பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு
உரிஞ்சி நடப்பாரை, உள் அடி நோவா, நெருஞ்சியும் செய்வது ஒன்று இல்லை;-செருந்தி இருங் கழித் தாழும் எறி கடல் தண் சேர்ப்ப! பெரும் பழியும் பேணாதார்க்கு இல். |
41 |
செருந்திமரங்கள் பெரிய உப்பங்கழியின்கண் தாழ்ந்துவிளங்கும் அலைகளை வீசுகின்ற குளிர்ந்த கடல் நாடனே! அஞ்சாது உராய்ந்து நடப்பவர்களை அவர் உள்ளங் கால்கள் வருந்தும்படி நெருஞ்சிமுள்ளும் ஊறு செய்வதில்லை மிக்கபழியும் தன்னை அஞ்சிப் பாதுகாவாதவர்களுக்குமனவருத்தம் செய்தல் இல்லை.
கருத்து: நல்லோர் பழிக்கு அஞ்சுவர்,தீயோர் அஞ்சார்.
ஆவிற்கு அரும் பனி தாங்கிய மாலையும், 'கோவிற்குக் கோவலன்' என்று, உலகம் கூறுமால் தேவர்க்கு, மக்கட்கு, என வேண்டா தீங்கு உரைக்கும் நாவிற்கு நல்குரவு இல். |
42 |
பசுக்கூட்டங்கட்கு வந்த அரிய துன்பத்தை நீக்கிய திருமாலையும் ஆநிரைகளுக்குத் தக்க இடையன் என்று உலகம் சொல்லா நிற்கும். (ஆகையால்) தேவர்க்கு மக்கட்கு எனல் வேண்டா - தேவர்க்கு உரைப்பது இது மக்கட்கு உரைப்பது இது வெனல் வேண்டப்படுவதன்று தீமையை எடுத்துக்கூறும் நாவினுக்கு வறுமை இல்லையாகலான்
கருத்து: பழித்துரைக்கப் புகுவார்க்கு உயர்ந்தோர் தாழ்ந்தோர்என்பதில்லை.
6. இன்னா செய்யாமை
பூ உட்கும் கண்ணாய்!-'பொறுப்பர்' எனக் கருதி, யாவர்க்கே ஆயினும் இன்னா செயல் வேண்டா தேவர்க்கும் கைகூடாத் திண் அன்பினார்க்கேயும், நோவச் செயின், நோயின்மை இல். |
43 |
தாமரையும் (ஒப்பாதற்கில்லையே யென்று) வருந்தும் கண்ணை உடையாய்! தேவர்களுக்கும் இயலாதகாழ்த்த அன்புடையார்க்காயினும் துன்புறுத்தினால் துன்புறாதிருப்பது இல்லை (பொறுமையிலராவார்.) (ஆகையால்) பொறுப்பார் எனக்கருதி - எத்துணைத் தீங்கு செயினும் பொறுமையுடன் இருப்பார்கள் என்று தாமே நினைத்து எத்துணை எளியராயினும் தீங்கினைச் செய்தல் வேண்டாவாம்.
கருத்து: எவர்க்குந்தீங்கியற்றல் வேண்டா.
வினைப் பயம் ஒன்று இன்றி, வேற்றுமை கொண்டு, நினைத்துப் பிறர் பனிப்ப செய்யாமை வேண்டும் புனப் பொன் அவிர் சுணங்கின் பூங் கொம்பர் அன்னாய்! தனக்கு இன்னா, இன்னா பிறர்க்கு. |
44 |
புனத்திற்படும் பொன்போல விளங்கும் தேமலையுடைய பூங் கொம்பை யொப்பாய்! தனக்குத் துன்பந்தருவன பிறருக்குந் துன்பந் தருவனவாம் (ஆதலால்) செய்கின்ற செயலிற் பயனொரு சிறிதுமில்லாமல் பகைமை ஒன்றே கொண்டு ஆராய்ந்து பிறர்வருந்தத் தக்கனவற்றைச் செய்தலை ஒழிதல் வேண்டும்.
கருத்து: பிறரையும்தம்மைப்போல நினைத்துத் தீங்கு செய்யாதிருத்தல்வேண்டும்.
'ஆற்றார் இவர்' என்று, அடைந்த தமரையும், தோற்ற, தாம் எள்ளி நலியற்க!-போற்றான், கடை அடைத்து வைத்து, புடைத்தக்கால், நாயும் உடையானைக் கவ்வி விடும். |
45 |
காப்பாற்றாதவனாகி வாயிலை அடைத்து வைத்து அடித்தவிடத்து நாயும் தன்னை உடையானைக் கவ்வித் துன்புறுத்தும். (ஆகையால்) தம்மையடைந்த சுற்றத்தார்களையும் நம்மை எதிர்க்க வலியிலர் என்று நினைத்து பிறருக்கு வெளிப்படுமாறு தாம் ஒருவரையும் இகழ்ந்து துன்புறுத்தா தொழிக.
கருத்து: நம்மையடைந்தசுற்றத்தார்களை இகழ்ந்து நலியாதிருத்தல் வேண்டும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, இன்னா, இலக்கியங்கள், வேண்டா, மக்கட்கு, தேவர்க்கு, பழமொழி, தீங்கு, வேண்டும், நானூறு, பதினெண், ஆகையால், கீழ்க்கணக்கு, இல்லை, தாம், பூங், இகழ்ந்து, அடைத்து, வைத்து, நாயும், கொண்டு, உடையானைக், நினைத்து, கடல், தன்னை, செய்தல், சங்க, உரைப்பது, செய்யாமை, ஒன்று, உலகம்