ஆச்சாரக் கோவை - பதினெண் கீழ்க்கணக்கு
ஆன்றோர் செய்யாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
புழைக்கடைப் பின் புகார்; கோட்டி, உரிமை, இவற்றுக்கண் செவ்வியார், நோக்காரே, அவ்வத் தொழிற்கு உரியர் அல்லாதவர். |
81 |
பிறர் மனையின்கண் புழைக்கடை வாயிலால் புகார், அரசன் கோட்டி கொண்டு கூத்து முதலாயின இன்புறாநின்றவிடத்தும், உரிமை மகளிரோ டிருந்தவிடத்தும் செவ்வியராயுள்ளா ரென்றும் நோக்கார்; அந்தந்தத் தொழிற்குரிய ரல்லாதார்.
கருத்துரை: வேறொருவர் வீட்டில் புழைக்கடை வாயிலாற் போதலும், அரசன் களியாட்டிடத்தும் அந்தப்புரத்திடத்தும் செல்லுதலும் ஆன்றோர் செயலாகா.
மனைவியின் உள்ளம் மாறுபடுதல்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
வண்ணமகளிர் இடத்தொடு தம் இடம், ஒள்ளியம் என்பார், இடம் கொள்ளார்; தெள்ளி, மிகக் கிழமை உண்டுஎனினும், வேண்டாவே; - பெண்டிர்க்கு உவப்பன வேறாய்விடும். |
82 |
அறிவுடையோர் என்று சொல்லப்படுவோர் கோலஞ்செய்யு மகளிரிடத்தோடு சேர்ந்த தம்மிடத்தை வாழ்க்கைக்குச் சிறந்த இடமாகக் கொள்ளார். தெளிவுற்று மிகுந்த உரிமையுளதாயினும் விரும்பப்படுவனவல்ல, தம் மனைவியர்க்கு விருப்பம் வேறுபடும் ஆதலால்.
கருத்துரை: பொது மகளிர் வீட்டினருகிற் குடியிருப்புக் கொள்ளின் மனைவியர் மனவிருப்பம் மாறுபடும்.
கடைபோக வாழ்வோம் என எண்ணுபவர் மேற்கொள்ள வேண்டியவை
(இன்னிசை வெண்பா)
நிரல்படச் செல்லார்; நிழல் மிதித்து நில்லார்; உரையிடை ஆய்ந்து உரையார், ஊர் முனிவ செய்யார்; அரசர் படை அளவும் சொல்லாரே; - என்றும், 'கடைபோக வாழ்தும்!' என்பார். |
83 |
ஒருவர் பக்கத்தில் வரிசைப்படப் போகார் - ஒருவருடைய நிழலை மிதித்து நில்லார், முள்னர் ஆராய்ந்தன்றிப் பேசும்போது ஆராய்ச்சிசெய்து பேசார், ஊரிலுள்ளோர் வெறுக்கத்தக்கவைகளைச் செய்யார், அரசரது படையளவைப் பகைவர்க்குச் சொல்லார், எப்போதும் ஒரு தன்மையராய் வாழ்தும் என்பார்.
கருத்துரை: ஒருவர் பக்கத்திற் போகும்போது ஒரு வரிசைப்படப்போதல், ஒருவர் நிழலை மிதித்து நிற்றல், பேசும்போது இடையில் நினைந்து பேசுதல், ஊரார் வெறுப்பன செய்தல், அரசர் படையளவுரைத்தல் இவை ஆகாதன.
பழகியவை என இகழத் தகாதவை
(இன்னிசை வெண்பா)
அளை உறை பாம்பும், அரசும், நெருப்பும், முழை உறை சீயமும், என்று இவை நான்கும், இளைய, எளிய, பயின்றன, என்று எண்ணி, இகழின், இழுக்கம் தரும். |
84 |
புற்றில் வாழ் அரவும் அரசனும் தீயும் குகையில் வாழ் சிங்கமும் என்கின்ற இந்நான்கினையும் இளையவென்றும், எளியவென்றும், பழகியவென்றும் எண்ணியிகழின், துன்பந் தருவனவாம்.
கருத்துரை: பாம்பு அரசன் நெருப்பு சிங்கம் இந்நான்குடன் நெருக்கமாயும் எச்சரிகையில்லாமலும் பழகலாகாது.
செல்வம் கெடும் வழி
(நேரிசை வெண்பா)
அறத்தொடு, கல்யாணம், ஆள்வினை, கூரை, இறப்பப் பெருகியக்கண்ணும், திறப்பட்டார் மன்னரின் மேம்படச் செய்யற்க! செய்பவேல், மன்னிய செல்வம் கெடும். |
85 |
அறிவுடையோர் தம்மாட்டுச் செல்வம் மிகப் பெருகிய விடத்தும், அறத்தினையுங் கல்யாணத்தினையும் முயற்சியையும் வீட்டினையும் அரசர் செய்வதினும் மேம்படச் செய்யாதொழிக; செய்வாராயின் தம்மாட்டுற்ற செல்வம் கெடும்.
கருத்துரை: எத்தகைய செல்வரும் அறம் மணம் முயற்சி வீடு இவ்வகையில் அரசரினும் மேம்படச் செலவு செய்யலாகாது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | ... | 19 | 20 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆச்சாரக் கோவை - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்துரை, வெண்பா, இலக்கியங்கள், செல்வம், ஆச்சாரக், ஒருவர், அரசர், அரசன், மிதித்து, கோவை, கீழ்க்கணக்கு, கெடும், பதினெண், என்பார், மேம்படச், நில்லார், செய்யார், பேசும்போது, வாழ், நிழலை, வாழ்தும், இடம், சிந்தியல், புகார், இன்னிசைச், ஆன்றோர், சங்க, கோட்டி, உரிமை, கடைபோக, அறிவுடையோர், கொள்ளார், புழைக்கடை, இன்னிசை