பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு
2. கல்லாதார்
கற்றானும், கற்றார் வாய்க் கேட்டானும், இல்லாதார் தெற்ற உணரார், பொருள்களை- எற்றேல், அறிவு இலான் மெய்த் தலைப்பாடு? பிறிது இல்லை நாவல்கீழ்ப் பெற்ற கனி. |
11 |
நூல்களைத் தாமே கற்றாயினும் கற்றவர்களிடம் கேட்டாயினும் கல்வி கேள்வி இல்லாதவர்கள் பொருள்களை - பொருள்களின் உண்மையைத் தெளிவாக அறியார்கள் கல்வி கேள்விகளின் அறிவு இல்லாதான் உண்மைப் பொருள்களை ஒருகால் அறிதல் எத்தன்மைத் தெனில் நாவல் மரத்தின் அடியில் தானே விழுந்த கனியைப் போல்வதன்றி கல்வி கேள்விகளுள் எதுவும் காரணமாக இல்லை.
கருத்து: கல்வி கேள்வி இல்லாதவர்கள் உண்மைப் பொருள்களைஅறியமாட்டார்கள்.
கல்லாதான் கண்ட கழி நுட்பம் கற்றார்முன் சொல்லுங்கால், சோர்வு படுதலால் - நல்லாய் வினா முந்துறாத உரை இல்லை; இல்லை, கனா முந்துறாத வினை. |
12 |
நற்குணம் உடைய பெண்ணே! நூல்களைக் கல்லாதவன் அறிந்த மிக்க நுண்பொருள் நூல்களைக் கற்றார் முன்பு சொல்லும்பொழுது அப்பொருள் வலியிழத்தலால் வினாவானது முற்பட்டுத் தோன்றாத விடையில்லை; கனா முந்துறாதவினை இல்லை - கனாவானது முற்பட்டு நடவாத செயலும் இல்லை. (கல்வியின்றி விளங்கும் நுண்பொருளும்இல்லை.)
கருத்து: கல்லாதான் கண்ட நுண்பொருள்விளங்குதல் இல்லை.
கல்லாதான் கண்ட கழி நுட்பம் காட்டு அரிதால் 'நல்லேம் யாம்' என்று ஒருவன் நன்கு மதித்தல் என்? சொல்லால் வணக்கி, வெகுண்டு, அடுகிற்பார்க்கும்,- சொல்லாக்கால் சொல்லுவது இல். |
13 |
நூல்களைக் கல்லாதவன் தான் நுண்மையுற அறிந்ததாக நினைக்கும் மிக்க நுண்பொருளை பிறருக்கு விளங்கும்படி எடுத்துக்காட்டுதல் இயலாது. (ஆனபின்) கல்வியும் சொல்வன்மையும் இல்லாத ஒருவன் நல்ல பொருள் விளக்கம் உடையேம் என்று தன்னைத் தானே மிகப் பாராட்டுதல் எக்காரணம் பற்றி? தமது சொற்களால் தவத்திற்குப் பகையாயினாரைப் பணியச்செய்து, பணியாராயின் சினந்து கொல்லுகின்ற முனிவர்களுக்கும் தாங் கருதியதை எடுத்துச்சொல்ல முடியாத விடத்து தவத்திற்குச் சொல்லப்பட்ட ஆற்றல்கள் இலவாம்.
கருத்து: கற்றார்க்குச் சொல்வன்மை இன்றியமையாது வேண்டப்படும் பொருள்.
கல்வியான் ஆய கழி நுட்பம், கல்லார் முன் சொல்லிய நல்லவும், தீய ஆம்,-எல்லாம் இவர் வரை நாட!-தமரை இல்லார்க்கு நகரமும் காடு போன்றாங்கு. |
14 |
எல்லாப் பொருள்களாலும் விரும்பப்படும் மலைநாட்டை உடையவனே! (முன்னர்ப் பெற்றிருந்து பின்னர்) உறவினரை இல்லார்க்கு நகரமும் காட்டை ஒத்துத் துன்பம் பயத்தல்போல நூல்களைக் கற்றதனாலாய மிக்க நுண்பொருள்களுள் நூல்களைக் கல்லார் முன்பு கூறிய நல்லனவும் பொருளற்றனவாகத் தீயவாய் முடியும்.
கருத்து: கற்றார்,கல்லார் அவையின்கண் சிறந்த பொருள்களைக் கூறாதிருக்கக்கடவர்.
கல்லாதவரிடைக் கட்டுரையின் மிக்கது ஓர் பொல்லாதது இல்லை; ஒருவற்கு-நல்லாய்! இழுக்கத்தின் மிக்க இழிவு இல்லை; இல்லை, ஒழுக்கத்தின் மிக்க உயர்வு. |
15 |
நற்குணமுடைய பெண்ணே! தத்தம் நிலைக்கு ஓதப்பட்ட ஒழுக்கத்தினின்றும் வழுவுதலின் மிக்க தாழ்வு ஒருவற்கு இல்லை தத்தம் நிலைக்கு ஓதப்பட்ட ஒழுக்கத்தினை உடையராதலின் மிக்க உயர்வு ஒருவற்கு இல்லை, (ஆகையால்) கல்வியறிவு உடைய ஒருவனுக்கு நூல்களைக் கல்லாதவரிடத்து விரித்துக்கூறும்; கட்டுரையின் மிக்கதோர் பொல்லாதது இல்லை - கட்டுரையைப் பார்க்கிலும் தீமைதருஞ் செயல் பிறிதொன்றில்லை.
கருத்து: கற்றார் கட்டுரை, கல்லாதாரிடைப் பொல்லாதாகவே முடியும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, இல்லை, மிக்க, நூல்களைக், கல்வி, கருத்து, கற்றார், இலக்கியங்கள், கல்லாதான், கல்லார், கண்ட, நுட்பம், பழமொழி, ஒருவற்கு, கீழ்க்கணக்கு, பொருள்களை, பதினெண், நானூறு, நகரமும், இல்லார்க்கு, முடியும், ஓதப்பட்ட, உயர்வு, பொல்லாதது, தத்தம், நிலைக்கு, பொருள், கட்டுரையின், நல்லாய், இல்லாதவர்கள், உண்மைப், கேள்வி, அறிவு, சங்க, தானே, முந்துறாத, முன்பு, கல்லாதவன், பெண்ணே, உடைய, ஒருவன்