ஆச்சாரக் கோவை - பதினெண் கீழ்க்கணக்கு

பெரியவரை 'உண்டது யாது' என வினவக் கூடாது
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உண்டது கேளார், குரவரை, மிக்காரை, கண்டுழி; கண்டால், முகம் திரியார், புல்லரையும் உண்டது கேளார் விடல்! |
86 |
ஐங்குரவரையும் சான்றோரையும் கண்டால் மனம் வேறுபடாதவர்கள் அவரை நோக்கி, ‘நீவிர் உண்டது யாது' என வினவார். அதுபோல் கீழோரையும் ‘நீவிர் உண்டது யாது' என்று வினவா தொழிக.
கருத்துரை: ஐங்குரவரையும் பெரியோரையும் கண்டால், ‘நீங்கள் உண்டது என்ன?' என்று கேட்கலாகாது; அதுபோல் கீழோரையும் கேட்கலாகாது.
கட்டிலில் படுத்திருப்பவருக்குச் செய்யத் தகாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கிடந்தாரைக் கால் கழுவார்; பூப்பெய்யார்; சாந்தம் மறந்தானும் எஞ் ஞான்றும் பூசார்; கிடந்தார்கண் நில்லார், தாம் - கட்டில்மிசை. |
87 |
எப்போதுங் கட்டிலின்மீது படுத்திருப்பவரது காலைக் கழுவார், அவருக்குப் பூப்புனையார், அவருக்கு மறந்தாவது சந்தனமும் பூசார், அருகில் நிற்றலுஞ் செய்யார்.
கருத்துரை: ஒருவர் கட்டிலின்மேற் படுத்திருந்தால் அப்போது அவருடைய காலைக் கழுவுதலும், அவருக்குப் பூச்சூடுதலும், சந்தனம் பூசுதலும், அவரருகில் நிற்றலும் ஆகா.
பெரியோர் போல் வாழ்வோம் என எண்ணுபவர் செய்கைகள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உதவிப் பயன் உரையார்; உண்டி பழியார்; அறத்தொடு தாம் நோற்ற நோன்பு வியவார்; - 'திறத்துளி வாழ்தும்!' என்பார். |
88 |
தாமொருவருக்குச் செய்த நன்றியின் பயனைச் சொல்லார், தமக்கு ஒருவரிட்ட உணவை இகழ்ந்துரையார், தாம் செய்த அறத்தையும் விரதத்தையும் புகழ்ந்துரையார், பெரியோருடைய ஒழுக்கத்தினை நினைத்து அவ்வாறு வாழ்துமென் றெண்ணுவோர்.
கருத்துரை: தாம் பிறர்க்குச் செய்த உதவியைத் தாமே பாராட்டுதலும், பிறர் இட்ட உணவை யிகழ்தலும், தம் அறச் செய்கையையும் நோன்பையும் தாமே புகழ்தலும்தகா.
கிடைக்காதவற்றை விரும்பாமை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
எய்தாத வேண்டார்; இரங்கார், இழந்ததற்கு, கைவாரா வந்த இடுக்கண் மனம் அழுங்கார்; - மெய்யாய காட்சியவர். |
89 |
தமக்குக் கிடைத்தற் கரியவற்றை விரும்பார், தம்மால் இழக்கப்பட்டனவற்றிற்கு வருந்தார், அகற்றற்கரிய இடுக்கண் உற்றுழியும் அதற்கு மனங்கலங்கார், உண்மையான அறிவினை யுடையவர்.
கருத்துரை: கிடைத்தற் கரியவற்றை விரும்புதலும், இழந்த பொருட்கு வருந்துதலும், அரிய துன்பத்திற்கு மனங் கலங்குதலும் பயனற்ற செயல்களாம்.
தலையில் சூடிய மோத்தல் முதலானவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தலைக்கு இட்ட பூ மேவார்; மோந்த பூச்சூடார்; பசுக் கொடுப்பின், பார்ப்பார் கைக் கொள்ளாரே; என்றும், புலைக்கு எச்சில் நீட்டார்; விடல்! |
90 |
எப்போதும் தலையில் முடித்த பூவைத்தாம் முகவார், ஒருவர் மோந்த பூவையும் சூடார், பிராமணர் பசுவினைக் கொடுத்தாலும் அதனைப் பெரியோர் வாங்கார், புலையருக்கு எச்சிலைக் கொடார், (ஆதலால்) இவைகளை விடுக.
கருத்துரை: தலையில் முடித்த பூவை மோத்தலும், மோந்த பூவைச் சூடுதலும், பிராமணரிடம் பசுக்கொடை பெறலும் கூடா; புலையருக்கு எச்சில் கொடுத்தலும் ஆகாது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆச்சாரக் கோவை - பதினெண் கீழ்க்கணக்கு, உண்டது, இன்னிசைச், வெண்பா, சிந்தியல், கருத்துரை, இலக்கியங்கள், தாம், மோந்த, ஆச்சாரக், செய்த, கண்டால், தலையில், யாது, கீழ்க்கணக்கு, கோவை, பதினெண், தாமே, உணவை, புலையருக்கு, இட்ட, இடுக்கண், எச்சில், பெரியோர், கரியவற்றை, கிடைத்தற், முடித்த, பூசார், ஐங்குரவரையும், மனம், விடல், கேளார், சங்க, ‘நீவிர், அதுபோல், காலைக், அவருக்குப், கழுவார், கேட்கலாகாது, கீழோரையும், ஒருவர்