பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு
4. அறிவுடைமை
அறிவினால் மாட்சி ஒன்று இல்லா ஒருவன் பிறிதினால் மாண்டது எவனாம் - பொறியின் மணி பொன்னும், சாந்தமும், மாலையும், மற்று இன்ன அணி எல்லாம், ஆடையின் பின். |
26 |
சாணையாற் கழுவுதலையுடைய இரத்தினாபரணமும் பொன்னாபரணமும் கலவையும் பூமாலையும் இவைபோன்ற பிற அணிகள் யாவும் அழகுறச் செய்வதில் உடையின் பின்னேவைத்து எண்ணத்தக்கனவாம். ஆதலால் அறிவினாலாகிய பெருமை ஒருசிறிதும் பெறாத ஒருவன் செல்வத்தைப் பெற்றதனால் மாட்சிமையுடையதனால் அவனுக்கு என்ன பெருமையைக் கொடுக்கும்?
கருத்து: செல்வம்உடையோரினும் அறிவுடையாரே சிறந்தோர் ஆவர்.
ஆயிரவ ரானும் அறிவிலார் தொக்கக்கால், மா இரு ஞாலத்து மாண்பு ஒருவன் போல்கலார் பாய் இருள் நீக்கும் மதியம்போல், பல் மீனும், காய்கலா ஆகும் நிலா. |
27 |
பரவிய இருளைப் போக்கும் சந்திரனைப்போல பல விண்மீன்கள் ஒன்றுகூடினும் நிலவை எறிக்கமாட்டா. (அதுபோல) அறிவு இல்லாதவர்கள் ஆயிரம்பேர் திரண்டனராயினும் பெருமையை உடைய பெரிய இவ்வுலகின் கண அறிவினால் மாட்சிமைப்பட்ட ஒருவனைப்போல் விளங்கார்.
கருத்து: அறிவிலார் பலர் திரண்டாலும் அறிவுடையான் ஒருவனைஒவ்வார்.
நற்கு அறிவு இல்லாரை நாட்டவும் மாட்டாதே, சொல் குறிகொண்டு துடி பண்ணுறுத்ததுபோல் வெற்பு அறைமேல் தாழும் விலங்கு அருவி நல் நாட! கற்றறிவு போகா கடை. |
28 |
மலையினின்றும் பாறையின்மேல் விழும் விளங்குகின்ற அருவி பாயும் நல்ல நாட்டை உடையவனே! சொல்லால் குறிக்கப்படும் பொருளை உடுக்கையைக் கொண்டு (அதன் கண்) பண் உண்டாக்குவதைப்போல மிகவும் இயற்கையறிவு இல்லாரை கல்வி யறிவைப் போதித்ததனால் சிறந்தவனாக நிலைநாட்ட முடியாது. (ஆகையால்) நூல்களைக் கற்றலால் ஆகிய அறிவு முற்றிலுஞ்செல்லாது.
கருத்து: கல்வியறிவோடு இயற்கை யறிவும் உடையான் சிறந்து விளங்குவான்.
ஆணம் உடைய அறிவினார் தம் நலம் மானும் அறிவினவரைத் தலைப்படுத்தல்,- மான் அமர்க் கண்ணாய்!-மறம் கெழு மா மன்னர், யானையால் யானை யாத்தற்று. |
29 |
மான் விரும்பும் கண்ணை உடையாய் மனத்திட்பம் உடைய அறிஞர்கள் தம்மைக் கல்வி யறிவால்ஒத்த அறிஞர்களைத் தம்முடன் சேர்த்துக்கொள்ளுதல் வீரம் பொருந்திய பேரரசர்கள் யானையைக் கொண்டு யானைகளைப் பிடித்ததனோ டொக்கும்.
கருத்து: அறிவுடையார் அறிவுடையாரையே சேர்த்துக் கொள்வர்.
தெரிவு உடையாரோடு, தெரிந்து உணர்ந்து நின்றார், பரியாரிடைப் புகார், பண்பு அறிவார், மன்ற விரியா இமிழ் திரை வீங்கு நீர்ச் சேர்ப்ப அரிவாரைக் காட்டார் நரி. |
30 |
பரவி ஒலிக்கின்ற அலைகள் மிகுதியும் உடைய கடற்கரையை உடையவனே! நெல்லரிவோர்களுக்கு (அவ்வேலை கெடும்படி) நரியைக் காண்பியார் (அதுபோல) ஆராய்ச்சி உடையாருடன் ஆராய்ந்து உண்மை கண்டுணர்ந்தார் நுண்ணறிவு இல்லாரிடம் செல்லார் அவர் குணங்களை ஒருதன்மையாக அறிவார் ஆதலான்.
கருத்து: அறிவுடையார் தம் போன்றாரைஅறிவிலாரிடம் அழைத்துச் செல்லார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, உடைய, இலக்கியங்கள், ஒருவன், பதினெண், கீழ்க்கணக்கு, கல்வி, நானூறு, அறிவு, பழமொழி, மான், கொண்டு, அறிவார், செல்லார், உடையவனே, அறிவுடையார், அறிவிலார், சங்க, அறிவினால், அதுபோல, இல்லாரை, அருவி