பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு

ஆற்றும் தகைய அரசு அடைந்தார்க்கு ஆயினும், வீற்று வழி அல்லால், வேண்டினும், கைகூடா; தேற்றார் சிறியர் எனல் வேண்டா;-நோற்றார்க்குச் சோற்றுள்ளும் வீழும் கறி. |
236 |
எல்லாச் செல்வங்களையும் தரவல்ல தகுதியை உடைய அரசுகளை அடைந்தவர்களுக்கே யானாலும் நல்வினையுள்ளவழி அல்லது விரும்பி முயன்றாலும் கருதிய செல்வம் கைகூடுதல் இல்லை. (ஆதலால்) அறிவில்லாதவர்கள் அதனைப் படைத்தல் முதலிய ஆற்றல் இலராகலின் செல்வத்தாற் சிறியர் என்று கருதவேண்டா; தவம் செய்தார்க்கு சோற்றினுள்ளேயும் கறி தானே வந்து விழும்அவர் தவவலிமையால்.
கருத்து: அறிவிலாராயினும் நல்வினையுள்ளார்க்குச் செல்வம் உளதாம்.அரசர்களேயாயினும் அஃதிலார்க்குக் கருதிய கைகூடுதல்இலவாம்.
ஆகும் சமயத்தார்க்கு ஆள்வினையும் வேண்டாவாம்; போகும் பொறியார் புரிவும் பயம் இன்றே;- ஏ கல் மலை நாட!-என் செய்து, ஆங்கு என் பெறினும், ஆகாதார்க்கு ஆகுவது இல். |
237 |
உயர்ச்சியையுடைய மலை நாடனே! செல்வம் ஆக்கும் ஆகூழ்வந்தெய்துங் காலம் நெருங்கியவர்களுக்கு செய்வதொரு முயற்சியும் வேண்டுவதில்லை; போகும் பொறியார் - செல்வம் போக்கும் போகூழ் வந்தெய்துங்காலம் நெருங்கியவர்களுக்கு அவர்கள் நிலைநிறுத்தச் செய்யும் முயற்சியும் பயனில்லை; என் செய்து என் பெறினும் - எத்தகைய முயற்சியைச் செய்து எத்தகைய துணையைப் பெற்றாராயினும் செல்வம் ஆக்கும் ஆகூழ் நெருங்காதவர்க்கு ஆவதொன்றில்லை.
கருத்து: ஆகூழ் நெருங்கியார்க்கும் முயற்சி வேண்டா; போகூழ் நெருங்கியார்க்கும் முயற்சி வேண்டா; போகூழ் நெருங்காதார்க்கும் முயற்சி வேண்டா; ஆகூழ் நெருங்காதார்க்கும்முயற்சி வேண்டா.
'பண்டு உருத்துச் செய்த பழ வினை வந்து, எம்மை இன்று ஒறுக்கின்றது' என வறியார், துன்புறுக்கும் மேவலரை நோவது என்?-மின் நேர் மருங்குலாய்!- ஏவலாள் ஊரும் சுடும். |
238 |
மின்னலை யொத்த இடையை யுடையாய்! பிறர் ஊரைக் கொளுத்தும் பொருட்டு ஒருவனால் அனுப்பப்பட்ட ஏவலாளன் ஏவியவனது ஊரையும் கொளுத்திவிடுவான். (ஆதலால்) முன்பிறவிகளில் மிகுதியாகத் தாம் செய்த பழைய தீவினை இப்பிறப்பில் வந்து எம்மைத் தண்டிக்கின்றது என்று அறியாராய். துன்புறுக்கும் மேவலரை - ஏவலாளாக நின்று துன்புறச்செய்யும் பகைவரை வெறுப்பது எது கருதி?
கருத்து: பிறர் தம்மைத் துன்புறுத்துவது தாம் செய்த பழவினைப்பயனே என்றறிந்து அவரைநோவாதொழிதல் வேண்டும்.
சுடப்பட்டு உயிர் உய்ந்த சோழன் மகனும், பிடர்த்தலைப் பேரானைப் பெற்று, கடைக்கால், செயிர் அறு செங்கோல் செலீஇயினான்;-இல்லை, உயிர் உடையார் எய்தா வினை. |
239 |
பகைவர் மூட்டிய தீயால் கொளுத்தப்பட்டு அதனின்றும் உயிர் பிழைத்துச் சென்ற பராந்தக சோழனின் மகனாகிய காரிகாற்சோழனும் இரும்பிடர்த் தலையார் என்னும் பெயரையுடைய தன் மாமனைத் துணையாகப் பெற்று பிற்காலத்தில் குற்றமற்ற செங்கோலைச் செலுத்தினான்; (ஆதலால்) உயிருடையார் அடையமுடியாததொரு நல்வினைப் பயன் இல்லை.
கருத்து: தீமையே அடைவார்,என்றாயினும் நன்மையையும் அடைவர்.
நனி அஞ்சத்தக்கவை வந்தக்கால், தங்கண் துனி அஞ்சார் செய்வது உணர்வார்;-பனி அஞ்சி, வேழம் பிடி தழூஉம், வேய் சூழ், மலை நாட!- ஊழ் அம்பு வீழா, நிலத்து. |
240 |
பனியான் வரும் குளிருக்கஞ்சி ஆண்யானை பெண்யானையைத் தழுவுகின்ற மூங்கில்கள் நெருங்கியிருக்கின்ற மலை நாடனே! ஊழ் அம்பு நிலத்து வீழா - ஊழாற் செலுத்தப்படும் அம்புகள் குறிக்கிலக்கானவனைச் சென்று சேர்தலன்றி நிலத்தின் மேல் வீழ்தல் இல மிகவும் அஞ்சத்தக்க அவ்வம்புகள் தம்மீது வந்தால் செய்கின்றதன் நன்மை தீமையை அறிவார் அவற்றால் தமக்கு உண்டாகும் துன்பத்திற்கு அஞ்சுதல்இலர்.
கருத்து: நன்மை தீமையறிவார் ஊழான் வருந்துன்பத்திற்கு அஞ்சுதல் இலர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 46 | 47 | 48 | 49 | 50 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, செல்வம், வேண்டா, கருத்து, இலக்கியங்கள், கீழ்க்கணக்கு, செய்த, செய்து, போகூழ், பழமொழி, வந்து, உயிர், ஆதலால், ஆகூழ், பதினெண், முயற்சி, நானூறு, இல்லை, வினை, துன்புறுக்கும், மேவலரை, அம்பு, நிலத்து, நன்மை, வீழா, பெற்று, தாம், பிறர், ஆக்கும், போகும், கருதிய, சிறியர், சங்க, பொறியார், பெறினும், எத்தகைய, முயற்சியும், நெருங்கியவர்களுக்கு, நாடனே, நெருங்கியார்க்கும்