பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு

தம் நடை நோக்கார், தமர் வந்தவாறு அறியார், செந் நடை சேராச் சிறியார்போல் ஆகாது, நின் நடையானே நடஅத்தா! நின் நடை நின் இன்று அறிகிற்பார் இல். |
36 |
அத்தனே! நினது ஒழுக்கத்தை உன்னிடத்தினின்றும் அறிதலுடையார் இல்லை (நீயே அறிவாய் ஆகையால்) தமது ஒழுக்கத்தை ஆராய்தலிலராய்த் தம் சுற்றத்தார் ஒழுகிவந்த வரலாற்றையும் அறிதலிலராய் செவ்விய நடையைச் சேராத அறிவிற் சிறியார் போல் ஒழுகாது நினக்கு விதிக்கப்பட்ட நின்குடிக்கேற்ற ஒழுக்கத்தின்படியேஒழுகக் கடவாயாக.
கருத்து:ஒவ்வொருவரும் தத்தம் குடிக்கேற்ப ஒழுகுதல் வேண்டும்.
நீர்த்து அன்று ஒருவர் நெறி அன்றிக் கொண்டக்கால், பேர்த்துத் தெருட்டல் பெரியார்க்கும் ஆகாதே கூர்த்த நுண் கேள்வி அறிவுடையார்க்கு ஆயினும், ஓர்த்தது இசைக்கும் பறை. |
37 |
உடுக்கை நாம் நினைத்த ஓசையையே ஒலியாநிற்கும் (அதுபோல) கூரிய நுட்பமான நூற்பொருளைக் கேட்டுணர்ந்த இயற்கையறிவு உடையவர்களுக்கேயானாலும் நீர்மையுடையது அன்று (என்று) அவருள் ஒருவர் முறைபிறழ்ந்து கருதிய இடத்து மீண்டும் அவரைத் தெளிவித்தல் தவத்தால் பெரியவர்களுக்கும் முடியாது. (அவர் கொண்ட கொள்கையின் கண்ணேயே நிற்பர்.)
கருத்து: பிறர்ஐயுறாவண்ணம் ஒழுகுதல் வேண்டும்.
தம் குற்றம் நீக்கலர் ஆகி, பிறர் குற்றம் எங்கெங்கும் தீர்த்ததற்கு இடை புகுதல்-எங்கும் வியன் உலகில் வெள்ளாடு தன் வளி தீராது, அயல் வளி தீர்த்து விடல். |
38 |
(அறிவிலார்) தாம் செய்த குற்றத்தைப் போக்காதவர்களாகி பிறருடைய குற்றங்களைத் தீர்க்கும் பொருட்டு எங்கெங்கும் சென்று புகுதல் அகன்ற உலகின்கண் எவ்விடத்தும் வெள்ளாடு தனது வளியான் உண்டாய நோயைத் தீர்க்காது பிற உயிர்களுக்கு வாதத்தான் வரும் நோயைத்தீர்த்து விடுதலோ டொக்கும்.
கருத்து: ஒவ்வொருவரும் தத்தம் குற்றங்களைப் போக்கிய பின்னரே பிறர் குற்றங் களையமுற்படுதல் வேண்டும்.
கெடுவல் எனப்பட்டக் கண்ணும், தனக்கு ஓர் வடு அல்ல செய்தலே வேண்டும்;-நெடு வரை முற்று நீர் ஆழி வரையகத்து ஈண்டிய கல் தேயும்; தேயாது, சொல். |
39 |
பெரிய சக்கரவாளமாகிய மலைகளால் சூழப்பட்ட நீரை உடைய கடலால் வரையறுக்கப்பட்ட பூமியின்கண் தொக்க மலைகள் தேய்வடையும் பழிச்சொல் மாறுதலில்லை. (ஆகையால்) (இவர்க்கு இத்தீங்கு செய்து பழியை எய்தாதொழியின்) யான் கெடுவேன் என்று கருதப்பட்ட இடத்தும் தனக்கு ஒருசிறிதும் பழியைப் பயவாத செயல்களைச் செய்தலையே ஒவ்வொருவனும் விரும்புதல்வேண்டும்.
கருத்து: தான் அழிய வரினும்பழியொடு பட்டவைகளைச் செய்யவேண்டா.
பொருந்தாப் பழி என்னும் பொல்லாப் பிணிக்கு மருந்து ஆகி நிற்பதாம் மாட்சி-மருந்தின் தணியாது விட்டக்கால், தண் கடல் சேர்ப்ப! பிணி ஈடு அழித்து விடும். |
40 |
குளிர்ந்த கடல் நாடனே! (ஒருவர் கொண்ட நோயை) மருந்துகொண்டு நீக்காவிட்டால் அந்நோய் அவரது வலியைப் போக்கிவிடும். (ஆதலால்) பொருத்தமில்லாத பழி எனப்படும் தீய நோய்க்கு அந் நோயைத் தீர்க்கும் பொருளாக நிற்பது ஒழுக்கமேயாம்; (அதுகொண்டு நீக்குதல் வேண்டும்.)
கருத்து: ஒருவன் தான் கொண்டபழியை ஒழுக்கத்தாலன்றி நீக்கமுடியாது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, வேண்டும், இலக்கியங்கள், பதினெண், ஒருவர், பழமொழி, நானூறு, கீழ்க்கணக்கு, நின், கடல், புகுதல், எங்கெங்கும், வெள்ளாடு, தனக்கு, பிறர், நோயைத், தீர்க்கும், தான், அன்று, ஆகையால், ஒழுக்கத்தை, சங்க, ஒவ்வொருவரும், தத்தம், கொண்ட, ஒழுகுதல், குற்றம்