: ஒருவரிடத்தில் ஒன்றைச் சொல்லும்பொழுது விரைதல் மேல்மேலுரைத்தல் முதலிய செய்யாது, சில்லெழுத்திற் பொருளடங்கப் பேசுதல் வேண்டும்.
நல்ல குலப்பெண்டிர் இயல்பு
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தம் மேனி நோக்கார்; தலை உளரார்; கைந் நொடியார், எம் மேனி ஆயினும் நோக்கார்; தலைமகன்- தம் மேனி அல்லால் பிற. |
77 |
நற்குலப் பெண்டிர் தம் கணவரது உடலின் வடிவத்தையன்றி ஏனை ஆடவரது மேனி எத்துணை அழகுடையவேனும் பாரார்; தம் உடலின் வடிவத்தையும் நோக்கார்; தலை மயிரைக் கோதார்; கைந்நொடித்தல் முதலியன செய்யார்,
கருத்துரை: குலமாதர் தம் கணவருடல் வடிவையன்றிப் பிறர் வடிவழகு காண வொருப்படார். தலைமயிர் கோதல் கைந்நொடித்தல் முதலிய தீப்பழக்கங்களுங் கொள்ளார்.
மன்னர் அவையில் செய்யக் கூடாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
பிறரொடு மந்திரம் கொள்ளார்; இறைவனைச் சாரார்; செவி ஓரார்; சாரின், பிறிது ஒன்று தேர்வார்போல் நிற்க, திரிந்து! |
78 |
பிறரோடுகூட இருந்து ஒன்றனை ஆராயார், அரசனைச் சாரநில்லார் : அரசன் பிறனொருவனுக்குச் சொல்லுஞ் சொல்லைத் தஞ்செவியில் ஓரார், அரசன் ஒன்றனை ஒருவனுக்குச் சொல்லும்பொழுது குறுகநின்றாரெனின், பிறிதொன்றனை ஆராய்வார்போல முகந்திரிந்து நிற்க.
கருத்துரை: அரசவையில் வேறொருவனிடமிருந்து ஒன்றையாராய்தல், அரசன் அருகினிற்றல், மறை கேட்டல் முதலியன செய்தல் ஆகா.
பெரியோரிடம் உள்ள முச்செயல்கள்
(நேரிசை வெண்பா)
துன்பத்துள் துன்புற்று வாழ்தலும், இன்பத்துள் இன்ப வகையான் ஒழுகலும், அன்பின் செறப்பட்டார் இல்லம் புகாமை, - இம் மூன்றும் திறப்பட்டார் கண்ணே உள. |
79 |
துன்பக் காலத்தில் அத் துன்பத்துள் அமைவுற்று வாழ்தலும், இன்பக்காலத்தில் பிறர்க்கு இன்பு செய்யும் வகையான் இன்புற்று நடத்தலும், அன்பினின்றும் வேறுபட்டாரில்லம் புகாமையுமாகிய இம்மூன்றும் ஒரு திறப்பட்டார்கண்ணே உளவாம்.
கருத்துரை: துன்பக்காலத்தில் துன்பத்தைப் பொறுத்திருத்தலும், இன்பக்காலத்தில் பிறர்க்கும் இன்பமுண்டாக நடத்தலும், அன்பற்றவர் வீடு அடையாமையும் ஒருவழிப்பட்டார் செய்கையாம்.
சான்றோர் பெயர் முதலியவற்றை கூறாமை
(நேரிசை வெண்பா)
தெறுவந்தும் தம் குரவர் பேர் உரையார்; இல்லத்து உறுமி நெடிதும் இராஅர்; பெரியாரை என்றும் முறை கொண்டு கூறார்; புலையரையும் நன்கு அறிவார் கூறார், முறை. |
80 |
நன்கறிவார் தாம் வெகுண்டாராயினும் தங்குரவர் பெயரைச்சொல்லார்; தம்மில்லத்தின்கண் தம் மனைவியை மிகவும் கழறியுரைத்து நெடிதிரார்; தம்மிற் பெரியாரை முறைப் பெயர் கொண்டு சொல்லார்; புலையரையும் முறைப்பெயர் கொண்டு கூறார்.
கருத்துரை: வெகுண்ட விடத்தும் தங்குரவர் பெயரைக் கூறுதலும், நெடுநேரம் மனையாளைக் கடிந்து பேசலும், பெரியார் புலைய ரிவர்களை முறைப்பெயரிட் டழைத்தலும் ஆகா.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 19 | 20 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆச்சாரக் கோவை - பதினெண் கீழ்க்கணக்கு, உரையார், வெண்பா, கருத்துரை, மேனி, இலக்கியங்கள், கீழ்க்கணக்கு, ஆச்சாரக், நோக்கார், அரசன், கொண்டு, பதினெண், கூறார், கோவை, நேரிசை, துன்பத்துள், வாழ்தலும், இன்பக்காலத்தில், வகையான், பெரியாரை, தங்குரவர், புலையரையும், முறை, பெயர், நடத்தலும், கைந்நொடித்தல், சொல்லும்பொழுது, முதலிய, தாம், சொற்களைப், சங்க, பொருள், இன்னிசைச், சிந்தியல், ஓரார், நிற்க, கொள்ளார், முதலியன, உடலின், ஒன்றனை