பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு
பொற்பவும் பொல்லாதனவும், புணர்ந்திருந்தார் சொல் பெய்து உணர்த்துதல் வேண்டுமோ?-விற் கீழ் அரி தாய்ப் பரந்து அகன்ற கண்ணாய்!-அறியும், பெரிது ஆள்பவனே பெரிது. |
31 |
வில்லைப்போன்ற புருவத்தின்கீழ்ச் செவ்வரி படர்ந்திருக்கின்ற மிகவும் அகன்ற கண்ணை உடையாய்! நன்மையையும் தீமையையும் நிரல்படப் புனைந்து மருங்கு இருந்தார் சொற்களால் கூறவும் வேண்டுமோ? எல்லாவற்றையும் தன்வயமாக நடத்தும் அவனே நன்மை தீமைகளை மிகவும்அறிவான்.
கருத்து: கற்றறிந்தவன் எல்லாவற்றையும் தானே பகுத்தறிந்துநடப்பான்.
பரந்த திறலாரைப் பாசி மேல் இட்டு, கரந்து மறைக்கலும் ஆமோ? - நிரந்து எழுந்து வேயின் திரண்ட தோள், வேற்கண்ணாய்! விண் இயங்கும் ஞாயிற்றைக் கைம் மறைப்பார் இல். |
32 |
நிரல்பட உயர்ந்து மூங்கில் போன்ற திரண்ட தோள்களையும் வேல்போன்ற கண்களையும் உடைய பெண்ணே! வானிற் செல்லும் சூரியனைக் கையால் மறைப்பவர்கள் இல்லை (மறைக்க முடியாது.) (அதுபோல) மிகுந்த அறிவு ஆற்றல் உடையவர்களை பாசியைப்போன்ற அடாத சில சொற்களையும் செயல்களையும் அவர் மேலிட்டு அவர் புகழை மறைத்து ஒளிக்கவும் முடியுமோ? (மறைக்க முடியாது.)
கருத்து: அறிவுடையார் புகழைமறைப்பின் மறைபடாது என்பதாம்.
அரு விலை மாண் கலனும், ஆன்ற பொருளும், திரு உடையராயின், திரிந்தும்-வருமால் பெரு வரை நாட! பிரிவு இன்று, அதனால் திருவினும் திட்பம் பெறும். |
33 |
பெரிய மலைநாட்டை உடையவனே! செல்வம் உடையவர்களுக்கு ஆயின் (அவர்தம்) அரிய விலையுடைய மாட்சிமைப்பட்ட பூண்களும் நிறைந்த செல்வமும் நிலைபெறாது மாறி வரும் இயல்பை உடையன (அறிவுச் செல்வம் உடையோர்க்கு ஆயின் அவர் தம் செல்வம்) பிரிதலில்லை அத்தன்மையால் செல்வத்தினும் அறிவே உயர்வைப் பெறும்.
கருத்து: அறிவுச்செல்வம் பொருட்செல்வம்போல் பிரிதலில்லாமையால் அதனையேதேடுதல் வேண்டும்.
5. ஒழுக்கம்
விழுத் தொடையர் ஆகி விளங்கி, தொல் வந்தார் ஒழுக்கு உடையர் ஆகி ஒழுகல்,-பழத் தெங்கு செய்த்தலை வீழும் புனல் ஊர்!-அஃதன்றோ நெய்த்தலைப் பால் உக்கு விடல். |
34 |
தெங்கம்பழம் வயலின்கண் விழுகின்ற நீர் நிறைந்த மருதநிலத்தலைவனே! சிறந்த தொடர்ச்சியைஉடையாரை உடையது ஆகிப் புகழால்விளக்கம் உற்றுத்தொன்றுதொட்டு வந்த குடியின்கட் பிறந்தார் தத்தமக்குரிய ஒழுக்கத்தினை உடையராகிக் குடிக்கேற்ப ஒழுகுதல் ஆவின் நெய்யிடத்து ஆவின்பாலை ஊற்றிவிடல் போல்அஃது இனிமையைத்தரும் அல்லவா?
கருத்து:தங்குடிக்கேற்ப நல்லொழுக்கினனாய் ஒழுகுதல் இனிமையைப்பயப்பதாகும்.
கள்ளி அகிலும், கருங் காக்கைச் சொல்லும்போல், எள்ளற்க, யார் வாயும் நல் உரையை!-தெள்ளிதின் ஆர்க்கும் அருவி மலை நாட! நாய் கொண்டால், பார்ப்பாரும் தின்பர் உடும்பு. |
35 |
தெளிவாக ஒலிக்கும் அருவியை உடைய மலை நாடனே! நாய் கதுவியதாயினும் உடும்பின் தசையை உயர்வு கருதி உண்பர் கள்ளியினிடம் பிறக்கும் அகிலையும் கரிய காக்கையது சொல்லையும் பிறந்த இடம்நோக்கி இகழாது உயர்வாகக் கொள்ளுமாறுபோல கீழாயினார் வாயிற் பிறந்ததேயாயினும் நல்லுரையாயின் இகழாது ஒழிக. (போற்றுதல்செய்க.)
கருத்து: சிறந்த பொருள்களைஇழிந்தார் கூறினராயினும் இகழாது போற்றுதல் வேண்டும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, இலக்கியங்கள், செல்வம், பழமொழி, நானூறு, பதினெண், அவர், கீழ்க்கணக்கு, இகழாது, ஆயின், நிறைந்த, ஒழுகுதல், நாய், பெறும், சிறந்த, வேண்டும், உடைய, அகன்ற, வேண்டுமோ, சங்க, பெரிது, எல்லாவற்றையும், மறைக்க, திரண்ட, முடியாது