திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு

உருகுமால் உள்ளம் ஒருநாளும் அன்றால் பெருகுமால் நம்அலர் பேணப் - பெருகா ஒருங்குவால் மின்னோடு உருமுடைத்தாய் பெய்வான் நெருங்குவான் போல நெகிழ்ந்து. |
41 |
ஒருங்கு பெருகி வாலிய மின்னோடு உருமுடைத்தாகிப் பெய்யவேண்டி நெருங்குகின்ற மழை போலப் பெருகாநின்றது,ஏதிலார் விரும்பும்படி நம் அலரானது; ஆதலான் நம்முள்ளம் ஒருநாளுமன்றியே பலநாளும் நெகிழ்ந்து உருகாநின்றது.
கவளக் களிப்பியனமால் யானைசிற் றாளி தவழத்தான் நில்லா ததுபோல் - பவளக் கடிகை யிடைமுத்தம் காண்தொறும் நில்லா தொடிகை யிடைமுத்தம் தொக்கு. |
42 |
கவளத்தையுடைய களிப்பியன்ற மால் யானை, அரிமாவின் குருளைதான் நடைகற்கும் பருவத்தும் அஞ்சி யெதிர் நில்லாதது போல, இவளுடைய அதரமாகிய பவழத்துண்டத்தினிடை யரும்பும் முறுவலாகிய முத்தங்களைக் காணுந்தொறுந் தோற்று நில்லா,இவள் கையிடைத் தொடியின்கண் அழுத்திய முத்தங்கள்திரண்டு.
கடற்கோடு இருமருப்புக் கால்பாக னாக அடற்கோட் டியானை திரையா - உடற்றிக் கரைபாய்நீள் சேர்ப்ப! கனையிருள் வாரல் வரைவாய்நீ யாகவே வா! |
43 |
கடலின்கட் சங்குகளே பெரிய மருப்பாக, காற்றே பாகனாக, திரையே அடற் கோட்டி யானையாக வருத்திக் கரையைக் குத்துகின்ற நீண்ட சேர்ப்பையுடையானே! செறிந்த இருளின்கண் வாராதொழிக; வருதலை வேண்டின், நீ வரைவா யாகவே வா.
கடும்புலால் புன்னை கடியும் துறைவ! படும்புலால் புட்கடிவான் புக்க - தடம்புலாம் தாழையா ஞாழல் ததைந்துயர்ந்த தாய்பொழில் எழைமான் நோக்கி இடம். |
44 |
மிக்க புலானாற்றத்தைப் புன்னைப் பூக்கள் நீக்குந் துறைவனே! புலாலிற் பட்ட புள்ளைக் கடிய வேண்டிப் புக்க ஏழை மானோக்கி விளையாடுமிடம், பெரிய புல்லாகிய தாழையும் ஞாழலும் நெருங்கி யுயர்ந்ததாழ்பொழில்.
தாழை தவழ்ந்துலாம் வெண்மணல் தண்கானல் மாழை நுளையர் மடமகள் - ஏழை இணைநாடில் இல்லா இருந்தடங்கண் கண்டும் துணைநாடி னன்தோம் இலன்! 45 |
45 |
தாழைகள் படர்ந்து பரக்கும் வெண்மணலையுடைய தண்கானலின்கண் வாழும் மாழைமையையுடைய நுளையர் மடமகளாகிய இவ்வேழையுடைய ஒப்புமை நாடிலில்லாத இருந்தடங்கண் கண்டுந் துணையை நாடிய எம்பெருமான் ஒருகுற்றமு மிலன்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், நில்லா, திணைமாலை, கீழ்க்கணக்கு, நூற்றைம்பது, பதினெண், புக்க, இருந்தடங்கண், பெரிய, நுளையர், நெகிழ்ந்து, சங்க, மின்னோடு, யிடைமுத்தம், யாகவே