சிறுபஞ்சமூலம் - பதினெண் கீழ்க்கணக்கு
பற்றினான், பற்று அற்றான் நூல், தவசி; எப் பொருளும் முற்றினான் ஆகும், முதல்வன்; நூல் பற்றினால் பாத்து உண்பான் பார்ப்பான்; பழி உணர்வான் சான்றவன் காத்து உண்பான் காணான், பிணி. |
6 |
பற்றற்றானாற் சொல்லப்பட்ட நூலைப் பற்றினான் தவசியாவான், எப்பொருளையுமுற்ற வறிந்தான் முதல்வனாவான், நூலின்கட் சொன்னபடியே பகுத்துண்பான் பார்ப்பானாவான், பழியை யுணர்வான் சான்றானாவான், தனக்கு நுகர்கலாகாதென்று சொல்லியவற்றை நுகராதே காத்து நுகர்வான் பிணிகாணான்.
கருத்துரை: கடவுள் நூலுணர்ந்தொழுகுபவன் தவமுடையன், எல்லா முணர்ந்தவன் தலைவன், பிறர்க்குப் பகுத்துக்கொடுத்துண்பவன் அந்தணன், பழியை விலக்கி யொழுகுபவன் பெரியோன், நல்லன தெரிந்துண்பவன் நோயறியான்.
கண் வனப்புக் கண்ணோட்டம்; கால் வனப்புச் செல்லாமை; எண் வனப்பு, 'இத் துணை ஆம்' என்று உரைத்தல்; பண் வனப்புக் கேட்டார், நன்று என்றல்; கிளர் வேந்தன் தன் நாடு வாட்டான், நன்று என்றல் வனப்பு. |
7 |
கண்ணிற்கு வனப்பாவது பிறர்மேற் கண்ணோடுதல், காலிற்கு வனப்பாவது பிறர் மாட்டிரந்து செல்லாமை, ஆராய்ந்து சூழுஞ் சூழ்ச்சிக்கு வனப்பாவது இவ்வளவு இன்னதென்று துணிந் துரைத்தல், பாடும் பண்ணிற்கு வனப்பாவது கேட்டார் நன்றென்றல், படை கிளர்ந்தெழும் வேந்தற்கு வனப்பாவது தானாளும் நாட்டினை வருத்தான் மிகவும் நன்றென்றல்.
கருத்துரை: கண்ணுக் கழகு கண்ணோட்டம், காலுக்கழகு இரந்து செல்லாமை, ஆராய்ச்சிக் கழகு பொருளைத் துணிந்து சொல்லுதல், இசைக் கழகு கேட்பவர் அவனைப் புகழ்தல், அரசனுக்கழகு குடிகற் அவனை நல்லவ னென்றல்.
கொன்று உண்பான் நாச் சாம்; கொடுங் கரி போவான் நாச் சாம்; நன்று உணர்வார் முன் கல்லான் நாவும் சாம்; ஒன்றானைக் கண்டுழி, நாச் சாம்; கடவான் குடிப் பிறந்தான் உண்டுழி, நாச் சாம், உணர்ந்து. |
8 |
உயிர்களைக் கொன்றுண்பானுடைய நாச்சாம், ஒருவர் பாங்கிலே நின்று பொய்ச்சான்று போவானுடைய நாவுஞ்சாம், மிகக் கற்றுணர்ந்தோர் முன்பொரு மறுமாற்றஞ் சொல்லமாட்டாது கல்லாதானுடைய நாவுஞ்சாம், தனிசு வேண்டிவந்தா னொருவனைக் கண்டால் தனிசு கொண்டவனுடைய நாவுஞ்சாம், குடிப்பிறந்தா னொருவ னுடைய நா ஒருவனுதவி பெற்ற விடத்து அவ்வுதவி செய்தான் திறந்து ஒரு தீமை சொல்லமாட்டாது மற்றவன் செய்த நன்றியை நினைத்துச்சாம்.
கருத்துரை: புலாலுண்போன் முதலியவர்களின் நாக்கள் சாம். கொன்றுண்பவனது நாவைக் காலதூதுவர் அறுத்தெடுப்பாராதலின், “கொன்றுண்பான் நாச்சாம்“ என்றார்.
சிலம்பிக்குத் தன் சினை கூற்றம்; நீள் கோடு விலங்கிற்குக் கூற்றம்; மயிர்தான் வலம் படா மாவிற்குக் கூற்றம் ஆம்; ஞெண்டிற்குத் தன் பார்ப்பு; நாவிற்கு நன்று அல் வசை. |
9 |
சிலம்பிக்குத் தன் முட்டை சாக்காட்டைக் கொடுக்குமாதலாற் கூற்றமாம், நீண்டதங்கொம்புகள் துன்பங் கொடுக்குமாதலால் விலங்கிற்கும் அவையே கூற்றமாம், வென்றியில்லாத கவரிமாவிற்குச் சாக்காட்டைக் கொடுக்குமாதலால் அதற்குத் தன் மயிரே கூற்றமாம், ஞெண்டிற்குச் சாக்காட்டைக் கொடுக்குமாதலால் ஆதற்குத் தன்பார்ப்பே கூற்றமாம், ஒருவனது நாவிற்குப் பழியைமக் கொடுக்குமாதலாற் பிறரை நன்றல்லாத வசை சொல்லுதல் கூற்றமாம். கருத்துரை: சிலந்திப் பூச்சிக்கு அதன் முட்டையும், மிருகங்களுக்கு அவற்றின் நீண்ட கொம்புகளும், கவரிமானுக்கு அதன் மயிரும், நண்டுக்கு அதன் குஞ்சுகளும், ஒருவனுடைய நாவிற்கு வசை மொழியும் எமனாகும்.
நாண் இலான் சால்பும், நடை இலான் நல் நோன்பும், ஊண் இலான் செய்யும் உதாரமும், ஏண் இலான் சேவகமும், செந்தமிழ் தேற்றான் கவி செயலும்,- நாவகம் மேய் நாடின் நகை. |
10 |
நாணில்லாதவன் அமைதியும், சீலங்களைச் செய்யாதான் கொள்ளு நல்ல நோன்பும், தனக் குண்ணும் பொருளில்லாதான் செய்யும் வண்மையும், வலியில்லாதான் சொல்லும் வீரமும், செந்தமிழறியாதான் கவியைச் செய்தலுமென இவ்வைந்தும் நாவகத்தாலே மேவியாராயின் நகையாம்.
கருத்துரை: நாணமில்லாதவன் அமைதி, நன்னடையில்லாதவன் நோண்பு, உண் பொருளில்லாதவன் ஈகை, வலியில்லாதவன் வீரம், செந்தமிழ்த் தேர்ச்சியில்லாதவன் கவி பாடுதல் என்னும் இவ்வைந்தும் பயனிலை என்பதாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிறுபஞ்சமூலம் - பதினெண் கீழ்க்கணக்கு, சாம், கூற்றமாம், கருத்துரை, வனப்பாவது, இலக்கியங்கள், நன்று, இலான், நாச், சிறுபஞ்சமூலம், கீழ்க்கணக்கு, கூற்றம், கொடுக்குமாதலால், பதினெண், சாக்காட்டைக், நாவுஞ்சாம், கழகு, செல்லாமை, உண்பான், கொடுக்குமாதலாற், காத்து, நாவிற்கு, நூல், பற்றினான், இவ்வைந்தும், செய்யும், நோன்பும், பழியை, தனிசு, சொல்லுதல், நன்றென்றல், வனப்பு, என்றல், கண்ணோட்டம், வனப்புக், கேட்டார், சொல்லமாட்டாது, சங்க, சிலம்பிக்குத்