பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு

வழங்கார், வலி இலார், வாய்ச் சொல்லும் பொல்லார், உழந்து ஒருவர்க்கு உற்றால் உதவலும் இல்லார், இழந்தது இல் செல்வம் பெறுதல்,-அதுவே பழஞ் செய் போர்பு ஈன்று விடல். |
221 |
(உணவிற்கு ஒன்று மின்மையால் பசியால் வருந்தி இரந்தார்க்கு) அவர்க்கு வேண்டிய உணவினைக் கொடாராய் கொடுக்கும் ஆற்றல் இலராதலின் சொல்லும் சொற்களாலும் தீயவர்களாய் வருந்தியாகிலும் ஒருவர்க்கு ஓரிடர் வந்துற்ற ஞான்றை உதவிசெய்து அதனை நீக்குதலும் செய்யாதவராகிய இத்தன்மையர். இறந்தது இல் செல்வம் பெறுதலும் - கெடுதலில்லாத செல்வத்தைப் பெற்றிருத்தலும் நெடுநாட்களாக எரு முதலிய உரம் பெற்றுவந்த வயல் உரம் பெறாத இப்பொழுது போர் இடுமாறு கதிர்கள் விடுதலை யொக்கும்.
கருத்து: ஈதல், இனிய, கூறுதல், உதவி செய்தல் முதலியன இல்லாதவர்கள் செல்வம் பெற்றிருத்தல், முன்செய்த நல்வினையாலே யாம்.
ஒற்கப்பட்டு ஆற்றார் உணர உரைத்தபின், நற் செய்கை செய்வார்போல் காட்டி, நசை அழுங்க, வற்கென்ற செய்கை அதுவால்-அவ் வாயுறைப் புல் கழுத்தில் யாத்துவிடல். |
222 |
வறுமையா லொறுக்கப்பட்டு அதற்கு ஆற்றாதவர்களாய் (ஒருவரையடைந்து) அவர் மனதிற் பதியுமாறு உரைத்தவிடத்து அவர்க்கு நல்ல செய்கையைச் செய்வார் போன்று தோற்றி அதனான் அவர்கொண்ட விருப்பம் கெடுமாறு வலிய செய்கையைச் செய்தொழுகுமது வாயிடத்தில் இடுவதாகக் காட்டிய அந்தப் புற்களை பசுவின் கழுத்தில் கட்டிவிடுவதனோ டொக்கும்.
கருத்து: தம்பால் ஒன்று இரந்தாரைக் கொடுப்பதாகச் சொல்லி நீட்டித்து அலையவைத்தல் அடாத செய்கையாம்.
அடையப் பயின்றவர் சொல் ஆற்றுவராக் கேட்டால், உடையது ஒன்று இல்லாமை ஒட்டின்,-படை வென்று அடைய அமர்த்த கண் ஆயிழாய்!-அஃதால், இடையன் எறிந்த மரம். |
223 |
வேலினது தன்மையைப் பெற்று. முகம்முழுதும். அமர்த்த கண் பைந்தொடி - நிறைந்திருக்கின்ற கண்களையும் பசிய தொடியையும் உடையாய் மிகவும் நெருங்கிப் பழகியவர்கள் தமக்கொன்று வேண்டியதாகக் கூறுஞ் சொற்களைக் கேட்டால் தன்னிடத்திலில்லாத அப்பொருளை உடையது ஒன்று தன்னிடத்துள்ளது ஒன்றாகவும் அதனைச் செய்வாராகவும் உறுதியாகக் கூறினால் அங்ஙனம் கூறுதல் இடையனால் வெட்டப்பட்ட மரத்தினை யொக்கும்.
கருத்து: முடியாத செயலை முடியும் என்று கூறற்க.
மரம்போல் வலிய மனத்தாரை முன் நின்று இரந்தார் பெறுவது ஒன்று இல்லை;-குரங்கு ஊசல் வள்ளியின் ஆடும் மலை நாட!-அஃது அன்றோ, பள்ளியுள் ஐயம் புகல். |
224 |
குரங்கு வள்ளியில் ஊசல் ஆடும் மலைநாட குரங்குகள் வள்ளிக்கொடியின்கணிருந்து ஊசலாடுகின்ற மலைநாட்டைஉடையவனே! மரத்தைப்போல வலிய கன்னெஞ் சுடையாரை. அவர்முன்பு நின்று இரப்பவர் பெறக்கடவதொரு பொருளுமில்லை; அஃது - அவர் முன்பு நின்று இரத்தல் சமணப் பள்ளியுள் இரக்கப்புகுதலை யொக்கும்.
கருத்து: இரக்க முடையாரிடத்துஇரப்பாயாக.
இசைவ கொடுப்பதூஉம், 'இல்' என்பதூஉம், வசை அன்று; வையத்து இயற்கை; அஃது அன்றி, பசை கொண்டவன் நிற்க, பாத்து உண்ணான் ஆயின், நசை கொன்றான் செல் உலகம் இல். |
225 |
தன்னால் கொடுக்கக் கூடியவற்றைக் கொடுத்தலும் கூடாதவற்றை இல்லை யென்று கூறுதலும் ஒருவனுக்குக் குற்றமாகாது அவை பெரியோர்களது செயல்களாம் அவ்வியற்கையின்றி கொடுப்பான் என்று மனதின்கண் விரும்பி நின்றான் நிற்க தன்னிடத்துள்ளதைப் பகுத்துக் கொடுத்து உண்ணாதவனானால் நிற்பானது விருப்பத்தைக் கெடுத்தானாதலால் செல்லுகின்ற மறுமைஉலகத்தின்கண் இன்பம் அடைதல் இல்லை.
கருத்து: தன்னிடத்துள்ளதைக்கொடாதவனுக்கு மறுமையுலகத்தின்கண் இன்பம் இல்லை.உலகம் :ஆகுபெயர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 43 | 44 | 45 | 46 | 47 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, ஒன்று, கருத்து, இலக்கியங்கள், இல்லை, அஃது, யொக்கும், நானூறு, பழமொழி, நின்று, பதினெண், கீழ்க்கணக்கு, செல்வம், வலிய, ஊசல், குரங்கு, பள்ளியுள், இன்பம், உலகம், நிற்க, அமர்த்த, ஆடும், கழுத்தில், அவர்க்கு, ஒருவர்க்கு, சொல்லும், சங்க, உரம், கூறுதல், கேட்டால், செய்கையைச், அவர், செய்கை, உடையது