திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு

மண்கிடந்த வையகத்தோர் மற்றுப் பெரியராய் எண்கிடந்த நாளான் இகழ்ந்தொழுகப் - பெண்கிடந்த தன்மை யொழியத் தரள மூலையினாள் மென்மைசெய் திட்டாள் மிக. |
146 |
(எம்பெருமானே!) மண்வடிவமாகக் காணப்படும் பூமியில் வாழும் மக்கள் (பலர்) சான்றோராயிருந்தும் வறிதே எண்ணிக்கையளவிலேற்பட்ட வாழ்நாளிலே (தமது வாழ்க்கையின் சிறுமையினத் தலைமகளின் பெருந்தன்மைப் போக்கோடுஒப்பிட்டு நோக்கி அவளுக்குக்) கீழ்படிந்து நடக்கும் வண்ணம் பெண்ணின் மேன்மையானது தங்கியுள்ளதா லுண்டான மேட்டிமை நிலையானது தன்னைவிட்டு நீங்கும்படி முத்துமாலைகளை யணிந்துள்ள முலைகளையுடைய தலைமகள் மிக மிகுதியும் எளிமையும் இனிமையுமாகிய அன்பினை இல்லற வாழ்க்ககையிலே கைக்கொண்டு ஒழுகுவாளாயினள். (என்று தலைமகனிடத்தே வாயிலோன்கூறினான்.)
செங்கண் கருங்கோட்டு எருமை சிறுகனையால் அங்கண் கழனிப் பழனம்பாய்ந்து - அங்கண் குவளையம் பூவொடு செங்கயல்மீன் சூடி தவளையும்மேற் கொண்டு வரும். |
147 |
(தோழியே!) சிவந்த கண்களையும் கரிய கொம்புகளையும் எருமையானது சிறிய கனைப்புடனே அழகிய இடத்தையுடைய வயல்கள் மிகுந்த மருத நிலத்தூடே விரைந்து சென்று அழகிய கண்களைப் போன்ற நீலோற்பலமாகிய அழகிய பூக்களுடனே சிவந்த கயல் மீன்களையும் அணிந்து கொண்டு தவளையினையும் முதுகின்பேரிலே யுட்கர்ந்திருக்கும்படியாக வைத்துக் கொண்டு வருதலைச் செய்யும். (இஃதென்னே! என்று தலைவி தோழியினை நோக்கிக்கூறினாள்.)
இருள்நடந்தது அன்ன இருங் கோட்டு எருமை மருள்நடந்த மாப்பழனம் மாந்திப் - பொருள்நடந்த கற்பேரும் கோட்டால் கனைத்துதன் கன்றுள்ளி நெற்போர்வு சூடி வரும். |
148 |
(தோழியே!) இருளானது நடக்கலாயிற்றுப் போலும் என்று சொல்லும் படியான இரும் கோடு பெரிய கொம்புகளையுடைய எருமைகள் (கண்டார்க்கு வியப்பான்) மன மயக்கத்தைத் தரும்படியான சிறந்த மருதநில விளைபொருள்களாகிய குவளை முதலியவற்றை உண்டு சாரமாகிய உறுதித் தன்மை நிறைந்த கல்லினை பெயர்த்தற்குரிய கொம்புகளோடுகூடி தம்முடைய கன்றுகளை நினைத்து ஒலித்துக் கொண்டு நெற்கதிர்ப் போர்களை மேற் கொண்டு வாரா நிற்கும். (இஃதென்னே! என்று தலைவி தோழியிடங் கூறினாள்.)
புண்கிடந்த புள்மனுநுன் நீத்தொழுகி வாழினும் பெண்கிடந்த தன்மை பிறிதுஅரோ - பண்கிடந்து செய்யாத மாத்திரையே செங்கயல்போல் கண்ணினாள் நையாது தான்நாணும் ஆறு. |
149 |
(தலைவனே!) போர்ப்புண்கள் மிகப்பெற்ற நிமித்திகன் போன்று மக்கட்கு எதிர்கால வேற்பாடாகச் செய்திகளைக் கூறிச் சென்ற மனு வென்னும் பேரரசனது அற நெறியானது உன்னை நீங்கப் பெற்று (தீய வொழுக்கத்தை நீ) மேற்கொண்டு வாழதலைச் செய்தாலும் நின்னிசைப்பாக்கள் பொருந்தப் பெற்று பாணர்கள் பாடத் தொடங்குதற்கு முன்னரே. (தொடங்கிய வளவிலே) செவ்விய கயல் மீனினை போன்ற கண்களையுடைய தலைமகள் (ஊடலை மேற்கொண்டு) வருந்தாமல் வெட்க முறுகின்ற விதத்தாலே பெண்மையாகிய பேரரசுக் குணம் அவளிடம் பொருந்திக் கிடக்கும் போக்கு (இவ்வுலகெங்குங்காணவொண்ணாப்) புதிய காட்சியினைக் கொண்டதாகும். (என்று அறிவர் தலைவனை நோக்கிக்கூறினார்.)
கண்ணுங்கால் என்கொல் கலவையாழ்ப் பாண்மகனே! எண்ணுங்கால் மற்றுஇன்று இவளொடுநேர் - எண்ணின் கடல் வட்டத்து இல்லையால் கல் பெயர் சேராள் அடல் வட்டத்து ஆர்உளரேல் ஆம். |
150 |
பலபண்களையுங் கலந்து பாடும் யாழினையுடைய பாணணே! கருதுமிடத்து யாதாம் (ஒன்று மின்று) நீள நினைந்து பார்க்குமிடத்து இப்பொழுது (எனக்கின்பத்தைத் தரும்) இத் தலைமகளொடு ஒப்பானவரை கருதிப் பார்த்தால் கடலாற் சூழப்பட்ட மண்ணுலகத்தில் காண்பதற்கில்லையாம் நடுகல்லினிடத்தே பெயர் சேரப் பெறாதவளாய் வெற்றி மிக்க மேலுகத்திடத்தே (பொருந்தியுள்ள பெண் பாலருள்) யாரேனும் இருப்பாராயின் இவட்கு நேராவர். (என்றுதலைமகன் பாணனிடங் கூறினான்.)
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு, கொண்டு, இலக்கியங்கள், அழகிய, திணைமாலை, தன்மை, நூற்றைம்பது, பதினெண், கீழ்க்கணக்கு, கயல், இஃதென்னே, பெற்று, வட்டத்து, மேற்கொண்டு, பெயர், தலைவி, சூடி, தலைமகள், பெண்கிடந்த, சங்க, எருமை, அங்கண், தோழியே, வரும், சிவந்த