ஆச்சாரக் கோவை - பதினெண் கீழ்க்கணக்கு
வீட்டைப் பேணும்முறைமை
(பஃறொடை வெண்பா)
காட்டுக் களைந்து கலம் கழீஇ, இல்லத்தை ஆப்பி நீர் எங்கும் தெளித்து, சிறுகாலை, நீர்ச் சால், கரகம், நிறைய மலர் அணிந்து, இல்லம் பொலிய, அடுப்பினுள் தீப் பெய்க- நல்லது உறல் வேண்டுவார்! |
46 |
சிறு காலையே துயிலெழுந்து, இல்லத்துள்ள துராலைக் களைந்து, கருங்கலங்களைக் கழுவி, தம் மனை ஆப்பி நீராலே எங்குந் தெளித்து, நீர்ச்சாலையும் கரகத்தையும் நிறைய மலரணிந்து, இல்லத்துப் பொலியும்படி அடுப்பினுள் தீ யுண்டாக்குக; நல்ல செல்வத்தை யுறல் வேண்டுவோர்.
கருத்துரை: நல்ல செல்வத்தை யடைய வேண்டுவோர் வைகறையில் எழுந்து வீட்டை விளக்கிக் கலங்களைக் கழுவி வீடு முழுவதும் சாணநீர் தெளித்து, நீர்ச்சால், கரகங்களை மலரணிந்து, பின்பு அடுப்பினுள் தீ மூட்டுதல் வேண்டும்.
நூல் ஓதுதற்கு ஆகாத காலம்
(இன்னிசை வெண்பா)
அட்டமியும், ஏனை உவாவும், பதினான்கும், அப் பூமி காப்பார்க்கு உறுகண்ணும், மிக்க நிலத் துளக்கு, விண் அதிர்ப்பு, வாலாமை, - பார்ப்பார் இலங்கு நூல் ஓதாத நாள். |
47 |
அட்டமி நாளும் உவாநாளும், பதினான்காநாளும், தாமுறையும் பூமி காக்கும் அரசர்க்கு உறுகண்ணுள்ள நாளும், தமக்குத் தூய்மை போதாத நாளும் என இந்நாட்கள் பார்ப்பார் வேதமோதாத நாட்கள்.
கருத்துரை: அட்டமி அமாவாசை பௌர்ணமி சதுர்த்தசி அரசர்க் குறுகண்வேளை பூகம்பம் இடிமுழக்கம் தூய்மையின்மை என்னு மிவை வேதமோதலாகாக நாட்கள்.
அறம் செய்தற்கும் விருந்து அளித்தற்கும் உரிய நாட்கள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கலியாணம், தேவர், பிதிர் விழா, வேள்வி, என்று ஐவகை நாளும், இகழாது, அறம் செய்க! பெய்க, விருந்திற்கும் கூழ்! |
48 |
தான் செய்யும் கலியாண நாளின்கண்ணும், தேவர்க்குரிய சிறப்புநாளின்கண்ணும், பிதிர்கட்குச் சிறப்புச்செய்யும் நாளின்கண்ணும், விழாநாளின்கண்ணும் யாகம் செய்யும் நாளின்கண்ணும் இகழாதே கொடையறஞ் செய்க; விருந்தினர்க்குஞ் சோறிடுக.
கருத்துரை: கலியாண நாள் முதலிய ஐவகை நாட்களிலும் தானம் செய்வதுடன் விருந்தினர்க்குஞ் சோறிடுக.
நடை உடை முதலியவற்றைத் தக்கபடி அமைத்தல்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உடை, நடை, சொற் செலவு, வைதல், இந் நான்கும் - நிலைமைக்கும், ஆண்மைக்கும், கல்விக்கும் தத்தம் குடிமைக்கும், தக்க செயல்! |
49 |
உடையும் நடையும் சொற்சோர்வும் வைதலும் என இந்நான்கும், தாம் அரசனால் சிறப்புப் பெற்றமைக்கும், தன் ஆண்மைக்கும், தம் கல்விக்கும், குடிப்பிறப்புக்கும் தக்கனவாக அமையும் செயல்களாம்.
கருத்துரை: உடை நடை முதலியவைகள் தத்தம் நிலைமை கல்வி முதலியவற்றுக்குத் தகுந்தபடி அமையும்.
கேள்வியுடையவர் செயல்
(இன்னிசை வெண்பா)
பழியார்; இழியார்; பலருள் உறங்கார்; இசையாத நேர்ந்து கரவார்; இசைவு இன்றி, இல்லாரை எள்ளி, இகந்து உரையார்; - தள்ளியும், தாங்க அருங் கேள்வியவர். |
50 |
பலர் நடுவண் இருந்து பிறரைப் பழித்துரையார், இழித்துரையார் பலர் நடுவண் உறங்கார், தமக்குச் செய்யப் பொருந்தாதவற்றைப் பிறர்க்குச் செய்கிறோமென்று உடன்பட்டுச் செய்யாதொழியார், தகுதியின்றி வறியாரை இகழ்ந்து முறைமை கடந்து உரையார், பிறரால் வெல்லுதற்கரிய கேள்வியார் தவறியும்.
கருத்துரை: கல்வி கேள்வியுடையர் பலர் நடுவிலிருந்து பழித்திழித்துப் பேசார், உறங்கார், ஒன்றைச் செய்வதாக ஒப்பிப் பின் செய்யாதிரார், ஏழைகளை யிகழ்ந்துரையார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 19 | 20 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆச்சாரக் கோவை - பதினெண் கீழ்க்கணக்கு, வெண்பா, கருத்துரை, இலக்கியங்கள், நாளும், உறங்கார், நாளின்கண்ணும், அடுப்பினுள், ஆச்சாரக், தெளித்து, நாட்கள், பதினெண், கோவை, கல்வி, கீழ்க்கணக்கு, பலர், கலியாண, செய்க, ஐவகை, விருந்தினர்க்குஞ், செய்யும், செயல், அமையும், உரையார், நடுவண், சிந்தியல், தத்தம், ஆண்மைக்கும், கல்விக்கும், சோறிடுக, பார்ப்பார், பெய்க, கழுவி, மலரணிந்து, நிறைய, ஆப்பி, சங்க, களைந்து, நல்ல, செல்வத்தை, நாள், அட்டமி, அறம், பூமி, இன்னிசை, வேண்டுவோர், நூல், இன்னிசைச்