பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு
ஆஅய் வளர்ந்த அணி நெடும் பெண்ணையை, ஏஎய், இரவு எல்லாம் காத்தாலும், வாஅய்ப் படற்பாலார்கண்ணே, படுமே பொறியும்- தொடற்பாலார்கண்ணே தொடும். |
231 |
தனக்கு ஆகி வளர்ந்த அழகிய நீண்ட பனையை பொருந்தி இரவு முழுதும் காவல் செய்திருப்பினும் வாயின்கண் பொருந்துதற் குரியாரிடத்தே கீழே விழுந்து அவர்க்குப் பயன்படும். (அதுபோல) செல்வமும் தீண்டுதற்குரியாரிடத்தே சென்று தொடாநிற்கும்.
கருத்து: தனக்கு ஆகாத செல்வத்தைப் பாதுகாப்பினும் நில்லாது.
முன் பெரிய நல்வினை முட்டு இன்றிச் செய்யாதார், பின் பெரிய செல்வம் பெறல் ஆமோ? வைப்போடு இகலிப் பொருள் செய்ய எண்ணியக்கால், என் ஆம்?- முதல் இலார்க்கு ஊதியம் இல். |
232 |
முற்பிறப்பின்கண் மிகுந்த நன்மை பயக்கும் அறங்களை தடையில்லாது செய்யாதவர்கள் பிற்பிறப்பின் கண் மிகுந்த செல்வத்தைப் பெறக்கூடுமோ? பிறர் வைத்திருக்கின்ற செல்வத்தோடு மாறுபட்டுப் பொருளினைச் செய்வோம் என்று நினைத்தால் எங்ஙனம் முடியும் வைத்ததொரு முதற்பொருள் இல்லாதவர்களுக்கு (அதனால் வரும்)பயனில்லையாதலால்.
கருத்து: முன் செய்த நல்வினையில்லார் முயன்றாலும் பொன்னைப் பெற முடியாதாம்.
பல் நாளும் நின்ற இடத்தும், கணி வேங்கை நல் நாளே நாடி மலர்தலால்,-மன்னர் உவப்ப வழிபட்டு ஒழுகினும், செல்வம் தொகற்பால போழ்தே தொகும். |
233 |
பலநாளும் தானே நின்ற விடத்தும் கணியாகிய வேங்கை தான் பூத்தற்குரிய நல்ல நாளையே அறிந்து பூத்தலால் அரசர் மனமகிழுமாறு வேண்டியன செய்து வழிபட்டு ஒழுகினாலும் செல்வம் ஒருவர்க்குக் கூடும் பொழுதுதான் பல்லாற்றானும் வந்து சேரும்.
கருத்து: ஒருவனிடம் செல்வம், வருங்காலமறிந்தே வரும்.
குரைத்துக் கொளப்பட்டார் கோள் இழுக்குப்பட்டு, புரைத்து எழுந்து போகினும் போவர்; அரக்கு இல்லுள் பொய் அற்ற ஐவரும் போயினார்;-இல்லையே, உய்வதற்கு உய்யா இடம். |
234 |
ஆரவாரித் துரைத்தலின் அவரால் பிணித்துக் கொள்ளப்பட்டார் அவர் எண்ணம் பழுதுபட அவர் பிணிப்பினின்றும் தப்பி எழுந்து உய்ந்து செல்லினும் செல்வர். அரக்கு இல் உள் - அரக்காற் செய்யப்பட்ட மாளிகையினுள்ளே யிருந்த குற்றமற்ற பாண்டவர் ஐவரும் தீயினின்றும் தப்பி நிலவறையின் வழியே சென்றனர். (ஆதலால்) பிழைத்தற்குரிய உயிருக்கு பிழைக்க முடியாதஇடம் என்று ஒன்றும் இல்லை.
கருத்து: ஊழ்வலியுடையார் எத்தகையஇடையூறுறினும் உய்வர்.
'இது மன்னும் தீது' என்று இயைந்ததூஉம், ஆவார்க்கு அது மன்னும் நல்லதே ஆகும்;-மது மன்னும் வீ நாறு கானல் விரி திரைத் தண் சேர்ப்ப!- தீ நாள் திரு உடையார்க்கு இல். |
235 |
தேன் ஒழுகுகின்ற குவளைப்பூக்கள் மணம் வீசுகின்ற கடற்சோலையையுடைய விரிந்த அலைகளையுடைய குளிர்ந்த கடல் நாடனே! இவ்வினை இவர்க்குத் தீங்கினை நிலை நிறுத்துவதாம் என்று கருதப்பட்டுப் பொருந்தியதும் செல்வம் உடையராவார்க்கு (பொருளை ஈட்டுவார்க்கு) அவ்வினை (ஊழால்) நல்லதாகவே முடியும் (ஆதலால்) தீய நாட்கள் முன்செய்த நல்வினை உண்டாதலில்லை.
கருத்து: ஆகூழ் உடையார்க்குத் தீயனவும் நல்லனவாக முடியும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 45 | 46 | 47 | 48 | 49 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, செல்வம், கருத்து, இலக்கியங்கள், பதினெண், நானூறு, பழமொழி, கீழ்க்கணக்கு, முடியும், மன்னும், எழுந்து, வேங்கை, வழிபட்டு, அவர், ஆதலால், தப்பி, நின்ற, ஐவரும், அரக்கு, நல்வினை, இரவு, வளர்ந்த, சங்க, தனக்கு, செல்வத்தைப், மிகுந்த, பெரிய, முன், வரும்