பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு
கற்று ஆற்றுவாரைக் கறுப்பித்து, கல்லாதார் சொல் தாற்றுக் கொண்டு சுனைத்து எழுதல் - எற்று எனின் தானும் நடவான் முடவன், பிடிப்பூணி, யானையோடு ஆடல் உறவு. |
16 |
அறியாதவர்கள் நூல்களைக் கற்று (அவைகளிற் கூறியபடி) செயலிற் செய்வாரைக் கோபமூட்டி சொற்களைக் கொழித்துக்கொண்டு (மன எழுச்சியால் அவரோடு மாறுகொண்டு) மிக்கு எழுதல் எத்தன்மைத்தெனின் தானும் நடக்கமுடியாதவனாகிய காறகூழையன் ஊன்றுகோலை ஊன்றி யானையோடு விளையாடல் உறுதலோடு ஒக்கும்.
கருத்து: கல்லார் கற்றாரோடு வாதஞ் செய்யின் அவமானம் அடைவர்.
3. அவையறிதல்
கேட்பாரை நாடி, கிளக்கப்படும் பொருட்கண் வேட்கை அறிந்து, உரைப்பார், வித்தகர்;-வேட்கையால் வண்டு வழிபடரும் வாள் கண்ணாய்! தோற்பன கொண்டு புகாஅர், அவை. |
17 |
(காம) விருப்பினால் (கண்களைப்பெடை வண்டுகள் எனக் கருதி) ஆண் வண்டுகள் பின் செல்லாநின்ற வாள்போலுங் கண்களையுடைய பெண்ணே! அறிஞர் தாம் கூறும் பொருள்களைக் கேட்கத்தக்காரைத் தேடி தம்மால் கூறப்படும் பொருளிடத்து அவர்களுக்கு விருப்பம் இருப்பதை அறிந்து சொல்லுவார்கள் அவையின்கண்தோல்வியடைதற்குரியனவற்றைக் கொண்டு போகார்.
கருத்து: கற்றார் அவையறிந்து ஆராய்ந்து சொல்லுவர்.
ஒருவர் உரைப்ப உரைத்தால், அது கொண்டு இருவர் ஆவாரும் எதிர் மொழியற் பாலா பெரு வரை நாட! சிறிதேனும் இன்னாது, இருவர் உடன் ஆடல் நாய். |
18 |
பெரிய மலைநாட்டை உடையவனே! (ஒரே காலத்தில்) இருவரும் ஒரு நாயைக்கொண்டு வேட்டை ஆடுதல் சிறிது காலமாயினும் இனியது ஆகாது. (அதுபோல) (மாறுபடுவோர் இருவருள்) ஒருவர் இப்பொருள் இத் தன்மைத்தென்று கூற மற்றொருவரும் இத் தன்மைத்தென்று கூறினால் அப்பொருளைக்கொண்டு மாறுபடுவோர் இருவரும் (ஒரே காலத்தில்) வாதஞ்செய்தால் தகுதியுடையதாகுமா?ஆகாது.
கருத்து: வாதம் செய்வோர் ஒருவர்பின் ஒருவராகப் பேசுதல்வேண்டும்.
துன்னி இருவர் தொடங்கிய மாற்றத்தில் பின்னை உரைக்கப் படற்பாலான் - முன்னி மொழிந்தால் மொழி அறியான் கூறல், முழந்தாள் கிழிந்தானை மூக்குப் பொதிவு. |
19 |
வினவுவானும் விடைகொடுப்பானுமாகிய இருவரும் கூடிச் சொல்லத் தொடங்கிய வார்த்தையின்கண் பின்னாக விடைகூறத் தக்கவன் வினாவறியாது முற்பட்டு ஒன்றனைக் கூறினால் விடை கூறுதலறியாதவனாய் முடியும் வினாவிற்கு முன்னர் விடைகூறுதல் முந்தாள் கிழிந்துபுண்பட்டவனை அஃது அறியாது மூக்கை இழைகொண்டு கட்டுவதோடுஒக்கும்.
கருத்து: வினாவறிந்து விடைகூறுதல் வேண்டும்.
கல்லாதும், கேளாதும், கற்றார் அவை நடுவண் சொல்லாடு வாரையும் அஞ்சற்பாற்று-எல் அருவி பாய் வரை நாட! பரிசு அழிந்தாரோடு தேவரும் ஆற்றல் இலர். |
20 |
விளங்கிய அருவிகள் பாயும் மலை நாடனே! பண்பு இல்லாதவர்களோடு தேவர்களும் ஒருசொல் கூறுதற்குக்கூட வலிமை யில்லாதவர்களாய் முடிவர். ஆகையால் கல்லாதும் கேளாதும் கற்றார் அவை நடுவண் சொல் ஆடுவாரையும் - நூல்களைக் கற்றாரிடம் கல்லாதும் கேளாதும் அறிஞர்களது அவையிடைச் சிலசொல் சொல்லுத லுடையாரையும் (இவரோடு வாதாடின் நாம் தோற்போம் என்றெண்ணி) அஞ்சும் தகுதியைஉடையது.
கருத்து: கற்றார்கல்லாரோடு வாதாடுதல் கூடாது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, இலக்கியங்கள், கொண்டு, இருவரும், பழமொழி, கற்றார், கல்லாதும், கேளாதும், நானூறு, இருவர், பதினெண், கீழ்க்கணக்கு, ஆகாது, விடைகூறுதல், காலத்தில், நடுவண், தொடங்கிய, கூறினால், தன்மைத்தென்று, மாறுபடுவோர், அறிந்து, எழுதல், சொல், கற்று, சங்க, தானும், யானையோடு, வண்டுகள், நூல்களைக், ஆடல், ஒருவர்