இன்னிலை - பதினெண் கீழ்க்கணக்கு
அம்மை இழைத்த தலைப்பட்டு அழிவாயா இம்மையும் கொண்டுறுத்தும் ஈர்ம் பெயலாம் - மும்மை உணர்ந்தால் திருவத்தர் ஓரார் உழண்டைத் தளைப்படுவர் தட்பம் தெறார். |
6 |
முற்பிறப்பிற் செய்த வினைகள் (அப்பிறப்பிலேயே செய்தவனை) சென்றடைந்து (பயன்களை நல்கி) கெட்டுப்போதலைப் பொருந்தா (முற்பிறப்பிற் செய்த வினைப்பயனை இப்பிறப்பிலடைய வேண்டும். இப்பிறப்பிற் செய்யும் வினைப்பயனை இனி வரும் பிறப்பில் அடையவேண்டும், அறியாதவர் துன்பத்தின் மயங்கி நிற்பார்; பாசங்களை யறுக்கமாட்டார்.
கருத்து : மறுபிறவியுண்டு; நல்வினை தீவினைப்பயன் நம்மை வந்து சேரும் என்று முக்காலங்களையும் அறியும் சான்றோரே பிறவியை நீக்கி முத்தியடைவர்.
தாம்ஈட்டு அருவினைகள் தண்டா உடம்பு ஒன்ற நாம்ஈட்டு ஒறுக்கொணா ஞாங்கர்அடித் தீம்பால் பிதுக்கப் பெயல்போல் பிறப்பறுப்புப் போகா கதுப்போடு இறுத்தல் கடன். |
7 |
தாமே புரிந்து சேர்த்த அருமையான நல்வினை தீவினைகள் செய்தவர்களை விட்டு நீங்கமாட்டா. உடம்புடன் பொருந்தியிருக்க நம்மால் வினைகளை மீண்டும் நீக்க முடியா; உள்ளிடத்திலுள்ள இனிய பாலானது பிதுக்கப் பிதுக்க வெளி வருவதுபோல, பிறப்பு இறப்பு போகா பிறவியும் சாவும் அடுத்தடுத்து வரும்; மூட்டொடு அப்பிறவியைக் கெடுப்பதுவே மக்கள் கடமையாகும்.
கருத்து : அவரவர் செய்தவினைகள் அவரவரை விட்டு நீங்கா. செய்தவர்களாலும் திரும்பவும் அவற்றை நீக்கமுடியா. வினையுள்ளவரையும் பிறவியும் ஒழியாது. ஆதலால் வினையைக் கெடுத்துப் பிறவியை நீக்குவதே மக்கள் கடமையாம்.
தூயசொல் லாட்டும் துணிவ றியும் துன்பங்கள் தோயக் கலங்காத் துணைவலியும் - பூயல் படுக்குந் திருவத்த னாரே பறிப்பர் அடுக்கு அடிச்சேரா வாறு. |
8 |
தூய்மையான சொற்களைப் பேசுவதும்; (அறிஞர் உண்டென்று ஆய்ந்து) துணிந்தபொருளை யறிவதும், கவலைகள் வந்து பொருந்தியபோது மனங் கலங்காத வளவு வலிமை பெற்றிருப்பதும், (ஆகிய இவற்றை) பொருந்தச் சேர்க்கும் செல்வத்தினையுடையவரே, அடுக்கி வருகின்ற பிறவியிற் சேராதவாறு அதனைக்களைவர்.
கருத்து : தூயசொற் பேசுதலும், செம்பொருட்டுணிவும், துன்பத்திற்குக் கலங்காத மனவலிமையும் உடையவன் பிறவியை நீக்குவான் என்பது.
கடல் முகந்து தீம்பெயலை ஊழ்க்கும் எழிலி மடனுடையார் கோதகற்றி மாண்புறுத்தல் ஏமம் படைத்தாக்கல் பண்பறிந்தோர் சால்பு. |
9 |
மேகமானது, கடலினுள்ள (உப்பு நீரை) முகந்து (நன்னீராக்கி) இனிய மழையாகப் பெய்யும் (அதுபோல) நற்பண்புகளை அறிந்தவரது செயலானது, அறியாமை யுடையவரது குற்றங்களைப் போக்கி நற்குணங்களைப் பொருந்துவித்தலும், (அவர்கட்கு) காவலாக வேண்டியவற்றை உண்டாக்கிப் பெருக்குவதும் ஆம்.
கருத்து : மேகம் கடல் நீரையுண்டு மழை பொழிந்து உலகத்தாரைக் காப்பது போலச் சான்றோர்களும் மக்களிடத்துள்ள அறியாமையை யகற்றி அவரைக்காப்பது கடமையாகும்.
இடிப்பதுஎன்று எண்ணி இறைவானைக் காயார் முடிப்பர் உயிர்எனினும் முன்னார் - கடிப்பக் கன்றமர்ந்து தீம்பால் கலுழுமே நீள் மோத்தை ஒன்ற உணராதார் ஊங்கு. |
10 |
இடிவிழச் செய்கின்றது என்று கருதிச் சிறிதும் மேகத்தை வெறுக்க மாட்டார்; தம் உயிரைப் போக்குவார் (இவர்) என்று தெரிந்தாலும், (அத்தகைய கொடியோர் உயிரை நாம் முதலிற் போக்குவது நலம் என்று (பெரியோர்) கருதமாட்டார். தனது கன்று விரும்பி மடியைக் கடித்தாலும் (தாய்ப்பசு) இனிய பாலினைச் சொரியும், பொருந்த வாழ்வதனை, யறியாத மக்களைப் பார்க்கினும் நீண்ட ஆட்டுக் கடாக்கள் (நல்லனவாம்.)
கருத்து : உதவி செய்பவரிடத்துக் குற்றம் இருப்பினும் பொறுக்கவேண்டும். தமககுத் தீங்கு செய்யினும் அவர்க்குத் தீங்கு செய்ய நினைக்கலாகாது. கூடிவாழ வேண்டும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இன்னிலை - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், இன்னிலை, கீழ்க்கணக்கு, பதினெண், தீம்பால், சங்க, ஒன்ற