சிறுபஞ்சமூலம் - பதினெண் கீழ்க்கணக்கு

பூத்தாலும் காயா மரம் உள; நன்று அறியார், மூத்தாலும் மூவார், நூல் தேற்றாதார்; பாத்திப் புதைத்தாலும் நாறாத வித்து உள; பேதைக்கு உரைத்தாலும் செல்லாது, உணர்வு. |
21 |
பூத்தாலுங் காயாத பாதிரி முதலாயின மரங்களுள, நன்மையை யறியாதார் ஆண்டுகளான் மூத்தாராயினும் மூவாதாரோ டொப்பர், நூறேற்றாதாருமப் பெற்றியர், பாத்தியின்கட் புதைத்தாலு முளையாதவித்துள, பேதையாயினார்க்குப் பிறருரைத்தாலு முணர்வு புகாது.
கருத்துரை: பூத்தாலுங்காயா மரம்போன்றவர் ஆண்டு முதிர்ந்ததும் அறிவு முதிராதவரும் நூல்களைக் கற்றுத் தெளியாதவரும் ஆவர். புதைத்தாலும் முளைக்காத விதையைப் போன்று அறிவிலானுக்கு எவ்வுரையாலும் அறிவுண்டாகாது.
வடிவு, இளமை, வாய்த்த வனப்பு, வணங்காக் குடி, குலம், என்ற ஐந்தும் குறித்த முடியத் துளங்கா நிலை காணார்; தொக்கு ஈர் பசுவால், இளங் கால் துறவாதவர். |
22 |
வடிவும் இளமையும் வாயத்த வனப்பும், தாழ்வில்லாத குடிப்பிறப்பும், நற்குலமும என்று சொல்லப்பட்ட இவ்வைந்தும் தாங்குறித்த நுகர்ச்சி நுகர்ந்து முடியுமளவு நிற்குநிலைமை யாவருங் காணமாட்டார். ஆதலாற் கூடியொருபாரத்தை இழுக்கு மெருதோ டொப்பர்; இளங் காலத்திலே துறவாதார்.
கருத்துரை: உருவு,இளம்பருவம், அழகு, உயர்குடி, உயர்குலம் இவ்வவைந்தும் முடிவுபோக நுகர்வது அருமையாதலால், இளம் பருவத்திலேயே துறவாதவர் பாரமிழுத்துச் செல் எருது என்றபடி.
கள் உண்டல், காணின் கணவற் பிரிந்து உறைதல், வெள்கிலளாய்ப் பிறர் இல் சேறல், உள்ளிப் பிறர் கருமம் ஆராய்தல், தீப் பெண் கிளைமை,- திறவது, தீப் பெண் தொழில். |
23 |
கள்ளுண்டலும், ஆராயுங்காற் றங்கணவனைப் புணர்ச்சி வேண்டாதே பிரிந்துறைதலும், நாணிலளாய்ப் பிறருடைய மனைக்கட் சேறலும், பிறர் கருமத்தை நினைத்துப் பிறருடனாலாய்தலும், தீப்பெண்ணினோடிணங்குதலு மென இவ்வைந்துந் தனக்கே கூறாகத் தீப்பெண்ணின் தொழில்.
கருத்துரை: கள்ளுண்டல் முதலிய ஐந்தும் தீப் பெண்ணின் தொழில் என்க. உண்டல், உறைதல், சேறல், ஆராய்தல் என்பன தொழிற் பெயர்கள்.
பெருங் குணத்தார்ச் சேர்மின்; பிறன் பொருள் வவ்வன்மின்; கருங் குணத்தார் கேண்மை கழிமின்; ஒருங்கு உணர்ந்து, தீச் சொல்லே காமின்; வரும் காலன், திண்ணிதே;- வாய்ச் சொல்லே அன்று; வழக்கு. |
24 |
பெருங்குணத்தாரைச் சென்றடைமின், பிறன் பொருளைக் கொள்ளன்மின், தீக்குணத்தாரோடு நட்பை விடுமின், எல்லாமுணர்ந்து பிறரைச் சொல்லுந் தீச்சொற்களைச் சொல்லாது காமின், காலன் வருகையுண்மையே, யாஞ் சொல்லுகின்ற எம்முடைய சொல்மாத்திரையேயன்று உலகின்கண் வழங்கி வருகின்ற வழக்காகக் கொள்க.
கருத்துரை: நற்குணமுடையாரைச் சேருங்கள், பிறன் பொருளைக் கவராதேயுங்கள், தீக்குணமுடையவரை ஒழியுங்கள், தீய சொற்களைப் பேசாதிருங்கள்; காலன் வருவன்; இஃது உண்மை.
வான் குரீஇக் கூடு, அரக்கு, வால் உலண்டு, நூல் புழுக்கோல், தேன் புரிந்தது, யார்க்கும் செயல் ஆகா; - தாம் புரீஇ, வல்லவர் வாய்ப்பன என்னார்; ஓரோ ஒருவர்க்கு ஒல்காது, ஓரொன்று படும். |
25 |
வாலிய தூக்கணாங்குருவி செய்யுங் கூடும், பேரெறும்புகளால் செய்யப்படுமரக்கும், வாலிய வுலண்டென்னும் புழுக்களால் நூற்ற நூலும், வேறொரு புழுவாற் செய்யப்பட்ட கோற்கூடும், தேனீயாற் றிரட்டப்பட்ட தேன் பொதியும் என இவ்வைந்தும் விரும்பியவர்க்குச் செய்ய முடியாவாதலால் எல்லாங்கற்று வல்லவர் நமக்கிவை வாய்ப்பச் செய்யலாமென்று கருதார்; ஒரோவொருவற்குச் செயலாற் குறைபடாதே யொரோவொரு செய்கையருமைகள் படுமாதலால்.
கருத்துரை: வான் குருவிக்கூடு முதலியவன்றறைச் செய்தற்கருமை கருதி அவற்றை எல்லாங்கற்று வல்லவரும் செய்யலாமென்று மனத்தினுங் கருதார் என்றது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிறுபஞ்சமூலம் - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்துரை, இலக்கியங்கள், தொழில், பிறர், சிறுபஞ்சமூலம், தீப், பதினெண், கீழ்க்கணக்கு, பிறன், காலன், காமின், சொல்லே, வல்லவர், செய்யலாமென்று, கருதார், எல்லாங்கற்று, வாலிய, வான், தேன், பொருளைக், சேறல், டொப்பர், ஐந்தும், புதைத்தாலும், நூல், சங்க, இளங், துறவாதவர், ஆராய்தல், உறைதல், உண்டல், இவ்வைந்தும், பெண்