பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு

25. அரசியல்பு
'எம் கண் இனையர்' எனக் கருதின், ஏதமால்; தங்கண்ணேரானும் தகவு இல கண்டக்கால், வன்கண்ணன் ஆகி ஒறுக்க; ஒறுக்கல்லா மென்கண்ணன் ஆளான், அரசு. |
241 |
அரசன் நீதி கூறுமிடத்து எமக்கு இவர் (நட்டார் பகைவர்) இத்தன்மையை அது செங்கோன்மைக்குக் குற்றமாம் தமது கண்போல்வாராயினும் தகுதியற்ற செயல்களை அவர்களிடத்துக் கண்டபொழுது வன் கண்மையை உடையவனாகி அவர்களைத் தண்டிக்க தண்டஞ் செய்யாத கண்ணோட்டமுடையான் அரசினை ஆளும் தகுதியில்லாதவனே ஆவான்.
கருத்து: அரசன் நடுநிலையிலிருந்துநீதி கூறவேண்டும்.
சால மறைத்து ஓம்பிச் சான்றவர் கைகரப்ப, காலை கழிந்ததன் பின்றையும், மேலைக் கறவைக் கன்று ஊர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான்;- முறைமைக்கு மூப்பு இளமை இல். |
242 |
அறிவு நிரம்பிய அமைச்சர்கள். மிகுதியானவைகளைக் கூறி இது பெருங்குற்றமல்லவென்று மறைத்து அன்றிரவு கழிந்த பின்னர் முன்னாள் பசுவின் கன்றின்மேல் தனது தேரைச் செலுத்தினவனை அவன் தந்தையும் அவன் மேல் தனது தேரைச் செலுத்தினான்; (ஆகையால்) செங்கோன்மைக்கு முதுமையுடையோனுக்கு ஒரு நீதி இளமையுடையானுக்கு ஒருநீதி என்பதில்லை.
கருத்து: முதுமை இளமை கருதி நீதி கூறலாகாதென்பதாம்.
முறை தெரிந்து, செல்வர்க்கும் நல்கூர்ந்தவர்க்கும், இறை, திரியான் நேர் ஒத்தல் வேண்டும்; முறை திரிந்து நேர் ஒழுகான் ஆயின், அதுவாம்,-ஒரு பக்கம் நீர் ஒழுக, பால் ஒழுகுமாறு. |
243 |
கூறும் முறைமையை யறிந்து செல்வத்தை உடையவர்க்கும் வறுமையை உடையவர்க்கும் அரசன் செல்வம்வறுமை நோக்கி நடுநிலையினின்றும் திரியாதவனாய் இருவர் மனமும் ஒப்புமாறு நீதி கூற வேண்டும் கூறும் முறையினின்றும் வழுவி நடுவுநிலையாக ஒழுகா தொழிவானாயின் அங்ஙனம் ஒழுகாத தன்மை தாயின் தனங்களை உண்ணுங் குழந்தைகளுக்கு ஒரு பக்கம் நீரொழுகி; பால் ஒழுகும் ஆறு - மற்றொரு பக்கம் பாலும் ஒழுகு மாற்றைஒக்கும்.
கருத்து: அரசன் செல்வம், நல்குரவு நோக்காதுமுறையறிந்து நீதி கூறுதல் வேண்டும்.
பொருத்தம் அழியாத பூந் தண் தார் மன்னர் அருத்தம், அடி நிழலாரை வருத்தாது, கொண்டாரும் போலாதே, கோடல்! அது அன்றோ, வண்டு தாது உண்டுவிடல். |
244 |
அரசனுக்குரிய இலக்கணங்கள் நீங்காத அழகிய குளிர்ந்த மாலையை உடைய அரசர்கள் இறைப் பொருளுக்காக தன்னடியின் கீழ் வாழும் குடிகளை (மழையின்மை முதலிய காரணங்களால் பொருளில்லாத காலத்து) வருத்துதலைச்செய்யாமலும் பொருளுள்ள காலத்து வருத்திக் கொண்டவரைப் போலவும் கொள்ளாது எளிதாகக் கொள்ளுதலுமாகிய காலமறிந்து கொள்ளுதல் வண்டுகள் (மொட்டாகிய தேனில்லாத பூக்களை மலராத காலத்து) ஊதிச் சிதையாது தேன் நிறைந்து மலர்ந்த காலத்துத்தேனை எளிதாக உண்ணுமாற்றை (ஒக்கும்).
கருத்து: அரசர்கள் குடிகளிடத்திலிருந்து வாங்கும் இறைப் பொருள்களைக் காலமறிந்து வருத்தாது வாங்குக.
பாற்பட்டு வாழ்ப எனினும், குடிகள்மேல் மேற்பட்ட கூட்டு மிக நிற்றல் வேண்டாவாம் கோல் தலையே ஆயினும் கொண்டீக! காணுங்கால், பால் தலைப் பால் ஊறல் இல். |
245 |
(அரசன்) தன் ஆணைக்குக் கட்டுப்பட்டு வாழ்கின்றவர்களேயாயினும் குடிகளிடத்து தமக்குச் சேரவேண்டிய மிகுந்த இறைப்பொருள்கள் அவர்களிடத்தில் நீண்ட நாட்கள் நிற்றலைச் செய்யவேண்டா; அரிந்த தாளின் தலையிலுள்ள நெல்லேயாயினும் கொள்ளுங்காலமறிந்து உடனே கொள்க; ஆராயுமிடத்து, (சேரக்கறக்கலாமென்று சிலநாள் விட்டுவைத்தால்) பாலுள்ள இடத்தில் (மடியில்) பின்னர்ப் பால் சுரத்தலில்லையாதலால்.
கருத்து: அரசன் இறைப்பொருளைச் சிறிது சிறிதாகக் காலமறிந்து கொள்கஎன்பதாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 47 | 48 | 49 | 50 | 51 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, அரசன், நீதி, பால், கருத்து, இலக்கியங்கள், வேண்டும், நானூறு, பழமொழி, காலமறிந்து, பக்கம், பதினெண், காலத்து, கீழ்க்கணக்கு, கூறும், இறைப், அரசர்கள், வருத்தாது, உடையவர்க்கும், தேரைச், தந்தையும், மறைத்து, சங்க, இளமை, தனது, முறை, அவன், நேர்