திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு

சேறாடுங் கிண்கிணிக்கால் செம்பொன்செய் பட்டத்து நீறாடும் ஆயதிவன் இல்முனா - வேறாய மங்கையரின் ஆடுமோ மாக்கோல்யாழ்ப் பாண்மகனே! எங்கையரின் ஆடலாம் இன்று. |
151 |
சிறந்த மூங்கிற் கோலையும் யாழினையுமுடைய பாணணே! (எனக்குப்பின்வந்த) தங்கைமாராகிய பரத்தைய ரோடு கூடி விளையாடுதற்குரிய இப்பொழுது சேறுகள் நிரம்பியிருக்கும் சிறு சதங்கையணியப் பெற்ற கால்களிலும் சிவந்த பொன்னாலே செய்யப்பட்ட நெற்றிச் சுட்டியிலும் புழுதி படியும் (தன்மை) பொருந்தியதனையுடைய இம்மகனோடு இல்லின் முகப்பிலே இவனினும் நயத்தால் வேறுபட்டு மேம்பட்ட பரத்தையரிடம் விளையாடுமாறு போல (தலைவன்) விளையாட விரும்புவானோ? விரும்பான். ஆகலின் நீ வீணே வாயில் கூறி வருந்த வேண்டாம்
முலையாலும் பூணாலும் முன்கண்தாம் சேர்ந்த இலையாலும் இட்ட குறியை - உலையாது நீர்சிதைக்கும் வாய்ப்புதல்வன் நிற்கும் உனைமுலைப்பால் தார்சிதைக்கும் வேண்டா தழூம். |
152 |
(தலைவனே!) பரத்தையர்கள் தம் முலைகளாலும் அணிகளாலும் முன்னே கலவிக்காலத்தே கைக் கொண்ட இளந்தளிர் களாலும் (நின் மார்பிற்) பொருத்திவைத்த குறியானது கெடாதவண்ணம் (என் எதிரே வந்து) தோன்றும் உனது மாலையினை உமிழ் நீரினைச் சிந்துகின்ற வாயினையுடைய என் மகன் (உண்ணும்) எனது மார்பின் கணுள்ள பாலானது (நீ என்னைத் தழுவினால்) வெளிப் பட்டுக் கெடுத்து விடும் (ஆகலின்) (என்னைத்) தழுவிக் கொள்ளுதல் வேண்டுவதின்று. (என்று தலைமகள் தலைவனை நோக்கிக் கூறினாள்.)
துனிபுலவி ஊடலின் நோக்குஎன் தொடர்ந்த கனிகலவி காதலினும் காணேன் -முனிஅகலின் நாணா நடுங்கும் நளிவய லூரனைக் காணாஎப் போதுமே கண். |
153 |
(தோழியே! தொடர்புடையதான இன்பமாகிய கனியினை (தலைமகனுடன்) கலத்தலோடு கூடிய அன்புமிக்க காலத்திலும் காணப் பெற்றேனில்லை (ஆகலின்) எனது வெறுப்பு நீங்குமாயின் (அப் பொழுது) வெட்கமுற்று (அதனால்) நடுங்கச் செய்யும் குளிர்ந்த மருத நிலத்தூர்த் தலைவனை என் கண்கள் எப்பொழுதும் காண விரும்ப வில்லை (அப்படியிருக்க) வருத்த மிக்க மனப் பிணக்கினை பொதுவான ஊடுதலினைப்போல எண்ணிப் பேசுதல் எதற்காக? (என்றுதலைமகள் தோழியைவினவினள்.)
சிறப்புப் பாயிரம்
முனிந்தார் முனிவு ஒழியச் செய்யுட்கண் முத்துக் கனிந்தார் களவியல் கொள்கைக் - கணிந்தார் இணைமாலை யீடிலா இன்தமிழால் யாத்த திணைமாலை கைவரத் தேர்ந்து. |
கணிந்தார் என்னும் கணி மேதாவியார் அகப் பொருளாகிய களவியற் போக்கினை வெறுத்தவர்களின் வெறுப்பு விலகும்படியாக அவ்வகப் பொருட் போக்குப் பலரின் ஒழுக்கமாக மீண்டுந் தோன்றும்படி தொடுக்கப் பெற்ற மலர் மாலையினைப் போன்ற சொன்னடை பொருணடைகளாலே (ஒப்புமை கூறுதற் கொரு மொழியு) மிணையாகாத இனிய தமிழ் மொழியினாலே இயற்றிய முத்துக்களைப் போன்ற வெண்பாச் செய்யுட்களில் திணைமாலை நூற்றைம்பது என்னும் நூலை ஆராய்ந்து கனிவுடன் கூறினார்.
திணைமாலை நூற்றைம்பது முற்றும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு, திணைமாலை, நூற்றைம்பது, இலக்கியங்கள், ஆகலின், கீழ்க்கணக்கு, பதினெண், வெறுப்பு, என்னும், தலைவனை, கணிந்தார், பெற்ற, சங்க, தமிழ், எனது, என்னைத்