பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு

7. வெகுளாமை
இறப்பச் சிறயவர் இன்னா செயினும், பிறப்பினால் மாண்டார் வெகுளார்;-திறத்து உள்ளி நல்ல விறகின் அடினும், நனி வெந்நீர் இல்லம் சுடுகலா வாறு. |
51 |
குடிப்பிறப்பினால் மிகவும் இழிந்தவர்கள் துன்பந்தருஞ் செயல்களைச் செய்தாராயினும் குடிப்பிறப்பினால் மாட்சிமைப் பட்டவர்கள் சினத்தலிலர் கூறுபாடாக ஆராய்ந்து நல்விறகினைக்கொண்டு காய்ச்சினும் மிகவும் வெப்பமாகிய நீர் வீட்டினை எரிக்க முடியாதவாறுபோலும்.
கருத்து: கீழ்மக்கள்செய்யும் துன்பத்தால் மேன்மக்கள் சினங் கொள்ளுதல்இல்லை.
'ஆறாச் சினத்தன் அறிவு இலன்; மற்று அவனை மாறி ஒழுகல் தலை' என்ப;-ஏறி வளியால் திரை உலாம் வாங்கு நீர்ச் சேர்ப்ப! தெளியானைத் தேறல் அரிது. |
52 |
காற்றால் கரைமீது ஏறித் திரைகள் வீசுகின்ற வளைந்த கடல் நாடனே! மனத்தின்கண் தெளிதல் இல்லாதவனை நம்புதல் முடியாது. (அதுபோல) ஆறாச்சினத்தன் அறிவிலன் - மாறாத வெகுளியை உடையான் (ஆனால்) அறிவு இல்லாதவன் (அவனோடு சேர்ந்திருத்தல் முடியாது ஆதலால்) அவனை நீங்கி ஒழுகுதல் சிறந்ததென்று சொல்லுவர்நல்லோர்.
கருத்து: மிக்கசினம் உடையாரோடு சேர்ந்திருத்தல் இயலாது.
உற்றதற்கு எல்லாம் உரம் செய்ய வேண்டுமோ? கற்று அறிந்தார்தம்மை வெகுளாமைக் காப்பு அமையும்; நெல்செய்யப் புல் தேய்ந்தாற்போல, நெடும் பகை, தற் செய்ய, தானே கெடும். |
53 |
நெற்பயிரைச் செய்தலினால் வயலிலுள்ள புல் தானே அழிந்தாற் போல் தீராப்பகை ஒருவன் தன்னை வலிமையுறச் செய்தலால் அப்பகை தானே அழிந்து விடும் கற்றறிந்தவர்கள் நேரிட்ட இடையூற்றிற்கெல்லாம் தனித்தனியே தம்மை வலிசெய்யவேண்டுமோ? (வேண்டுவது இல்லை) தம்மைச் சினத்தினின்றும் காத்தலே அமையும்.
கருத்து: கற்றறிந்தார் வெகுளாதொழியவே எல்லாத் தீமைகளும் தாமேஅழிந்தொழிதல் உறுதியாம்.
எய்தா நகைச் சொல் எடுத்து உரைக்கப்பட்டவர் வைதாராக் கொண்டு விடுமர்மன்; அஃதால் புனல் பொய்கை ஊர விளக்கு எலி கொண்டு தனக்கு நோய் செய்துவிடல். |
54 |
நீர் நிறைந்த பொய்கை சூழ்ந்த மருதநிலத் தலைவனே! பொருந்தாத இகழ்தற்குரிய சொற்களைப் பிறரால் எடுத்து உரைக்கப்பட்டவர் அவர் தம்மை இகழ்ந்ததாகக் கொள்வர் அறிவிலார் அங்ஙனம் இகழ்ந்ததாகக் கொள்ளுதல் விளக்கினை எலி இழுத்துச் சென்று (தம்மைப் பிறருக்கு விளக்கிக் காட்டுதலால்)தனக்குத் துன்பத்தினைச் செய்துகொள்ளுதலை ஒக்கும்.
கருத்து: அறிவிலார் துன்பத்தைத் தாமே தேடிக் கொள்வர்.
தெரியாதவர் தம் திறன் இல் சொல் கேட்டால், பரியாதார் போல இருக்க - பரிவு இல்லா வம்பலர் வாயை அவிப்பான் புகுவரே அம்பலம் தாழ்க் கூட்டுவார். |
55 |
அறிவில்லாருடைய (அவர் தம்மை இகழ்ந்து கூறும்) திறமையில்லாச் சொற்களைக் கேட்டால் துன்புறாதவர்களைப்போல் பொறுத்திருக்க (அங்ஙனமன்றி) அன்பில்லாத அயலார் வாயை அடக்கப் புகுவார்களோ? இல்லை பொது இடத்தைத் தாழ்இடுவாரோடு ஒப்பார்.
கருத்து: அறிவில்லாருடைய வாயை அடக்குதல் முடியாது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, இலக்கியங்கள், தானே, நானூறு, பழமொழி, முடியாது, தம்மை, வாயை, பதினெண், கீழ்க்கணக்கு, உரைக்கப்பட்டவர், கொண்டு, பொய்கை, கொள்வர், கேட்டால், அறிவில்லாருடைய, அறிவிலார், எடுத்து, இகழ்ந்ததாகக், அவர், அமையும், நீர், மிகவும், குடிப்பிறப்பினால், சங்க, அறிவு, அவனை, இல்லை, புல், செய்ய, சேர்ந்திருத்தல், சொல்