இன்னிலை - பதினெண் கீழ்க்கணக்கு
உண்மைமால் ஈர்த்து இருள்கடிந்து சார்ஐயம் புண்விலங்கச் சார்பொருளைப் போற்றினோர் - நுண்ணுணர்வான் அண்ணா நிலைப்படுவர் ஆற்றல் விழுப்புலனை எண்பொருட்கு ஊர்இயலைச் சார்ந்து. |
41 |
மெய்யாகத் தோன்றும் மயக்கத்தைக் கொடுத்து, அஞ்ஞானத்தையும் நீக்கி, சார்ந்த ஐயமும் துன்பமும் விலக, சார்தற்குரிய மெய்ப் பொருளை வணங்கியவர்கள், நுட்பமான அறிவினால் வலிய சிறந்த அறிவையும், (ஒருவராலும்) அணுகமுடியாத நிலை (ஆகிய முத்தி) யையடைவர்.
கருத்து : மயக்கத்தையும், அஞ்ஞானத்தையும் நீக்கிப் பரம் பொருளை வணங்கியவர் கூரிய அறிவால் நல்வழி சார்ந்து முத்தியடைவர்.
மாசகல வீறும் ஒளியன்ன நோன்புடையோர் மூசா இயற்கை நிலன்உணர்வார் - ஆசகற்றி இன்னல் இனிவாயாக் கொள்வார் பிறப்பிறப்பில் துன்னார் அடையும் நிலன். |
42 |
களங்கமற்றுப்பெருகும் ஒளிபோன்ற தவத்தினையுடையார். அழியாத இயற்கையையுடைய இடம் (ஆகிய முத்தி) அறிவார், முக்குற்றங்களையும் நீக்கித் துன்பத்தினை இனிய வழியாகக் கொள்வார், பிறப்பிலும் இறப்பிலும் அவற்றிற்குரிய இடங்களிலும் சேரமாட்டார்.
கருத்து : சிறந்த தவமுடையவர் முத்தியுலகத்தையே அறிந்து சேர்வார். துன்பத்தை இன்பத்திற்கு வழியாகக் கொள்வார். பிறப்பு இறப்பு இவற்றை நீக்குவர்.
பேராப் பெருநிலன் சேய்த்தே உடம்பொன்றா பேரா ஒருநிலனாம் நீங்காப் பெரும்பொருளை ஏரா அறிந்துய்யும் போழ்து. |
43 |
பலவகையுடம்புகளிலும் பொருந்தியும் பொருந்தாத, பெயராத ஒப்பற்ற உலகமாக, (எப்போதும்) நீங்காத பெருமையுடைய பரம்பொருளை, எழுச்சியாக வுணர்ந்து பிழைக்கும் பொழுதில், இடம் விட்டுப் பெயராத பெருநிலமாகிய முத்தியுலகம் தூரத்துள்ளதோ (அடுத்ததுதான்)
கருத்து : பரம்பொருளை யுணர்ந்து வாழ்வார்க்கு முத்தி சேர்தல் எளிது.
மெய்யுணர்வே மற்றதனைக் கொள்ள விழுக்கலனாம் பொய்யுணர்வாம் ஈண்டிய எல்லாம் ஒருங்கழியும் ஐயுணர்வான் உய்ந்துஅறம் சார்பாச் சார்பொறுக்க நையா நிலைவேண்டு வார். |
44 |
பொய்யாகிய அறிவினால் சேர்க்க வந்து சேர்ந்த பொருள்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து கெடும், அழியாத நிலையாகிய முத்தியை விரும்புவோர், ஐந்தாகிய அறிவினால் ஆராய்ந்து, துறவறத்தைச் சார்பாகக்கொண்டு, பற்றுக்களை யெல்லாம் ஒழிக்க, உண்மையறிவே அம் முத்தியுலகத்தை யடைவதற்குச் சிறந்த புணையாகும்.
கருத்து : பொய்யுணர்வினாற் சேர்த்த பொருள்களெல்லாம் தொலையும். பற்றுக்களையெல்லாம் ஒழித்துப் பின் மெய்யுணர்வு பெற்றால் முத்தியுலகம் பெறலாம்.
ஒன்றுண்டே மற்றுடலில் பற்றி வினையிறுக்கும் பொன்றா உணர்வால் விலங்கொறுக்க பைம்மறியாத் தன்பால் பெயர்க்குந்து பற்றுதலைப் பட்டோர் நன்பால் அறிந்தார் துறந்தார் வரல்உய்ந்தார் புன்பாலால் சுற்றப் படார். |
45 |
உயிர் என்பது ஒன்று உண்டு (இருக்கிறது) . (அவ்வுயிர்) உடம்பைப் பற்றி நின்று வினைகளை மேன்மேலும் கொடுக்கின்றது, கெடாத நல்லறிவினால் அப்பாசத் தளையைத் தகர்த்து விடுக; பையின் உட்புறமாகத் திருப்பிப்பார்ப்பதுபோலத் தன் பகுதியைப் பெயர்த்துப்பார்க்கும் பற்றினைக் கூடியவர்களே, நல்ல வழிகளை யறிந்தவராவார், அவரே துறவிகளாவார், பிறப்பினின்றும் நீங்கியவர், சிறிய பகுதிகளாற் சூழப்படாதவராவர்.
கருத்து : உடம்பில் உயிர் நின்று வினை செய்யச்செய்ய மேன்மேலும் பிறப்பு வளரும் என்பதையும் உடம்பின் இழிவையும் அறிந்தவர் துறவிகளாவார். அவர்கள் பிறவாது முத்தியை யடைவார்.
இன்னிலை முற்றிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இன்னிலை - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், இன்னிலை, கீழ்க்கணக்கு, பதினெண், சங்க