திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு
கடும்புலால் வெண்மணற் கானலுறு மீன்கண் படும்புலால் பார்த்தும் பகர்தும் - அடும்பெலாம் சாலிகை போல்வலை சாலம் பலவுணங்கும் பாலிகை பூக்கும் பயின்று. |
51 |
கடும்புலாலையுடைய வெண்மணற் றண்கழிக் கானலின்கண் இருந்து, யாங்கள் ஆங்கடுத்த மீனாகிய படு புலாலின்கட் புட்டிரியாமற் பார்ப்பேம்; அவற்றை விற்பதுஞ் செய்வேம; அக்கானலின்கண் அடும்பெல்லாம் பாலிகை போலப் பூக்கும்; சாலிகை விரிந்தாற்போல வலைகளுமஉணங்கும்.
திரைபாக னாகத் திமில்களி றாகக் கரைசேர்ந்த கானல் படையா - விரையாது வேந்து கிளர்ந்தன்ன வேலைநீர்ச் சேர்ப்ப! நாள் ஆய்ந்து வரைதல் அறம். |
52 |
திரையே பாகனாகத் திமிலே களிறாகக் கரை சேர்ந்த கானலின் கண்ணுள்ள பல புட்களே படையாக வேந்து கிளர்ந்தன்ன வேலைநீர்ச் சேர்ப்பனே! விரையாதே நல்லநா ளாராய்ந்துஅறிந்து வரைந் திவளைக் கோடல் நினக் கறமாவது.
பாறு புரவியாப் பல்களிறு நீள்திமிலாத் தேறு திரைபறையாப் புட்படையாத் - தேறாத மன்கிளர்ந்த போலும் கடற்சேர்ப்ப! மற்றெமர் முன்கிளர்ந்|து எய்தல் முடி! |
53 |
பாறே குதிரையாக நீண்ட திமிலே பல களிறுகளாகத் தெளிந்த திரையே பறையாகப் புட்களே படையாகத் தேறாத வேந்துகள் படை யெழுந்து கிளர்ந்தன போலுங் கடற் சேர்ப்பனே! எமருடைய முன்னே சென்று இவளை நீயேபுணர்தலை முடிப்பாயாக.
வாராய் வான்நீர்க் கழிக்கானல் நுண்மணல்மேல் தேரின்மா காலாழும் தீமைத்தே - ஓரில்ஓர் கோள்நாடல் வேண்டா குறியறிவார்க் கூஉய்க் கொண்டோர் நாள் நாடி நல்குதல் நன்று. |
54 |
வாராதொழிவாயாக; வருவையாயின், நீர்க்கழிக்கானல்தான் நுண்மணன்மேல் நின்றேர் பூண்ட குதிரை காலாழுந் தீமையுடைத்து; ஆதலான், ஒத்த குலத்தார்க்குத் தொடர்ச்சி கோடலை ஐயுற் றாராய்தல் வேண்டா; நிமித்த மறிவாரை யழைத்து நல்லதொரு நாளை நாடிஇவட்கு நல்குதல் நன்று.
கண்பரப்பக் காணாய் கடும்பனி கால்வல்தேர் மண்பரக்கும் மாயிருள் மேற்கொண்டு - மண்பரக்கும் ஆறுநீர் வேலைநீ வாரல் வரின்ஆற்றாள் ஏறுநீர் வேலை எதிர். |
55 |
இவளுடைய கண்களும் மிக்க நீர் பரப்பக் காணாய்; கால்வலிய தேரில் மண்ணெல்லாம் பரக்கும் பெரிய இருண் மேற்கொண்டு உலகமெல்லாம் நிவந்த அலர் பரக்குமாறு, நீருண்ட வேலையையுடையாய்! வாரல்; வருவையாயின், இவளுயிர் வாழாள்: ஒதமேறாநின்ற நீர்வேலையினெதிரே.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், திணைமாலை, கீழ்க்கணக்கு, நூற்றைம்பது, பதினெண், வேண்டா, நல்குதல், சேர்ப்பனே, நன்று, தேறாத, மண்பரக்கும், வாரல், மேற்கொண்டு, புட்களே, காணாய், வருவையாயின், நாள், பாலிகை, சாலிகை, வெண்மணற், சங்க, பூக்கும், வேந்து, திரையே, வேலைநீர்ச், கிளர்ந்தன்ன, திமிலே