ஆச்சாரக் கோவை - பதினெண் கீழ்க்கணக்கு
மன்னன் முன் சொல்லக் கூடாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
இறைவர் முன், செல்வமும், கல்வியும், தேசும், குணனும், குலம் உடையார் கூறார் - பகைவர்போல் பாரித்து, பல் கால் பயின்று. |
71 |
அரசர் முன்புதம் செல்வமும், கல்வியும், தமது விளக்கமும், குணனும் குடிப்பிறந்தார் தமக்குத் துன்பஞ் செய்யும் பகைவர்போல் பரப்பிப் பல்கால் பயின்றுரையார்.
கருத்துரை: ஒருவர் தங் கல்வி, செல்வம், குணம் முதலியவற்றை அரசர் முன்ன ரெடுத்துரைத்து அதனால் கெடுதியடையாதிருக்க வேண்டும்.
வணங்கக்கூடாத இடங்கள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
பெரியார் மனையகத்தும் தேவகுலத்தும்,- வணங்கார் - குரவரையும் கண்டால்; அணங்கொடு நேர் பெரியார் செல்லும் இடத்து. |
72 |
அரசர் மனையகத்தும் தேவாலயங்களுள் குரவரையுங் கண்டால் வணங்கார், தெய்வங்கள் புறம் போந்தெழுந்தருளு மிடத்தும், அரசர் புறம் போதுமிடத்தும் கண்டாலும் வணங்கார்.
கருத்துரை: அரண்மனை, ஆலயம், தெய்வவிழாக் காலம் அரசர் ஊர்வலம் வருங்காலம் இவற்றில் பெரியரைக் கண்டால் வணங்கா தொழிக.
மன்னர் முன் செய்யத் தகாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
நகையொடு, கொட்டாவி, காறிப்பு, தும்மல், இவையும் பெரியார் முன் செய்யாரே; செய்யின், அசையாது, நிற்கும் பழி. |
73 |
சிரிப்பும் கொட்டாவியும் காறியுமிழ்தலும் தும்மலும் என, இவையும் அரசர் முன்பு செய்யார், செய்வாராயின், பழி குறையாது நிற்கும்.
கருத்துரை: அரசர் எதிரில் சிரித்தல் கொட்டாவி விடுதல் முதலியவற்றைச் செய்யற்க, செய்தாற் பழியே உண்டாகும்.
ஆசிரியரிடம் நடக்கும் முறைமை
(இன்னிசை வெண்பா)
நின்றக்கால், நிற்க, அடக்கத்தால்! என்றும் இருந்தக்கால், ஏவாமை ஏகார்; பெருந்தக்கார் சொல்லின் செவி கொடுத்துக் கேட்டீக! மீட்டும் வினாவற்க, சொல் ஒழிந்தக்கால்! |
74 |
நன்மாணாக்கர் என்றும் ஆசிரியர் முன் அடங்கி யொழுகவேண்டுதலின், அவர் பாடஞ் சொல்லுதலை நிறுத்தினால் தாமும் நிற்கக்கடவர், அவர்முன் இருந்தபோது அவர் ‘எழுந்து போ' என ஏவுதற்குமுன் எழுந்து போகார். அவர் பாடம் முதலியவற்றைச் சொல்லின் செவிதாழ்த்துக் கேட்க, அவர் யாதொன்றும் சொல்லாவிடின் வினவாதிருக்கக் கடவர்.
கருத்துரை: நன்மாணாக்கர் ஆசிரியர் இருவென இருந்து சொல்லெனச் சொல்லிப் போவெனப் போய், செவி வாயாகக் கேட்டவை விடாதுளத்தமைக்க முயல்வர்.
சான்றோர் அவையில் செய்யக் கூடாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உடுக்கை இகவார், செவி சொறண்டார்; கை மேல்- எடுத்து உரையார்; பெண்டிர்மேல் நோக்கார்; செவிச் சொல்லும் கொள்ளார்; பெரியார் அகத்து. |
75 |
பெரியாரவைக்களத்தில் ஆடையைக் களையார், காதைச் சொறியார், கைமேலெடுத்துப் பேசார். மாதர்களை நோக்கார், பிறர் செவியிற் சொல்லுஞ் சொல்லையுங் கேளார்.
கருத்துரை: பெரியோர் அவையிற் காதைச் சொறிதல், ஆடையைக் களைதல், கையுயர்த்திப் பேசுதல் முதலியன செய்யலாகாதன.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | ... | 19 | 20 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆச்சாரக் கோவை - பதினெண் கீழ்க்கணக்கு, அரசர், வெண்பா, முன், கருத்துரை, அவர், சிந்தியல், பெரியார், இலக்கியங்கள், இன்னிசைச், கண்டால், வணங்கார், கோவை, ஆச்சாரக், பதினெண், கீழ்க்கணக்கு, செவி, முதலியவற்றைச், என்றும், சொல்லின், ஆசிரியர், காதைச், ஆடையைக், நோக்கார், நிற்கும், நன்மாணாக்கர், மனையகத்தும், கல்வியும், செல்வமும், கூடாதவை, கல்வி, குணனும், பகைவர்போல், கொட்டாவி, புறம், சங்க, இவையும்