சிறுபஞ்சமூலம் - பதினெண் கீழ்க்கணக்கு
வேட்டவன் பார்ப்பன்; விளங்கிழைக்குக் கற்பு உடைமை; கேட்பவன் கேடு இல் பெரும் புலவன்; - பாட்டு, அவன் சிந்தையான் ஆகும், சிறத்தல்; உலகினுள் தந்தையான் ஆகும், குலம். |
31 |
வேள்வியைச் செய்தவன் பார்ப்பானாவான், கற்புடையாள் விளங்கிழையாவாள், கேடில்லாத பெரும் புலவனாவான் பல நூல்களையும் பொருளுணரக் கேட்பவன், அப்புலவன் சிந்தையினழகாலே பாடும் பாட்டுச் சிறப்பது, உலகின்கண் ஒருவர்க்குக் குலமுடைமை தந்தையழகாலேயாம்.
கருத்துரை: வேள்வி செய்பவன் அந்தணனும், கற்புடையவள் பெண்ணும், நூற் கேள்வியுடையவன் புலவனும், ஆராய்ச்சியினியல்லது பாட்டும் தந்தையான் ஏற்படுவது குலமுமாகும்.
வைப்பானே வள்ளல்; வழங்குவான் வாணிகன்; உய்ப்பானே ஆசான், உயர் கதிக்கு; உய்ப்பான், உடம்பின் ஆர் வேலி ஒருப்படுத்து, ஊண் ஆரத் தொடங்கானேல், சேறல் துணிவு. |
32 |
ஈட்டி வைப்பானை வள்ளலாகக்கொள்ளப்படும், தான் பயனது கொள்ளாது பிறர்க்குப் பொருள்களைக் கொடுப்பவன் வாணிகனோ டொக்கும், அக்கொடையினாய பயன்விளைவு மறுமைக்குத் தனக்கு விளைத்துக் கோடலால் ஒருவர்க்கு ஆசிரியனாவான், அவனை யுயர்ந்த பிறப்பின் கண்ணே செலுத்த வல்லானடாத்தும் ஒழுக்கத்தால் உடம்பாகிய வேலியையுடைய உயிர்களைக் கொன்று ஒருப்படுத்துப்போக்கி, அவற்றினூனை யுண்ணத் தொடங்கானாயின் உயர்கதிக்குச் சேறல் உண்மையாம்.
கருத்துரை: பிறர்க்குப் பயன்படும்படி பொருளை யீட்டி வைப்பவன் வள்ளல், அவற்றைப் பயன் கருதி எவனேனும் வழங்குவானாயின் அவன் வாணிகனை யொப்பான், மாணாக்கனை உயர்கதிக்குச் செலுத்துபவனே ஆசிரியனாவான், மாணாக்கன் உயிர் கோறலும் ஊன் புசித்தலும் இல்லானானால் உயர்கதிக்குச் செல்லல் துணிவேயாம்.
வைததனான் ஆகும் வசை; வணக்கம், நன்று, ஆகச் செய்ததனான் ஆகும், செழுங் குலம்; முன் செய்த பொருளினான் ஆகும் ஆம், போகம்; நெகிழ்ந்த அருளினான் ஆகும் அறம். |
33 |
பிறனையொருவன் வைததனால் வசையாகும்; பிறர்க்கு வணக்கத்தையும், நன்மையையும் உளவாகச் செய்ததனால் வளமையுடைய குடிப்பிறப்பாம்; காலத்திலே முந்துறச்செய்த பொருளானின்பமாகும்; பிறர்க்குத் தன்மனம் நெகிழ்ந்த அருளினான் அறமாகும்.
கருத்துரை: பிறரைத் திட்டுதலாற் பழியும், வணக்கமும் நன்மையும் மேற்கொண்டிருத்தலாற் குலமேன்மையும், பொருளாற் போகமும், அருளால் அறமும் உண்டாகும்.
இல் இயலார் நல் அறமும், ஏனைத் துறவறமும், நல் இயலான் நாடி உரைக்குங்கால், நல் இயல் தானத்தான் போகம்; தவத்தான் சுவர்க்கம் ஆம்; ஞானத்தான் வீடு ஆகும் நாட்டு! |
34 |
மனைவாழ்க்கை யியற்கையை யுடையார் செய்த நல்லறமும், மற்றைத் துறந்தார் செய்யு நல்லறமும், நல்லவியலினாலே யாராய்ந் துரைக்குங்கால் நல்ல இயல்புடைய கொடையாற் செல்வ நுகர்ச்சியும் தவத்தாற் சுவர்க்க நுகர்ச்சியைப் பெறுவதும் மெய்யுணர்ச்சியார் வீடும் என்று நாட்டுக.
கருத்துரை: இல்லறத்தார் செய்த அறமும், துறவறத்தார் செய்த அறமும் ஆராயின். கொடையாற் செல்வ நுகர்ச்சியும் தவத்தாற் சுவர்க்கமும், ஞானத்தால் வீடும் பெறுவரென்பதாம்
மயிர் வனப்பும், கண் கவரும் மார்பின் வனப்பும், உகிர் வனப்பும், காதின் வனப்பும், செயிர் தீர்ந்த பல்லின் வனப்பும், வனப்பு அல்ல; நூற்கு இயைந்த சொல்லின் வனப்பே, வனப்பு. |
35 |
தலைமயிரான் வருமழகும், கண்டார் கண்ணைக் கவரு மார்பினால் வருமழகும், உகிரான் வருமழகும், காதினான் வருமழகும், குற்றந்தீர்ந்த பல்லினான் வருமழகும் என இவ்வைந்தழகும் ஒருவற்கு அழகல்ல; நூல்கட்குப் பொருந்திய சொல்வன்மையால் வரும் அழகே அழகாவது.
கருத்துரை: தலைமயிர், மார்பு, நகம், செவி, பல் இவற்றினழகினும் சொல்லழகே சிறந்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிறுபஞ்சமூலம் - பதினெண் கீழ்க்கணக்கு, ஆகும், கருத்துரை, வருமழகும், வனப்பும், இலக்கியங்கள், அறமும், செய்த, பதினெண், சிறுபஞ்சமூலம், கீழ்க்கணக்கு, உயர்கதிக்குச், நல்லறமும், கொடையாற், தவத்தாற், வனப்பு, வீடும், அருளினான், நுகர்ச்சியும், செல்வ, ஆசிரியனாவான், அவன், பெரும், கேட்பவன், சங்க, தந்தையான், குலம், போகம், பிறர்க்குப், சேறல், வள்ளல், நெகிழ்ந்த